இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.
ஓர் இளம் ஆராய்ச்சியாளராக உங்கள் கனவு, உங்கள் மனைவியின் கனவு, உங்கள் மனைவியின் மரணம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்… இவை எல்லாமும் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.
நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், 1985 வரை சந்தித்திருக்கவில்லை. அப்போது அனுராதா தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு முடித்திருந்தாள். அவள் தன் சகோதரனின் திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தாள். நானோ, கொல்கத்தாவில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். பொது நண்பர் ஒருவரால் நாங்கள் சந்தித்தோம். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி; நாங்கள் எங்களுக்காகப் பிறந்தவர்கள் என்றே நினைத்தோம். 1987-ல் நாங்கள் திருமணம்செய்துகொண்டோம்.
அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் இளம் தம்பதியர் பலரைப் போலவே நாங்கள் படித்துக்கொண்டே எங்கள் துறையில் நன்கு காலுன்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 1998-ல் நாங்கள் இருவரும் எங்கள் துறையில் மேல்படிப்பை முடித்தோம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த ஆய்வும் உயர் பயிற்சியும் எனது துறை. நியூயார்க்கில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘குழந்தைகள் உளவியல்’ துறையில் முதுகலைப் பயிற்சியை அப்போதுதான் முடித்திருந்தாள் அனு.
நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அதுவே தருணம். எனவே, பரபரப்பான நியூயார்க் நகரத்தை விட்டுப் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம். ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. ஆராய்ச்சி மையத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனு தனது துறையில் முழுமூச்சுடன் இறங்குவதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறு இடைவெளி விடலாம் என்று நினைத்தாள். குழந்தையோடு, புது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் கொல்கத்தா சென்று தன் குடும்பத்தினரின் ஆசியைப் பெற்றுவரலாம் என்று விரும்பினாள். எங்கள் அமெரிக்கக் கனவை நிறைவுசெய்யும் விதத்தில் எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஆனால் விதி நினைத்ததோ வேறு.
உங்கள் மனைவிக்கு என்ன நடந்தது?
எங்கள் கொல்கத்தா பயணத்தின்போது அனுவுக்கு ‘மருந்து ஒவ்வாமை’ ஏற்பட்டது. எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் அரிப்பும் தோலில் சினப்பும் ஏற்படும். அவளுடைய தோலில் ஏற்பட்ட சினப்புகள் மேலும் மோசமாகவே, நகரத்திலேயே ‘நம்பர் ஒன்’ மருத்துவரான சுகுமார் முகர்ஜியிடம் செல்லலாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அவரைப் பார்த்தோம். ‘டெபோமெட்ரோல்’ என்ற ஸ்டெராய்டு மருந்தை உடனேயே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார் முகர்ஜி. பொதுவாக, ஆஸ்துமா, மூட்டுவாதம் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து இது. உடன் விளைவை ஏற்படுத்தாமல் உடலில் மெல்ல மெல்ல ஊடுருவி நீண்ட காலத்துக்குப் பலனளிக்கும் வகையிலானது. அனுராதாவுக்கு வந்திருந்தது நீண்ட காலப் பிரச்சினை அல்ல; திடீரென்று ஏற்பட்டது; உடனடித் தீர்வு தேவைப்படுவது. முகர்ஜி அதைக் கொடுத்தார். அதுவும், தினமும் 80 மி.கி. அளவில் இரு முறை செலுத்த வேண்டும் என்றார். அந்த மருந்தின் உற்பத்தியாளர்களே 1-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 40-120 என்ற அளவைத் தாண்டாமல் அந்த மருந்து செலுத்தப்பட வேண்டும் என்றுதான் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதாவது, இயல்பாகக் கொடுக்க வேண்டிய அளவைவிட 15-50 மடங்கு அதிகமாக அனுவுக்குக் கொடுக்கப்பட்டது.
ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளரான நீங்கள் இதுகுறித்து எதுவும் முகர்ஜியிடம் கேட்கவில்லையா?
அது எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்? நாங்கள் முகர்ஜியிடம் கேட்டோம். அனுவைப் போன்ற பலருக்கும் இந்த மருந்தை இதே அளவில் கொடுத்திருப்பதாகவும் அந்த மருந்து எப்போதும் மாயாஜாலத்தையே நிகழ்த்துவதாகவும் சொல்லி எங்கள் கேள்விகளைப் புறம்தள்ளினார். தவிர, அன்றைக்கு முகர்ஜி போன்ற ஒருவருக்குச் சவால்விடும் துணிவு எங்கள் யாருக்கும் இல்லை. ஆனால், மாயாஜாலம் ஏதும் நிகழவில்லை. மாறாக, அனுவின் உடல்நிலை மிக சீக்கிரம் மோசமான நிலைக்குப் போனது. அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான டெபொமெட்ரோல் மருந்தை, அதுவும் அசாதாரணமான அளவில் மருத்துவர் முகர்ஜி பரிந்துரைத்ததுதான் அனுவின் மரணத்துக்கு முதன்மையான காரணம். உச்ச நீதிமன்றமும் இதைத்தான் சொல்லியிருக்கிறது.
இந்தியாவில் சட்டப் போராட்டம் மிக நீண்டது. அது உங்கள் வாழ்க்கைக் கனவையேகூட மாற்றும் என்பதையும் அறிந்திருப்பீர்கள். எந்தக் கணத்தில் சட்டப் போராட்டத்தில் இறங்க முடிவெடுத்தீர்கள்?
அனு இறந்தது குணப்படுத்த முடியாத நோயினாலோ ஆட்கொல்லி நோயினாலோ அல்ல. இன்றுவரை ‘அணுக முடியாதவர்’களாக இருக்கும் மருத்துவர்களின் பொறுப்பற்ற மருத்துவ உதாசீனம்தான் அவளுடைய இறப்புக்குக் காரணம். அவளுடைய பூத உடல் மரணமடைந்த உடனேயும் சரி; இப்போதும் சரி; அவளுடைய நம்ப முடியாத மரணத்துக்கு மாபெரும் நோக்கம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். என் அனு 1998-ல் இறந்தாள். அதற்கு 15 ஆண்டுகள் கழித்தும்கூட இந்தியாவின் மருத்துவமனைகளிலும் மருத்துவ நிலையங்களிலும் ஆயிரக் கணக்கான அனுக்கள் கடுமையான மருத்துவ உதாசீனத்தால் தொடர்ந்து இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவர் முகர்ஜி போன்ற மருத்துவர்களின் அறியாமையும் அகம்பாவமும் கலந்த கலவைதான் அவர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. தன் தாய்நாட்டில் எண்ணற்ற உயிர்கள் என்றாவது ஒருநாள் காப்பற்றப்பட வேண்டும் என்றுதான் அனு தன் உயிரை தியாகம் செய்தாள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம், இறந்துபோன என் மனைவிக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டம் மட்டும் அல்ல; மருத்துவ உதாசீனத்தின் காரணமாகவும் பொறுப்பே இல்லாத மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் காரணமாகவும் அனுவைப் போன்றே மோசமான விதத்தில் இறந்துபோன எண்ணற்ற அப்பாவி உயிர்களுக்காகவுமானது.
நீங்கள் எதிர்கொண்ட சவால்களைச் சொல்ல முடியுமா?
இந்த 15 ஆண்டுகளில் பிழைப்புக்குத் தேவைப்படும் அனைத்தையும் உதறித்தள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும், தொழில் ரீதியாகவும் பெரும் சீரழிவுக்கு உள்ளானேன். மருத்துவ ஆலோசகராகவும் பேராசிரியராகவும் (அமெரிக்கத் தரத்துக்கு) ஒரளவு நல்ல ஊதியம் கிடைத்து வந்தாலும் மாபெரும் சட்டப் போராட்டத்துக்கும் இந்தியப் பயணங்களுக்கும் ஈடுகொடுக்க வேண்டி நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் தாக்கல்செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்குச் சற்று முன்னர்தான் என் வீட்டையும் இழுத்துப் பூட்டினேன். எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த என்னுடைய ஆய்வும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால், என் வாழ்க்கையைவிட முக்கியமானதல்லவா இந்தப் போராட்டம்?
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நோயாளிகளுக்கான உரிமைகள் இந்தியாவில் எந்த வகையில் நசுக்கப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்?
நோயாளிகளின் உரிமைகள் இந்தியாவில் ஏட்டளவில்தான் இருக்கின்றன. பேராசை கொண்டதும் நெறிகள் அற்றதுமான மருத்துவமனைகள் கோடிக் கணக்கான அப்பாவி நோயாளிகளை வஞ்சிப்பதுதான் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் யதார்த்தம். மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாகவும் அணுகவே முடியாதவர்களாகவும் சாதாரண மக்கள் இந்தியாவில் கருதுகிறார்கள். 1980-கள் வரையிலும் இந்தப் பிம்பம் சரியாகத்தான் இருந்தது. என் தந்தையும் ஒரு மருத்துவரே. 1978-ல் அவர் சாகும் வரை அந்தப் பிம்பத்துக்கு ஏற்ற நேர்மையோடுதான் அவர் இருந்தார். 1990-க்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. மேலும் மேலும் செல்வத்தைக் குவிப்பது என்பதுதான் இந்திய மருத்துவர்களின் லட்சியமாக ஆகிவிட்டது. ஹிப்போகிரட்டின் உறுதிமொழி என்பது மருத்துவச் சமூகத்துக்குள் ஒரு கேலிப் பொருளாக ஆகிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொழிக்க ஆரம்பித்தன. பணக்காரர்கள் நினைத்தால் தங்கள் பிள்ளைகளைப் பணம் கொடுத்து மருத்துவர்கள் ஆக்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. விளைவாக, எல்லோரும் வியாபாரமாகவே மருத்துவத்தைப் பார்க்கிறார்கள். கூடவே, இந்திய மருத்துவக் கழகம், செல்வாக்கான பிற மருத்துவ லாபிகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவையெல்லாம் சேர்ந்து நோயாளிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே எந்த விதத்திலும் பரவாமல் தடுக்கத் தங்களால் என்னென்னவெல்லாம் முடியுமோ அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.
நோயாளிகளின் உரிமைகளை நம்முடைய விதிகள் எந்த அளவுக்கு மதிக்கின்றன?
இந்தியாவில் உள்ள நோயாளிகளின் உரிமைகளில் முக்கியமானவற்றுள் பெரும்பாலானவை ‘மருத்துவ நிறுவனச் சட்ட’த்தின் அடிப்படையில் மட்டும் கொண்டுவரப்பட்டவை அல்ல; இந்திய மருத்துவ ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ போன்றவற்றின் அடிப்படையிலும் கொண்டுவரப்பட்டவையும் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, அரசும் சரி ஆணையமும் சரி, இந்த உரிமைகள் திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதில் அக்கறை காட்டவில்லை; அது மட்டுமல்லாமல், இந்த மருத்துவச் சட்டங்களை மீறும் மருத்துவர்கள்/மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.
எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், ரசீதுகள் அவர் கேட்டதிலிருந்து 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ பிரிவு 1.3.2 தெளிவாகச் சொல்கிறது. இந்தியாவிலுள்ள எத்தனை நோயாளிகளுக்கு இந்த உரிமைகுறித்து தெரியும்? இந்த உரிமையைப் பற்றி அறிந்திருக்கும் ஒரு சில நோயாளிகளுக்கும்கூட அவர்கள் கேட்கும் ஆவணங்களை அகம்பாவம் பிடித்த மருத்துவர்கள் பலர் கொடுப்பதில்லை என்பதுதானே உண்மை? மருத்துவ உதாசீனத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழைத் தவிர வேறெந்த ஆவணங்களையும் மருத்துவமனைகள் தருவதில்லை. அப்படித் தந்தால்தானே மருத்துவ உதாசீனத்தை உறுதிப்படுத்த முடியும்?
இந்திய மருத்துவர்கள் ‘நோயாளிகளின் உரிமைகள்’ தொடர்பான சட்டதிட்டங்கள் குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை. இந்த உரிமைகள் மீறப்பட்டால் அதற்காக மருத்துவக் கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று மருத்துவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். பிற சேவைத் துறைகளைப் போலவே மருத்துவப் பராமரிப்பு அமைப்பும் அதன் அடிவரை அழுகிப்போயிருக்கிறது. இன்றைய இந்தியாவில், ‘நோயாளிகளின் உரிமைகள்’ என்பது நாடெங்கிலும் உள்ள ஏழை நோயாளிகளைப் பொறுத்தவரை கொடூரமான நகைச்சுவையே தவிர வேறொன்றுமில்லை.
நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்த இந்த 15 ஆண்டு காலம் ஒருவகையில் இந்திய அரசியல் சூழலிலும் முக்கியமானது. தாராளமயமாக்கல் மருத்துவத் துறையிலும் இரண்டறக் கலந்த காலகட்டம் இது. மருத்துவம் தனியார்வசம் சென்றுகொண்டிருக்கும் சூழலில், மீண்டும் பொது மருத்துவச் சேவையைக் கொண்டுவர என்னென்ன மாற்றங்கள் இங்கு நடக்க வேண்டும்?
நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் மருத்துவப் பராமரிப்பு ஒவ்வொரு பிரஜைக்குமான சலுகை அல்ல; உரிமை.
உண்மையில் மருத்துவமனைகளோடு தொடர்புடைய மருத்துவர்கள்தான், பாவப்பட்ட நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் விளையாட்டில் சூத்திரதாரிகள். பரிசோதனை நிலையங்களிலிருந்து கிடைக்கும் தொகைக்காகத்தான் வெவ்வெறு பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்றே. இந்த வேட்டையில் அரசியல் கட்சிகளுக்கும் பங்கு கிடைப்பதால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைக் கண்டுகொள்வதில்லை. கொள்ளை லாபம், கட்சி நிதி எல்லாம் தனியார் மருத்துவமனைகளால் கொள்ளையடிக்கப்படும் சாதாரணக் குடிமக்களின் சட்டைப்பையிலிருந்துதான் வருகின்றன.
மருத்துவத் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக அதில் தனியார்த் துறையை அனுமதிப்பதில் தவறில்லைதான். ஆனால், அது சாதாரண மக்களிடம் கொள்ளையடிக்காமல் நியாயமான விதத்தில் செயல்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசு கடுமையான சட்டதிட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மருத்துவத் துறையைச் சீர்படுத்த வேண்டுமென்றால் மருத்துவப் பராமரிப்பு ஒழுங்கமைப்புகளில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். முக்கியமாக, தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும்.
மருத்துவப் படிப்பு கோடிகளைச் செலவழிக்கும் படிப்பாகிவிட்ட சூழலில், மருத்துவமும் கோடிகளைச் சம்பாதிக்கும் தொழிலாக மாறுவது இயல்புதானே? அப்படி என்றால், ஆரம்பத்திலிருந்தே - அதாவது மருத்துவக் கல்வியிலிருந்தே - அமைப்பில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் அல்லவா? இதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?
இந்தியாவில் தற்போது இருக்கும் மருத்துவக் கல்விமுறை மாபெரும் தோல்வியடைந்திருக்கிறது. பணக்காரக் குடும்பங்களிலிருந்து தகுதியே இல்லாத மருத்துவர்கள் உருவாவதற்குக் கச்சிதமான வழிமுறைதான் தற்போதைய மருத்துவக் கல்வி முறை. மருத்துவக் கல்வியின் தரம் 1990களில் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சி, 1990-களில் கேத்தன் தேசாயும் அவருடைய கூட்டமும் ஆணையத்தை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோதிலிருந்து துவங்கியது. அரசு தலையிட்டு ஆணையத்தின் கருப்பு ஆடுகளைக் களைந்தால்தான் மாற்றங்கள் ஏற்படும்.
உங்கள் சட்டப் போராட்டத்தின் வெற்றி உங்களுக்குத் திருப்தியைத் தருகிறதா?
மருத்துவ உதாசீனம் தொடர்பான வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு நிறைய நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ‘கடவுளர்களான’ மருத்துவர்களால் அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் எச்சரிக்கையாக நிச்சயம் இது இருக்கும். அந்த வகையில், தீர்ப்பு எனக்குப் பரம திருப்தியைத் தருகிறது.
இந்தத் தீர்ப்பு, சிகிச்சைகள் மேலும் விலை உயர வழிவகுக்கும் என்று மருத்துவ அமைப்புகள் கருத்துத் தெரிவிக்கின்றன. அதாவது மருத்துவ உதாசீன வழக்குத் தொடரப்பட்டு, அதன் விளைவாக செலுத்த வேண்டியிருக்கும் இழப்பீட்டுத் தொகையும் நோயாளிகளின் தலையிலேயே கட்டப்படும் என்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்திய மருத்துவக் கழகமும்கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறது. மருத்துவர்களை எந்தச் சட்டமும் தண்டிக்கவில்லை என்பதால் மருத்துவக் கட்டணம் இதுவரை குறைவாக இருந்ததா என்ன? நோயாளிகளின் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மருத்துவர்கள் நிறைய பரிசோதனைகளை இதுவரை பரிந்துரைத்தார்கள் என்று சொன்னால் ஒரு குழந்தைகூட நம்பாது. கமிஷனுக்காகத்தான் அந்தப் பரிசோதனைகளெல்லாம் என்று எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே, தனியார் மருத்துவமனைகளால் விதிக்கப்படும் கட்டணங்கள் மிகமிக அதிகமானவை, அரசின் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படாதவை. இனிமேல் மக்கள் விழிப்பாக இருப்பார்கள், நீதிமன்றமும் மருத்துவத் துறையின்மீது ஒரு கண் வைக்கும். மருத்துவர்களின் உதாசீனத்தால் அவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்கின் காரணமாக மருத்துவப் பராமரிப்புச் செலவு எகிறும் என்றால் அமெரிக்காவின் நிலைதான் உலகிலேயே மோசமானதாக இருக்கும், ஏனெனில் தவறான சிகிச்சை காரணமாக நோயாளிகள் இறந்தால் அங்கேதான் மருத்துவர்கள் ஏராளமாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த பயம் அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதே. ஏனென்றால் ‘அணுகப்பட முடியாதவர்கள்’ என்ற நிலையை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அந்த நினைப்பின் மேல் விழுந்த அடிதான் அனுராதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் காரணமாக, ஏழை எளிய மக்களுடைய உயிரின் மதிப்பு நிச்சயமாக உயரத்தான் போகிறது.
உங்கள் அமைப்பைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பீப்பிள் ஃபார் பெட்டர் ட்ரீட்மென்ட்’ என்ற மக்கள் நல அமைப்பை 2001ல் நான் தொடங்கினேன். மக்களுக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதும், இந்தியாவில் மருத்துவ உதாசீனங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதும்தான் அந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள். கடந்த 12 ஆண்டுகளாக, மருத்துவத் துறையின் உதாசீனங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி ஆலோசனைகளுக்காக இந்த அமைப்பை அணுகியிருக்கிறார்கள். எங்கள் இணையதளத்தில் (www.pbtindia.com) நோயாளிகளின் உரிமைகள் குறித்த முக்கியமான தகவல்களும் தவறிழைத்த மருத்துவர்களுக்கு எதிராக எப்படிப் புகார் கொடுப்பது என்பது குறித்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளம் மூலமாக நேரடியாகவும் என்னைத் தொடர்புகொள்ள முடியும். உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து எங்கள் அமைப்பு போராடியிருக்கிறது/போராடிவருகிறது. மருத்துவப் பராமரிப்பு ஒழுங்குமுறை அமைப்பிலும் நாங்கள் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2000-2001-ல் நாங்கள் தாக்கல் செய்த பொதுநல மனு முக்கியமானது. மருத்துவக் குழுக்கள் தொடர்பான சட்டம் 1956-ல் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் குழு என்ற ஒன்றே இல்லை என்ற உண்மையை முதல்முறையாக எங்கள் மனு வெளிக்கொண்டுவந்தது. நீதிமன்றம் இதை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வழக்கால், மருத்துவ ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ 8.7 மற்றும் 8.8 ஆகிய பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் ஆறு மாதங்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் (8.7) என்பதும் மருத்துவ உதாசீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாநில மருத்துவக் குழுவின் முடிவுக்கு எதிராக ஆணையத்திடம் முறையிடலாம் (8.8) என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.
உங்கள் போராட்டத்தின் தார்மிகப் பலம் எது? உங்கள் அறவழிப் போராட்டத்தின் முன்னோடி யார்?
எனது தந்தைதான் எனக்கு எப்போதும் முன்னோடி. அதே போல் இந்தப் போராட்டத்தில் பெரும் தார்மிக சக்தியாக இருந்து என் மனைவி என்னை முன்செலுத்தியிருக்கிறாள். அவளது மரணம் உடல் ரீதியான மரணம்தான். கடந்த 15 ஆண்டுகளாக எனது வழிகாட்டும் தேவதையாக அவள் என்னுடன் இருக்கிறாள்.
கல்வியறிவற்றோர் கோடிக்கணக்கானோர் இருக்கும் ஒரு நாட்டில் அரசும் சட்டமும் முழுக்க மருத்துவர்களைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பில் தனி மனிதர்கள் போராடி மாற்றங்களை முன்னெடுப்பது சாத்தியம்தானா?
சாத்தியம்தான். பொதுமக்களின் விழிப்புணர்வும் அமைதிவழி போராட்டங்களும்தான் எல்லா சமூகக் கொடுமைகளுக்கும் எதிரான மகத்தான ஆயுதங்கள். மருத்துவ உதாசீனம் என்ற சமூகக் கொடுமைக்கும் இவைதான் ஆயுதங்கள்.
உதவி: ஆசை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago