மெடுலா ஆப்லங்கேட்டாவுக்கு என்னாச்சு?

By மருத்துவர் ஒய்.அருள்பிரகாஷ்

‘என்னாச்சு", "கீழே விழுந்துட்டனா, மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டிருக்கும்" இந்த இரண்டு வசனங்கள் மூலமாகவே கதையை நகர்த்தி, வெற்றியும் பெற்ற படம் 2012-ல் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. உண்மையிலேயே இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா? அந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதெல்லாம் உண்மை தானா?

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த அந்தப் படத்தில், கதைப்படி கிரிக்கெட் விளையாடும்போது நாயகனின் தலையின் பின்பகுதியில் அடிபட்டு ஞாபக மறதி ஏற்படுகிறது. ‘மெடுலா ஆப்லங்கேட்டா’வில் (medulla oblongata) அடிபட்டதால்தான் ஞாபகம் தப்பிப்போய்விட்டதாக, அவரே விளக்கமும் அளிப்பார்.

இந்த அம்சம் படத்துக்குச் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. ஆனால், இந்தச் சித்திரிப்பு முழுமையாகச் சரியானதல்ல. தலையில் அடிபட்டால் ஞாபக மறதி ஏற்படும் என்று கூறுவது அறிவியல்பூர்வமானதுதான். ஆனால் ‘மெடுலா ஆப்லங்கேட்டா’வில் அடிபட்டால் மட்டும், இம்மாதிரியான ஞாபக மறதிப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நோயின் அம்சங்கள்

ஏதோ ஒரு விபத்து காரணமாகத் தலையில் அடிபடுவதனால் இவ்வகையான ஞாபக மறதி ஏற்படும். அந்த விபத்து நடந்த நேரத்தை மையப் புள்ளியாக வைத்துக்கொண்டால், அடிபட்ட நேரத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்துபோகும். அதாவது விபத்து எப்படி நடந்தது என்பதேகூடச் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறந்து போகும்.

இந்தப் பாதிப்பை Retrograde amnesia எனச் சொல்வோம். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகன் தனக்கு விபத்து எப்படி நடந்ததெனச் சரியாகச் சொல்கிறார். இது தவறு. மேலும் காதலியை மறந்துவிடும் நாயகன், நண்பர்களை மட்டும் ஞாபகம் வைத்திருக்கிறார். இதுவும் முரணானது; சாத்தியமில்லாதது.

இந்தப் பிரச்சினையில் இன்னொரு வகை உண்டு. சிலருக்கு விபத்து நடந்த நேரத்துக்குப் பின்னால் நடந்த சம்பவங்கள் மறந்துபோய்விடும். இதை Anterograde amnesia எனச் சொல்கிறோம். ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவிக்கு இம்மாதிரியான பிரச்சினைதான் ஏற்படும். விபத்துக்குப் பிறகு நடந்த சம்பவங்களை அவர் மறந்துவிடுவார். படத்திலும் அதைச் சரியாகக் காட்சிப்படுத்தி யிருப்பார்கள்.

சிக்கலான நோயாளி

சில ஆண்டுகளுக்கு முன்னால் இதேபோல் Retrograde amnesia பாதிக்கப்பட்ட ஒருவரைச் சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வந்தனர். அவருடைய பிரச்சினை வித்தியாசமானது. அது கோர்ட்டுக்கெல்லாம் போயும் தீர்க்க முடியாத குடும்பப் பிரச்சினையாகிவிட்டது.

குடும்பப் பிரச்சினை காரணமாகத் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்ள அவர் முயன்றிருக்கிறார். ஆனால், அருகில் இருந்தவர்கள் ஓட்டைப் பிரித்து, கதவை உடைத்துக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றிவிட்டார்கள்.

ஆனால், அவரைக் காப்பாற்றும்போது ஏற்பட்ட சிறிய விபத்தில் அவருக்குத் தலையில் அடிபட்டுவிட்டது. அடிபட்ட பிறகு அதற்கு முன்பு நடந்த எல்லா விஷயங்களும் அவருக்கு மறந்துவிட்டன. தான் தற்கொலை செய்யப் போனதையும்கூட அவர் மறந்துவிட்டார். தன்னை யாரோ வலுக்கட்டாயமாகத் தூக்கில் ஏற்றிக் கொல்லப் பார்த்ததாகச் சொல்லி, போலீஸில் புகாரும் கொடுத்துவிட்டார்.

என்ன காரணம்?

பெரும்பாலும் இம்மாதிரியான குறைபாடு, விபத்தில் அடிபடுவதால்தான் வருகிறது. தலையில் ஏற்படும் ரத்தக் கட்டாலும், மூளைக் கட்டியாலும் ஞாபக மறதி ஏற்படும். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் வரலாம். வழக்கமாக, திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல அதிர்ச்சியான செய்திகளைக் கேட்பதால் இது ஏற்படுவதில்லை.

குணப்படுத்துதல்

படத்தில் காண்பிப்பதுபோல வெறும் தூக்க மாத்திரைகளில், இந்த நோய் சரியாகும் எனச் சொல்ல முடியாது. சிலருக்குக் கூடுதல் சிகிச்சை தேவைப்படும். ஏனென்றால், இது மனநலப் பிரச்சினை மட்டுமல்ல. நரம்பியல் பிரச்சினையும்கூட. அதனால் எந்த மாதிரியான காரணத்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் சிகிச்சை வழங்க முடியும். ஆனால், இந்தப் பாதிப்பு குணப்படுத்தக்கூடியது என்பதில் சந்தேகம் தேவையில்லை.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தைப் போலச் சமீபகாலமாக மனநலம் தொடர்பான கதாபாத்திரங்களை மையமாக வைத்து நிறைய சினிமாக்கள் வந்துவிட்டன, வந்துகொண்டு இருக்கின்றன. இது போன்ற பிரச்சினைகள் இருப்பதை இந்தப் படங்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது ஆரோக்கியமான விஷயம்தான்.

ஆனால், பல படங்கள் மனநலப் பிரச்சினைகளைத் தங்கள் வசதிக்கு ஏற்றதுபோலத் திரித்துச் சொல்கின்றன. அது மட்டுமல்லாமல் மனநலம் குறித்துத் தவறான பிம்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றன. அதனால், இந்தப் படங்களை அறிவியல்பூர்வமாக அலச வேண்டியிருக்கிறது. தொடர்ந்து சில படங்களைப் பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்