மனநோய்: இனியாவது விடுதலை கிடைக்குமா?

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

மனநலப் பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவதையும் அதற்காக சிகிச்சை பெறுவதையும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளாத நாடு நம்முடையது. மனநல மருத்துவத்தை ஒரு தொழிலாகவும் படிப்பாகவும் தேர்ந்தெடுப்பதற்கே இந்தியச் சமூகத்தில் நிறைய தயக்கங்கள் உள்ளன. இதை நிரூபிக்கத் தனிப் புள்ளிவிவரங்கள் தேவையில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஆறாயிரம் மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்ற தகவலே இதைத் தெளிவுபடுத்தும். தமிழகத்தில் 650 பேர் தான் பதிவுசெய்த மனநல மருத்துவர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கும் மனநல மருத்துவ மசோதா, மனநல பாதிப்பு கொண்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளது. முற்போக்கான பல அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த மசோதா, அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள், நிதி வசதிகள் பற்றித் தெளிவாக வரையறுக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

புதிய வழிகாட்டுதல்கள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நிறைய வழிகாட்டுதல்கள் இந்த மசோதாவில் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவு செய்வது, அவருக்கு ஒரு பிரதிநிதியை நியமிப்பது, உள்நோயாளிக்கு உதவியாக ஒருவரை அனுமதிப்பது போன்ற புதிய நடைமுறைகள் அவசியம் என்று வழிகாட்டுதல்கள் உள்ளன.

அதேவேளையில் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவம் ஆகியவை குறித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் சுயமாக முடிவெடுக்கலாம் என்றும் இந்த மசோதா கூறுகிறது. இந்திய மனநல சிகிச்சை நடைமுறைகள், உள் கட்டுமான வசதிகளைப் பொறுத்தவரை இந்த அம்சம் மருத்துவர்களுக்குத் தேவையற்ற சிக்கல்களையும் மனத்தடைகளையும் உருவாக்கும் என்கிறார் மனநல மருத்துவர் டி.வி. அசோகன்.

குடும்பமே ஆதரவு

“இந்தியா முழுவதும் 400 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்துச் சிகிச்சை கொடுக்கும் வசதி உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் 40 படுக்கைகள் மனநல சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை ஆலோசனை, சிகிச்சைக்குப் பெரிய மனத்தடை இல்லாமல்தான் மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகள் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பது, அவர்களே சிகிச்சையை முடிவு செய்வது போன்ற நடைமுறைகள் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தேவையில்லாத காத்திருப்பையும் நெருக்கடியையும் உருவாக்கலாம்.

உளச்சிதைவு போன்ற தீவிர நோய்களுக்கான சிகிச்சையைப் பாதிக்கப்பட்டவர் முடிவுக்கே விடுவது என்பது ஆபத்தானதும்கூட. தனியார் மனநல மருத்துவமனைகளுக்கு வேண்டுமானால் இவற்றை நடைமுறைப்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்த வரை குடும்ப உறுப் பினர்கள்தான் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆதரவாக இருக்கும் சூழ்நிலை உள்ளது.

சிக்கல்கள் வரலாம்

தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட மனநல மருத்துவத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார மையங்கள்வரை வாரத்துக்கு ஒரு முறை நோயாளிகளைத் தேடி மனநல மருத்துவர்கள் செல்லும் நிலை உள்ளது. ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்சினைகள், பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் என மனநலப் பிரச்சினைகள் முழுமையான மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே தமிழக அரசு மருத்துவமனைகளில் இதுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் புதிய மனநல மசோதாவில் கொடுக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் இயல்பான சூழ்நிலையைச் சிக்கலுக்கு உள்ளாக்கும்.

அதேநேரத்தில் குடும்பத்தினர் அல்லாத நியமனப் பிரதிநிதிகள் வரும்போது தொண்டு நிறுவனங்கள் இடையே புகுவதற்கும் வாய்ப்புகள் உண்டு,” என்று விமர்சனம் செய்கிறார் டி.வி. அசோகன்.

மருத்துவர்கள் குறைவு

“மதுப் பழக்கத்திலிருந்து மீள முடியாத நிலையில், குடும்பப் பிரச்சினைகள் தாளாமல், தற்கொலை முயற்சி செய்தவர்கள் என ஒவ்வொரு வாரமும் ஆறேழு பேர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டுமே வருகின்றனர். ஆனால், நோயைக் கண்டுபிடிப்பதற்கும் உளவியல் ஆலோசனை சிகிச்சை வழங்குவதற்குமான மருத்துவ உளவியலாளர்கள் தமிழகம் முழுக்க 11 பேர்தான் இருக்கிறோம்,” என்கிறார் மனநல மருத்துவர் ஷபி.

மனநல சிகிச்சை, மறுவாழ்வு, மனநலம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும் உள்கட்டுமான வசதிகளை விரிவுபடுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எப்படிச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளப் போகின்றன என்பது குறித்த தகவல்கள் இம்மசோதாவில் தெளிவாக வழங்கப்படவில்லை.

மதுப்பழக்கம், பணி ரீதியான அழுத்தங்கள் சார்ந்த உளவியல் பிரச்சினைகள், ரத்த அழுத்தம் போன்றவற்றால் மனநலப் பிரச்சினைகளும் மனநலச் சிகிச்சையாளர்களின் தேவைகளும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. ஆனால் இந்தியா முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய சமீபத்திய புள்ளிவிவரங்களோ ஆய்வுகளோ மத்திய அரசிடம் இல்லை.

கறிக்கு உதவுமா?

“இந்தியாவைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களே மனநலம் பாதிக்கப்பட்ட வரைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெரும்பாலும் ஏற்கிறார்கள். அதேநேரம் குடும்பத்தினரே மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பவர்களாகவும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு இந்த மசோதா கவனம் கொடுத்திருக்கும் அதேநேரம், வறுமை, வாய்ப்பின்மை, பாகுபாடுகள் நிலவும் சமூகச் சமத்துவமின்மை காரணமாகவே மனநலப் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதற்கு எந்த முக்கியத்துவமும் தரப்பட வில்லை.

இப்பின்னணியில் மனநலப் பாதிப்பு குறித்த மருத்துவ ரீதியான பார்வையை மட்டுமே, இந்த மசோதா கொண்டிருக்கிறது. விவசாயம் பொய்த்ததால் மோசமான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு, மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை மட்டும் வழங்குவதற்கு ஒப்பானது இது,” என்று விமர்சிக்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சோஷியல் மெடிசின் அண்ட் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரின் பேராசிரியரான மோகன் ராவ்.

இந்த ஏட்டுச் சுரைக்காய் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது. ஆனால், கறிக்கு உதவாத இந்தக் காய்க்கு உயிர்ப்பைக் கொடுப்பது மட்டுமே அதிகரித்துவரும் மனநல நோயாளிகளின் மீது அரசுக்கு நிஜமாகவே அக்கறை உள்ளதா என்பதை வெளிப்படுத்தும்.

மனநலம்: கனவும் நிஜமும்

உலகளாவிய நோய்ச்சுமை ஆய்வறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் மொத்த நோய்களில் மனநோய்கள் ஆறு சதவீதப் பங்கை வகிக்கின்றன. சிகிச்சைக்கு அதிகச் செலவு, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது, சிரமங்களைத் தருவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நோய்ச்சுமை ஆய்வு நடத்தப்பட்டது. மன அழுத்தம் தற்கொலைக்கும் இதய நோய்க்கும் காரணமாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 15 வயது முதல் 29 வயது வரையிலானோர் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

# இந்தியா முழுவதும் 43 அரசு மனநல மருத்துவமனைகளில் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 செவிலியர்கள், 0.05 உளவியல் நிபுணர்களே இருக்கின்றனர்.

# உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று பெரிய மனநல மருத்துவமனைகளில் ஒன்றான பரேலி மருத்துவமனையில் 350 உள்நோயாளிகளுக்குச் சிகிச்சை தரமுடியும். வெளிநோயாளிகளாக 200 பேரைப் பார்க்க முடியும். ஆனால் இவர்கள் அத்தனை பேருக்கும் சிகிச்சையளிக்க இருப்பது ஒரே ஒரு மனநல மருத்துவர் மட்டும்தான்.

# 2017-18 நிதி நிலை அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தப் பங்கீடு மிக மிகக் குறைவு. 2013-14 ஆண்டுகளிலிருந்தே சுகாதாரத் துறைக்கான செலவினம் தொடர்ந்து குறைக்கப்பட்டுவருகிறது. ஆரோக்கியத்துக்கான மொத்த நிதிநிலை ஒதுக்கீட்டில் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே மனநலனுக்காக ஒதுக்கப்படுகிறது.

ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்