உயிர்க் கொடை தரும் உயிர்த் துளி

By குள.சண்முகசுந்தரம்

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு, இரண்டு இளைஞர்க ளுக்குள் உதித்த உன்னத யோசனை, பலருக்கும் உயிர் கொடையாய் வளர்ந்து நிற்கிறது!

'உயிர் துளி' - மதுரை மற்றும் அதன் விளிம்பில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் இந்தப் பெயரைச் சொன்னாலே டைரியை புரட்டாமலேயே தொடர்பு எண்ணை கொடுத்துவிடுகிறார்கள். அவசர சிகிச்சைக்கு, மக்கள் 108-க்கு போன் செய்வார்கள். மதுரை மருத்துவ மனைகளில், உயிர்காக்கும் அவசரம் என்றால், 'உயிர் துளிக்கு போன் போடு' என்கிறார்கள்.

''எங்க கூட்டத்துல ரஜினி ஃபேன்ஸ் கொஞ்சப் பேரு இருக்காங்க. ஒவ்வொரு வருசமும் ரஜினி பிறந்தநாளுக்கு பத்துப் பதினைஞ்சு பேரு மதுரை அப்போலோ ஆஸ்பத்திரியில ரத்ததானம் குடுப்போம். நாங்க குடுத்த ரத்தம் யாருக்கு பயன்பட்டுச்சுன்னு கூட தெரியாது. 12 வருசத்துக்கு முந்தி என்னுடைய நண்பர் ஒருத்தருக்கு ரத்ததானம் குடுக்குறதுக்காக நானும் எனது நண்பன் சந்தோஷும் மதுரை ஜி.ஹெச்சுக்கு போயிருந்தோம். அப்பத்தான், ரத்த தானத்தின் நிஜமான மகத்துவம் எங்களுக்கு புரிஞ்சுது.

உயிருக்கு போராடிக்கிட்டு இருந்த நண்பனுக்கு எங்களை தவிர்த்து கூடுதலா ரெண்டு யூனிட் ரத்தம் வேணும். அந்த அவசரத்தை புரிஞ்சிக்கிட்டு, பிளட் புரோக்கர்கள் இஷ்டத்துக்கு ரேட் பேசுறாங்க. அவங்க கேட்ட காசை குடுத்துட்டா, ரிக் ஷாக்காரர்களையும் நடைபாதை கூலிகளையும் கூட்டிட்டு வந்து ரத்தம் குடுக்க வைச்சி, காசு பாத்துருவாங்களாம். அன்றைக்கும், புரோக்கர்கள் ஏற்பாட்டுல ரெண்டு பேரு அங்க ரத்தம் குடுக்க வந்திருந்தாங்க. இது டாக்டர்களுக்கு தெரிஞ்சு, புரோக்கர்களையும் ரத்தம் குடுக்க வந்திருந்தவங்களையும் சேர்த்தே அடிச்சுத் துரத்திட்டாங்க.

'ஐய்யய்யோ'ன்னு பதறிட்டாங்க நண்பரோட உறவுக்காரங்க. அப்பத்தான், 'எதுக்கும் பயப்படாதீங்க நாங்க ஏற்பாடு பண்றோம்'னு சொல்லி எங்க ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேரை தேடிப்பிடிச்சு கூட்டிட்டு வந்து ரத்தம் குடுக்க வைச்சோம்; நண்பரையும் ஆபத்துக் கட்டத்துலருந்து காப்பாத்தினோம். ரத்த தானத்தோட முக்கியத்துவம் அப்பத்தான் எங்களுக்கு புரிஞ்சுது. இந்த மாதிரியான நேரங்கள்ல உதவுறதுக்காக நமக்குள்ளயே ஒரு அமைப்பை ஏற்படுத்துனா என்னனு நானும் சதீஷும் அன்னைக்கி பேசிக்கிட்டோம். அதுதான் இன்றைக்கு, ஆயிரம் அங்கத்தினர்களோடு உயிர் துளியாய் வளர்ந்து நிக்கிது'' பிரகாச முகம் காட்டுகிறார் மதுரை நெடுஞ்சாலை துறையில் உதவியாளராக இருக்கும் ’உயிர் துளி’யின் அமைப்பாளர் ரமேஷ்.

''நாங்க ரத்த தானம் குடுக்குற விஷயம் மருத்துவமனைகள் மூலமாகவே மதுரைக்குள்ள பரவ ஆரம்பிச்சிது. அதேசமயம், ரத்த தானம் குடுக்கும் நட்பு வட்டமும் பெருக ஆரம்பிச்சிது. ஆனாலும், எங்களுக்கு ஒரு அமைப்பு இல்லாம இருந்துச்சு. 2002-ல் தான் அமைப்பை உருவாக்குனோம். ரத்த தானத்தை 'உயிர் கொடை' என்கிறார்கள். அதனால் எங்கள் அமைப்புக்கு 'உயிர் துளி' என்று பெயர் வைத்தோம்'' உயிர் துளியின் உதயத்தை விவரித்தார் அதன் செயலாளர் சந்தோஷ்.

இன்றைக்கு, மதுரையில் சுமார் 1000 பேரும் காரைக்குடியில் 250 பேரும் பரமக்குடியில் 350 பேரும் உயிர்துளியில் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். மதுரை உறுப்பினர்களில் 200 பேர் அரசு ஊழியர்கள், 300 பேர் மாணவர்கள், பெண்கள் 50 பேர். 2005-ம் ஆண்டு, மதுரையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு, உயிர் துளி அன்பர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி பாராட்டி இருக்கிறார். 2011ல் குருதி கொடையாளர்கள் தினத்தில் உயிர் துளிக்கு 'கெஸ்ட் ஆஃப் ஹானர்' விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது மதுரை அப்போலோ மருத்துவமனை.

அவசர உதவிக்கு மட்டு மல்லாமல் ஆண்டு தோறும் ரத்த தான முகாம்களை நடத்தி, அங்கு தானமாக பெறப்படும் ரத்தத்தை ஜி.ஹெச்சுக்கு (மட்டுமே) வழங்கு கிறது உயிர் துளி. கடந்த ஏழு வருடங்களில் 8 பேருக்கு கண் பார்வையும் கொடுத்திருக்கிறார்கள். இந்த அமைப்பில் உள்ள 70 சதவீதம் பேர் தங்களது கண்களை தானம் செய்திருப்பது இன்னுமொரு இமாலய சிறப்பு. ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேர் தங்களது உடலையும் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்திருக்கிறார்கள்.

''இளைஞர்களிடம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமா இருக்கு. மதுரை கல்லூரி மாணவர்கள் கல்லூரி நேரமாக இருந்தாலும் ரத்த தானம் கொடுக்க ஓடோடி வர்றாங்க. ஏழைகளுக்கு பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கு வதுதான் எங்களின் அடுத்த இலக்கு'' ரமேஷும் சந்தோஷும் அழுத்தமாய் சொன்னார்கள்.

இவர்களின் முயற்சியால் கடந்த 12 வருடங்களில் ‘உயிர் துளி’ தந்திருக்கும் உயிர் கொடை எவ்வளவு தெரியுமா? 20 ஆயிரம் யூனிட்டுகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்