டெங்கு காய்ச்சல் பாதிப்பு நடப்பு ஆண்டில் குறைந்துள்ளது : சென்னை மாநகராட்சி

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை டெங்கு நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் 403 பேர். இந்த ஆண்டு இதுவரை 39 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு டெங்கு நோய் உள்ளதென கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 85 பேருக்கும், செப்டம்பரில் 86 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 3 பேருக்கும் டெங்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 9, 13 ஆகிய மண்டலங்களில் தலா ஒருவரும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேரும் சென்னை மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மூலம் நோய் மேலும் பரவாமல் தடுக்க தீவிர கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு கொசு வலை பயன்படுத்த மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும், நோய்கள் பரவ ஏதுவாக உள்ள இடங்களிலும் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு பரிந்துரைத்த முறையில் (கே.ஐ.டி.) மட்டுமே நோய் குறித்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரியான பரிசோதனை இல்லாமல் பீதியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டெங்கு நோய் பற்றிய அறிகுறிகள் தென்பட்டால் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றிலும் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE