இன்றைய அரிசி உயிர்ப் பண்பில் சக்கையாகவும், உட்கூறில் வெறும் ரசாயனக் கூடாகவும் இருக்கிறது. இது எப்போது இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து அப்புறம் பார்ப்போம். அரிசியைப் பயனுள்ள வகையில் நாம் ஏற்கிறோமா என்பதை முதலில் பார்ப்போம்.
இதோ உழவர் பெருநாளாம் பொங்கல் வந்துவிட்டது. தை மாதத்தில் முற்றிய நெற்கதிர்களை அறுவடை செய்யும் முன், கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் படையலே பொங்கல். தமிழர்களின் தனிப் பண்டிகையாம் தைத் திருநாளில், புத்தரிசியைப் பொங்கும் நிலையில் இந்த முறை நாம் இல்லை. உழவர்களின் நிலை கண்டு பொங்க வேண்டிய சூழல்தான் இன்றுள்ளது.
இயந்திரத்தில் இட்டுத் தீட்டாத அரிசியை வெறுமே பொங்கினாலே போதும் நாவைச் சுழற்றத் தோன்றும் சுவை, அப்பொங்கலில் ததும்பி நிற்கும்.
இயற்கை படையல்
நெல் மணி முற்றிய வயலில் சூரியனின் வடதிசை நோக்கிய பயணத்தின் அடையாளமாக வயலின் வடகிழக்கு மூலையில் பத்திருபது கதிர்களை அறுத்து, அங்கேயே உரலில் இட்டுக் குற்றி, வயலின் வடகிழக்கு மூலையில் அடுப்பு கூட்டி, புது மண் பானையில் பாலையே உலையாக ஊற்றி, பொங்கும்போது ஊர் கூடி மகிழ்வுப் பெருக்கோடு குலவையிடும்போது மழை பெய்வது போல உலையில் அரிசியைப் பெய்வார்கள்.
கரும்புச் சாறு காய்ச்சும்போது பொங்கலில் பெய்வதற்கென்றே எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த சர்க்கரையைப் போட்டுக் கிண்டி இறக்கியதும் வயலின் ஈசான மூலையிலேயே படையலிடுவார்கள். அல்லது காவல் தெய்வமாம் அய்யனார், வயல் நடுவே மேட்டிலேயே பிதுங்கிய விழிகளுடனும், கறுகறுத்த வெற்று மேனியுடனும், கையில் உயர்த்திய அரிவாளுடனும் நிற்பார். அவரது இடுப்புக்குப் புதுத் துணியைச் சுற்றிப் படையலிட்டு ஊரே பகிர்ந்துண்ணும். இந்த அடையாளப் பொங்கலைப் படைத்து, அறுவடையை முடித்த பின்னரே பெரும் பொங்கல் கொண்டாடப் பெறும்.
இன்று சாப்பாட்டு அரிசியிலேயே ரெண்டு பிடி எடுத்துக் குக்கரில் போட்டு, மூணு விசிலா நாலு விசிலா என்று குழம்பி இறக்கி, ஏகத்துக்கும் முந்திரித் திராட்சைகளைச் செயற்கை மணமூட்டும் நெய்யில் பொரித்துக் கலந்து தயாரிக்கும் பொங்கல், லாலா கடை இனிப்பைப் போலவே இருக்கிறது. இயற்கைப் பால் மணக்கும் பொங்கலை இனி என்றைக்குச் சுவைப்போமோ எனும் ஏக்கத்தை ஒத்தி வைத்து விட்டு அரிசிக்குப் போவோம்.
அரிசி எங்கிருந்து வருகிறது?
அரிசி எதில் இருக்கிறது?. பிளாஸ்டிக் பையில் இருக்கிறது. பிளாஸ்டிக் அரிசிப் பை எங்கிருந்து வந்தது? அரிசி மண்டி அல்லது சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வந்தது. சரி, அந்த அரிசி எதிலிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு விடை சொன்னால் இரண்டு மதிப்பெண்ணா ஐந்து மதிப்பெண்ணா என்று திருப்பிக் கேட்கும் நிலையில்தான் இருக்கிறது இன்றைய தலைமுறை. அதற்கு நெல்லில் இருந்து கிடைக்கிறது என்ற உண்மை தெரியாத அளவுக்கு ஆலைப் பண்டமாகி விட்டது நம் அரிசி.
இயந்திரத்தில் இட்டு உமியைப் பிரிப்பதற்கு எளிதாக நெல்லை அரை வேக்காடாக நீராவியில் வேக வைத்த அரிசியைத்தான் ஒட்டு மொத்தமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
யாருக்கு எந்த அரிசி?
உடலுழைப்பு குறைவாகச் செலுத்துவோருக்குப் பச்சரிசி, கடின உழைப்பாளிகளுக்குப் புழுங்கல் அரிசி என்ற பாகுபாடு குறிப்பறியாத ஒரு நாளில் மறைந்து போனது. அனைவருக்கும் பொதுவாகி விட்டது அரை வேக்காட்டு அரிசி. இந்த அளவுக்குச் சமூகம் ஆலைமயமாகிவிட்ட பின்னர், தொலைந்தொழிய வேண்டிய சாதியம் மட்டும் விட்டபாடில்லை.
பச்சை நெல்லை மொத்தமாகக் குற்றி அரிசியாக்கி வைத்தால் புழு பிடித்துவிடும் என்பதற்காக, அவ்வப்போதுக் குற்றி பயன்படுத்துவார்கள். அரிசியை உரலில் இட்டுக் குற்றும்போதே வாசனை கமகமவென்று மணக்கும். பச்சரிசி உலையில் கொதிக்கும்போதும் உயிரை ஈர்க்கும் ஒரு வாசத்தைப் பரப்பும். சோற்றின் சுவையில் இனிப்பு முதலிடம் பிடித்திருக்கும்.
அரிசியாக்கும் தனிக் கலை
உடலை வளைத்துக் கடின வேலைகளைச் செய்யாதவர்கள் பச்சரிசி உண்பார்கள். கடின உழைப்பு செய்வோருக்குப் பச்சரிசி கட்டுப்படியாகாது. எனவே உமிக்கும் அரிசிக்கும் இடையில் உள்ள உயிர்ச் சத்து, தாதுச் சத்துப் படிவத்தை மாவுப் பண்பு நிறைந்த அரிசியில் ஏற்றி வைக்கும் விதமாக மாற்றுவார்கள். நெல்லை ஒரு நாள் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு நிதானமான வெப்பத்தில் புழுங்க விடுவார்கள். புழுங்கின நெல்லை இளம் வெயிலில் பரப்பிவிடுவார்கள். ஆவி பறக்கும் அவித்த நெல்லின் வாசம் அந்தப் பிரதேசத்தை விட்டு அகலாமல் செல்லப் பிராணி போல ஓரிரு நாட்களுக்கு அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும்.
நெல்லைப் புழுங்க வைப்பதையே ஒரு கலையாகக் கற்று வைத்திருந்தது நம்முடைய வேளாண் சமூகம். நெல்லைப் புழுங்க வைப்பது மட்டுமல்ல, அரிசி முறுகி விடாத அளவுக்குப் பக்குவமாக இளம் வெயிலில் காய வைப்பதும் தனிக் கலை.
நெல் அவித்து, காய வைத்து, அரவை எந்திரத்தில் இட்டு அரைத்து வீடு கொண்டுவந்து சேர்ப்பது ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஒருவார வேலை. அரிசியோடு உபரியாக உமியும் தவிடும் ‘நானும் வர்ரேனே’ என்று வீடு வந்து சேரும்.
சத்து நிறைந்த தவிடு!
தவிட்டை முறத்தில் இட்டுத் தெள்ளினால் மென்மையான நெய்த் தவிடு கிடைக்கும். இந்தத் தவிட்டுடன் வெல்லம் போட்டுப் பிசைந்து உருண்டை பிடித்துப் பிள்ளைகளுக்குத் தின்பண்டமாகக் கொடுப்பார்கள்.
உயிர்ச் சத்து மிகுந்த அத்தகைய இயற்கையான பண்டங்கள்தாம் என்னைப் போன்ற முந்தைய தலைமுறைக்கு உடலுக்கு உரமாகவும் உழைப்புக்கு ஆதாரமாகவும் அமைந்தன. கடையில் விற்கும் பண்டங்களில்கூட எள்ளு மிட்டாய் என்றும் கசகசா மிட்டாய் என்றும் உடலுக்கு ஊக்கம் தரும் பண்டங்களே கிடைத்தன. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்பட்டுவந்த மசாலாவில் முக்கியமான ஒன்றான கசகசா, மெதுமெதுவாக வழக்கொழிந்துவருகிறது.
அரைத்த நெல்லின் நெய்த் தவிடு, பிள்ளைகளுக்குப் பண்டமாவதுபோலப் பருத்த பருந்தவிடு மாடுகளுக்கு இஷ்ட உணவாக இருந்தது. நோயுற்ற கன்றும் மாடும் விரைவில் தேறுவதற்குத் தவிட்டை எடுத்து வடித்த கஞ்சியில் கட்டியாகப் பிசைந்து ஊட்டுவார்கள்.
காட்டு வேலைகள் தீவிரமாக நடக்கும் காலங்களில் மாடுகளிடம் கடின வேலை வாங்குவதற்காக மாட்டுத் தொட்டி நீரில் தவிட்டைக் கட்டியாகக் கரைத்து விடுவார்கள். அத்தனை சத்து மிகுந்த தவிடுகூட, இன்று நம் பார்வையில் இருந்து மறைந்து வருகிறது.
கஞ்சித் தண்ணியின் வலிமை
சில நோய்களுக்குத் தவிட்டைச் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்து, ஆற்றலும் வெப்பமும் புறத் தோல் வழியாக உள்ளுக்குள் செலுத்தப்பட்டால், நெருக்கடியான கட்டத்தில் இருந்து நோயாளி விரைவில் மீட்சி பெறுவார். அத்தகைய மருத்துவப் பயன்பாட்டுக்கும் கிடைக்காத அரிய பொருளாகத் தவிடு மாறிவிட்டது.
தவிட்டில் எண்ணெய் எடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தவிட்டு எண்ணெய் என்ற பெயரில் எண்ணெய் பாக்கெட்டுகள் சந்தையில் பரவலாகிவருகின்றன. அதை அப்படியே நம்புவதற்கில்லை. அரிசியை பாலிஷ் செய்யும் முறையில் எடுக்கப்படும் எண்ணெய், வைட்டமின் மாத்திரைகளுக்கு மூலக்கூறாகப் பயன்படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கிடைக்கின்றன.
தவிட்டுக்கே இத்தனை உயரிய குணங்கள் உள்ளபோது தவிட்டின் உள்ளுறையும் அரிசி, வலிமை மிக்கதாகத் தானே இருக்க வேண்டும்.
ஆம், அரிசியை வேக வைத்து, வடித்து எடுக்கிற நீரே உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுதான். கிராமத்துப் பள்ளிகளில் மாணவர்களை உள்ளங்கை நீட்டச் சொல்லிப் பிரம்படி தருகிறபோது கையைப் பின்னுக்கு இழுக்காத மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்பார் ‘ஏண்டா கஞ்சி தண்ணியில கருப்பட்டி கரைச்சி மண்டுறியோ (குடிக்கிறியோ)’ என்று கேட்பார். அந்த அளவுக்குக் கஞ்சி தண்ணியின் வலிமை பிரசித்தம்.
எளிய அரிசிக் கஞ்சிகள் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago