‘இன்னும் உங்களுக்குச் சர்க்கரை நோய் வரவில்லையா? சீக்கிரம் வரும். இல்லாவிட்டால் உங்கள் மகனுக்கோ பேரனுக்கோ வரும்.
ஆசிய மரபினர் எவரும் அநேகமாகத் தப்ப முடியாது’ என ஐரோப்பிய யூனியனின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேடையொன்றில் பேசியபோது, நான் பின் இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.கொஞ்சம் கோபமும் நிறைய எரிச்சலும் வந்த பொழுது அது. ஆனால், இன்று நம் தேசம், மெல்ல மெல்ல அதை நோக்கி நகர்வதைப் பார்க்கையில், அவர் கூற்று உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் வரத்தான் செய்கிறது.
சமீபத்தில் வெளியான எல்லா அறிக்கைகளும் இந்தியாவின் நகர்ப்புறங்களில் படுவேகமாகவும், கிராமப்புறங்களில் சற்றுக் குறைவான வேகத்துடனும் இனிப்பு நோயின் பிடி இறுகிக் கொண்டே வருகிறது என்று சொல்கின்றன.
தனி மருந்தால் முடியாது!
இரண்டு முக்கிய விஷயங்கள் இங்கே உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும். முதலாவது, இந்த ஒரு நோய் பல வியாதிகளை விரிக்கும் தன்மையைக் கொண்டது என்பது. இரண்டாவது, எந்தத் தனி மருந்தாலும் ஒரு போதும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாது. உணவு, உழவு, உள்ளம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சூழல் என அத்தனையிலும் ஏற்படும் மாற்றம் மட்டுமே, இனிப்பு நோயிலிருந்து ஒருவரை முழுமையாக மீட்டெடுக்க உதவும் என்ற நிலைமை.
இந்த இரண்டு விஷயங்களால், இந்நோய் ஒருபக்கம் பெருவாரியாக அச்சத்தையும், இன்னொரு பக்கம் ‘எல்லாம் வணிகமப்பா’ எனும் அலட்சியதையும் எக்கச்சக்கமாக ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ல் இந்த நோய் சார்ந்து, கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி வணிகம் இருக்கும் என ‘இந்தியன் மார்க்கெட் ரிசர்ச் ஃப்யூச்சர்’ அறிக்கை தெரிவிக்கிறது.
ஒருங்கிணைந்தால் உண்டு
நன்மைஇந்தியாவில் இப்படி இருக்க, மேற்கத்திய மருத்துவ உலகம் இன்றைக்கு மெல்ல மெல்ல மருத்துவ அறிவியலை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. உலகின் எல்லா மரபு அனுபவங்களையும் எல்லாப் பக்கமும் உன்னிப்பாகக் கவனித்து, ஒருங்கிணைப்பது அங்கே மிக முக்கியமான நகர்வு. இது குறித்து இத்தொடரில் பலமுறை பேசியிருக்கிறோம்.‘எப்படிக் கூட்டாகச் செய்ய வேண்டும்? எது முதலில்? எது அடுத்து? எது தனியாக? எதனுடன் கூட்டாக?’ என்பதையெல்லாம் அனைத்துத்துறை வல்லுநர்களும் ஈகோவை விடுத்து, ஒருங்கிணைந்து பேசி, விவாதித்து, முடிவெடுத்து நோயருக்கு அளிப்பது மட்டுமே இன்றளவில் உள்ள ஒரே வழி. இந்த ஒருங்கிணைப்பில், பண விரயம், கால விரயம், உடல் சோர்வுகள், நோயின் பின்விளைவுகள், அவசியமற்ற மருந்துகள் அத்தனையும் தவிர்க்கப்பட ஏராளமான சாத்தியங்கள் உண்டு.
பயமுறுத்துவது அறம் ஆகாது
‘எந்த முறை மருத்துவம் எனக்குத் தேவை?’ என்பது நோயாளிகளின் உரிமை. ஆனால், அப்படி வரும் நோயரிடம், தத்தம் துறையின் குணப்படுத்தும் தன்மையைக் காப்பு உவப்பில்லாமல், உண்மையாக விளக்க வேண்டியது அனைத்து மருத்துவரின் கடமை. ‘அய்யய்யோ, மரபுக்கா போறீங்க..? உங்க கிட்னி பத்திரம்’ என பயமுறுத்துவதும் சரி, ‘நவீன ஊசியா? அவ்வளவுதான். வாட்ஸ் அப் பார்க்கலையா நீங்க.?
அத்தனையும் வியாபாரமப்பா’ என நோயின் எந்தப் புரிதலுமில்லாமல் மரபின் பெயர் சொல்லி நோயரைத் தம் பக்கம் இழுப்பதும் சரி… இரண்டுமே அறமற்ற செயல்!மரபு அறிவியலின் பயனை, அதில் பயனடைந்தவர்களின் பட்டியலைக்கொண்ட பாரபட்சமில்லாதத் தரவுகளை அறிவிக்கும்வரை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் மொழியில், நோயின், நோயரின் நிலையைக் கண்காணிப்பது மிக மிக அவசியம்.
அந்த நான்கு விஷயங்கள்
இன்றைய மருத்துவ உலகில் நடைபெறும் மிக முக்கியமான மாற்றம் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மொத்த மருத்துவ உலகமும் ‘சிஸ்டம் பயாலஜி அப்ரோச்’ (system biology approach) என்பதை நோக்கி நகர்கிறது. மரபு, நவீனம் என அனைத்தின் ஒருங்கிணைந்த புரிதலை உள்வாங்கி, ‘பி4 மெடிசின்’ (P4 Medicine) எனும் பெரும் மாற்றத்தை நோக்கி அது நகர்கிறது.‘பெர்சனலைஸ்டு’ (Personalised), ‘ப்ரிவெண்டிவ்’ (Preventive), ‘ப்ரெடிக்டிவ்’ (Predictive), ‘பார்ட்டிசிபேட்டரி’ (Participatory) என்பவைதான் அந்த ‘பி4 மெடிசின்’. ஒவ்வொரு நோயருக்கும் அவரவர் வாழ்வியலுக்கேற்ற, மருந்தை அவர் மரபணு அடிப்படையில் தேர்ந்தெடுப்பதும், என்ன நோய் அவருக்கு வருங்காலத்தில் வரும் என அனுமானித்து, அவரை நோய் நீக்கலில் உணவு, வாழ்க்கை முறை மாற்றம் மூலம் பங்கேற்க வைப்பதும்தான் ‘சிஸ்டம் பயாலஜி’ சொல்லும் ‘பி4 மெடிசின்’. இந்தச் சித்தாந்தத்தைத் தான் இங்கே காலகாலமாக இந்திய மரபு மருத்துவ முறைகள் அனைத்தும் சொல்லி வந்துள்ளன.
‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ எனச் சொன்னதிலும், ‘உணவே மருந்து’ எனச் சொன்னதிலும், ‘மிகினும் குறையினும்’ எனச் சொன்னதிலும், நவீனம் இன்று சொல்லும் ‘பி4 மெடிசின்’ சித்தாந்தம் நிறையவே இருக்கிறது. சர்க்கரை நோயை இந்த ‘சிஸ்டம் பயாலஜி’ முறையில் ‘பி4 மெடிசின்’ மூலம் கண்டிப்பாக வென்றுவிடுவோம் என்று சூளுரைக்கிறார்கள்.அது வரட்டும், பெரும் மகிழ்ச்சியே! ஆனால், அதன் சித்தாந்தத்தை முழுமையாகக்கொண்ட, ஏற்கெனவே இங்கு உள்ள சித்த, ஆயுர்வேத, இயற்கை மரபு மருத்துவக் கூட்டணியில் இந்தியாவின் நவீன மருத்துவர்கள் ஏன் இங்கே ஒருங்கிணைந்து, இந்த நோயை வெல்லக் கூடாது? இனிப்பு தேசத்தினர் காத்திருக்கிறார்கள்.
ஒருங்கிணைவோம்!(நிறைந்தது)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago