புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மனதை!

கோடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருத்தியை உடல் பரிசோதனைக்காக சோதித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய வசந்த காலத்தில் அவளைப் பரிசோதித்த மருத்துவமனையிலிருந்து வந்த குறிப்பு "படிப்பில் கெட்டிக்காரி; ஆனால் வகுப்பில் அதிகம் பேசுவதில்லை" என்று தெரிவித்தது.

"இதுதான் இப்போதும் உனக்குப் பிரச்சினையா?" என்று அவளிடமே கேட்டேன்.

"எனக்கு கூச்சம் அதிகம் - அவ்வளவுதான்" என்றாள்.

இப்போது நான் செய்ய வேண்டியது என்ன?

உளவியல் ஆலோசகரைப் பாருங்கள் என்று அந்தப் பெண்ணுடைய தாயாரிடம் கூறலாம்.

அவளுடைய கல்வியறிவைச் சோதிக்கலாம்.

வகுப்பில் உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா; உன்னை யாராவது மிரட்டுகிறார்களா என்று கேட்கலாம்.

நிறைய பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்கள்தான், இது சகஜம்தான் என்று சொல்லலாம்.

இவற்றில் எதை நான் செய்திருந்தாலும் சரிதான்.

மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களைக் கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மௌனம்காக்கின்றன பல குழந்தைகள். ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக் கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளைப் பேச விட்டுக் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும்; அதுவும் பரிவோடு.

மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மௌனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.

அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவக் கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றைப் பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர்.

பேசாமலும் தங்கள் வேலைகளை மௌனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாச்சாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.

"கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேட்டால் உடனே கையை உயர்த்தாத குழந்தைகள், வகுப்பில் ஏதும் பேசாத குழந்தைகள் ஆகியோர் சமூகத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறார் டாக்டர் மெரிகங்காஸ்.

ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையைப் போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது.

"குழந்தைகளின் மனப்பாங்குதான் அவர்களுடைய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. ஒருவருடைய சுபாவத்தை வைத்து அவர்கள் எப்படி இருப்பார்கள், எப்படிச் செயல்படுவார்கள் என்று கணிப்பது தவறு. அவர்களுடைய லட்சியம் எப்படிப்பட்டது, செயல்வேகம் எப்படிப்பட்டது, திறமை எப்படிப்பட்டது என்பதை சுபாவத்தை வைத்து ஊகித்துவிட முடியாது" என்கிறார் டாக்டர் வில்லியம் கரே. இவர் பிலடெல்பியாவில் குழந்தைகள் மருத்துவப் பிரிவு பேராசிரியராகப் பணிபுரிகிறார். "உங்கள் குழந்தையின் மனப்பாங்கைப் புரி்ந்துகொள்ளுங்கள்" என்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார்.

"மௌனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்குப் புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மௌனாக இருக்கிறது. புதிய சூழலுக்குப் பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் புதிய வகுப்புக்குப் போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருக்கும். அம்மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம்.

பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்" என்கிறார் ஆன் மேரி ஆல்பனோ. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனப் பதற்றம் தொடர்பான நோயியல் பிரிவுத் துறைத் தலைவர்.

காது கேளாமை, கரும்பலகையில் எழுதியிருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்பதால் குழந்தையிடம்தான் குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் மௌனமே, உதவிக்காக ஓங்கி ஓலிக்கும் குரல்தான் என்பதைப் புரி்ந்துகொள்ள வேண்டும்.

சாதாரணமாகக் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் என்று கூறப்பட்டாலும் அந்தக் கூச்சம் இயல்பானதுதானா அல்லது சமூகத்தைப் பார்த்து அவர்களோடு சேர முடியாமல் போனதால் ஏற்பட்டதா என்பதைப் பிரித்து அறிய வேண்டும். சரியாக அடையாளம் காணாமல் மருந்து மாத்திரைகளை வழங்குவது தவறானது என்றே உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

"புதிய வகுப்பறை, புதிய வகுப்புத் தோழர்கள், புதிய பாடத்திட்டம் என்று எல்லாமே புதிதாக இருக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மனப் பதற்றம் பெரிதாக இருக்கும். இந்தச் சூழலை ஊகித்துப் பெற்றோர்கள்தான் அவர்களை முன்கூட்டியே அதற்குத் தயார்படுத்த வேண்டும்" என்கிறார் மன்ஹாட்டனில் உள்ள குழந்தைகள் மன நலக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீவன் கர்ட்ஸ். அதேசமயம், "அவசரப்பட்டோ அதிக அளவிலோ அடிக்கடியோ அவர்களை இந்த மாதிரியான சூழல்களுக்குத் தயார்படுத்திக்கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் அவர்களால் சுயமாக இத்தகைய புதிய சூழலுக்குத் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியாமல் போய்விடலாம்" என்றும் அவர் எச்சரிக்கிறார்.

"கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை இன்னொரு குழந்தையோடு சேர்த்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பழக்கலாம். அமைதியான, சாதுவான அந்தக் குழந்தைகளைப் பக்கத்தில் அமர்த்தி சாதுவான குழந்தைக்கு ஆசிரியர்கள் நம்பிக்கை ஊட்டலாம்" என்கிறார் கர்ட்ஸ்.

"இதில் செய்யக் கூடாதது எதுவென்றால், கூச்சப்படாதே, அமைதியாக இருக்காதே என்று சதா அறிவுரை கூறுவதுதான்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மெரிகங்காஸ். "கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் போக்கை மாற்ற முயற்சிப்பதைவிட அதைப் புரிந்துகொண்டு உலகில் வாழ்வதற்கேற்ற வழிமுறைகளைச் சொல்லித்தருவதுதான் நல்லது" என்று நம்பிக்கை தருகிறார் பிரகாசிக்கும் கண்களோடு!

(c) தி நியுயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்