செயலி என்ன செய்யும்? 01 - சாட்டுக்கு எத்தனை மார்க்..?

By வினோத் ஆறுமுகம்

‘செயல்… அதுவே சிறந்த சொல்!’ என்பார்கள். இன்று ‘செயலி… அதுவே சிறந்த சொல்!’ என்று சொல்லும் அளவுக்கு, உண்பதற்கு, உறங்குவதற்கு, உறக்கத்திலிருந்து எழுவதற்கு, காதலிப்பதற்கு என எல்லாவற்றுக்கும் விதவிதமான ‘ஆப்’களைத் தரவிறக்கி வாழ்ந்து வரும் சூழல். அந்தச் செயலிகளில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன..? வாருங்கள்… வாரா வாரம் அலசுவோம். இந்த வாரம்

ஸ்னாப்சாட் (SnapChat).

இந்தச் செயலியின் பெயரைச் சொன்னால் போதும், இளசுகளின் மனம் அதிரும். அவர்களின் வயிற்றில் ஐஸ்கட்டி உருளும். ஆனால், ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஜுக்கர்பெக்கின் வயிற்றிலோ புளியைக் கரைக்கும். இந்தச் செயலியால் பதின் வயதினருக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் பட்டியலிட்டால், பெற்றோர்கள் பதறுவார்கள். மகிழ்ச்சி, கிளர்ச்சியைத் தரக்கூடிய செயலிதான் என்றாலும் நிபுணர்களால் ‘ஆபத்து’ என முத்திரை குத்தப்பட்ட செயலி. அப்படியென்ன ஆபத்து இருக்கிறது?

ஸ்மார்ட்ஃபோன்களில், சமூக ஊடகச் செயலியாக மட்டுமே இயங்கும் ஸ்னாப்சாட், ‘பிளேஸ்டோர்’ அல்லது ‘ஐஸ்டோரில்’ இலவசமாகக் கிடைக்கும். 12 வயதுக்கு மேலானோர் பயன்படுத்தும் செயலி என்று நிறுவனமே சொல்கிறது. ஆனால் 10 வயது சிறுவர்கள்கூடத் தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்தலாம்.

யாருக்குத் தெரியப் போகிறது வயது? அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இளைஞர்களிடையே சக்கைபோடு போடும் நம்பர் ஒன் செயலி இது. இதன் வருகைக்குப் பின் அவர்களில் பலர் ஃபேஸ்புக் பக்கம் செல்வது குறைந்துவிட்டது.

‘கேலி’க்கை செயலி

இந்தச் செயலியைப் பெரும் பாலும் 12 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அதாவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். ‘சாட்’ செய்வதுதான் இந்தச் செயலியின் பிரதானப் பயன்பாடு. மேலும், இந்தச் செயலியைக் கொண்டு நீங்கள் ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

தனிநபருக்கோ  குழுவுக்கோ நீங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்தச் செயலியின் சிறப்பு நீங்கள் பகிரும் தகவல்கள் 3 முதல் 10 நொடிகளில் அழிந்துவிடும். அதனால் பிள்ளைகள் இந்தச் செயலியை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள்.

இந்தச் செயலியில் ‘ஸ்னாப்மேப்’ எனும் வசதி உள்ளது. இதன் உதவியுடன் உங்கள் நண்பர்கள் இருக்கும் இடத்தை  நீங்கள் தெரிந்துகொள்ளலாம். கூகுள் மேப்பில் வருவது போல் தெளிவான வரைபடம், தெருப் பெயர் ஆகியவற்றுடன் நம் இடத்தையும், நண்பர்களின் இடத்தையும் காட்டும்.

அடுத்து, மிகவும் ‘கேலி’க்கையானது இந்தச் செயலி. வெறும் ‘சாட்’ மட்டும்தான் என்றில்லாமல் நிறைய  ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ வசதியும் உண்டு. இதனால் உங்கள் ஒளிப்படங்களை விதவிதமான கேலிச் சித்திரமாக மாற்றிக்கொள்ள முடியும்.

நட்பின் ஆழத்துக்கு மதிப்பெண்

இந்தச் செயலி நமக்குப் பிடிக்க முதல் காரணம், நாம் சமூக விலங்குகள். நாம்  சமூகத்துடன் எவ்வளவு தொடர்பில் இருக்கிறோமோ அவ்வளவு பாதுகாப்பாக உணர்வோம். அடுத்து, அனைத்து விஷயங்களிலும் ‘அப்டேட்டாக’ இருப்போம். பள்ளியிலோ கல்லூரியிலோ நண்பர்கள் ஒரு விஷயத்தைப் பேசும்போது நீங்கள் ஒன்றுமே தெரியாமல் நின்றால், உங்களை அந்தக் குழுவில் என்ன சொல்வார்கள், எப்படி ஒதுக்குவார்கள் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் நண்பர்களுக்கே நீங்கள் அந்நியமாகிவிடுவீர்கள்.

இந்தச் செயலியை நாம் பயன்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்துக்கான அடுத்த காரணம், ‘பீர் பிரஷர்’ எனும் நண்பர்களின் அழுத்தம். நம் நண்பர்கள் தரும் அழுத்தம் காரணமாக, நமக்கு ஒரு விஷயம் பிடிக்காவிட்டாலும் அதில் வலுக்கட்டாயமாகச் சில நேரத்தில் ஈடுபடுவோம்.இந்த அழுத்தம்தான் ஸ்னாப்சாட்டின் வளார்ச்சிக்கு உதவியது.

அடுத்து இந்தச் செயலியில் ‘ஸ்ட்ரீக்’ எனும் ஒரு மதிப்பீடு முறை உள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தகவல் பரிமாற்றம் நிகழ்த்துவதைப் பொறுத்து  ‘ஸ்ட்ரீக் ஸ்கோர்’ எனும் மதிப்பெண்களைக் கொடுப்பார்கள். எவ்வளவு அதிகமாகத் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்களோ அவ்வளவு மதிப்பெண்கள் கூடும். இந்த மதிப்பெண் நட்பின் ஆழத்தைக் காட்டுகிறதாம்.

பாதுகாப்புப் பிரச்சினைகள் என்ன?

இந்தச் செயலி மூலம் தனி நபருக்குத் தகவல்களை அனுப்பலாம்தான். அந்தத் தகவல்களும் சில நொடிகளில் அழிந்துவிடும்தான். ஆனால், அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்களில், இவ்வாறு அனுப்பப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை ‘ஸ்க்ரீன்ஷாட்’ வசதியைக் கொண்டோ அல்லது ஸ்னாப்சாட்டை ஹேக் செய்யும் பிற செயலிகளைக்கொண்டோ அந்தப் படங்களைத் தரவிறக்கம் செய்துவிட முடியும். பிறகு அதை வேறு நபர்களுக்குப் பகிர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அடுத்த பாதுகாப்புக் குறைபாடு, ‘ஸ்னாப்மேப்’. நீங்கள் இருக்கும் இடம் தெளிவாகத் தெரிந்துவிடும். இதனால் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், இடத்தில் நமது பிள்ளைகள் மிகச் சுலபமாக, முன் பின் அறிமுகமில்லாதவர்களால் அணுகப்பட்டு, பாதிப்புக்கு உள்ளாகலாம்.

பாதிப்புகள் என்ன?

நண்பர்களின் வற்புறுத்தலுக்காக முதிர்ச்சியில்லாத வயதில், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடும் ‘செக்ஸ்டிங்’ எனப்படும் பாலியல் ரீதியான ஆபாச அரட்டைகளில் ஈடுபடுவது, படங்களை அனுப்புவது போன்ற நடவடிக்கைகள், நம் பிள்ளைகளின் மனத்தில் பல பாதிப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடலாம்.

‘ஸ்டிரீக் ஸ்கோரை’ உயர்த்த, சதாசர்வ காலமும் ‘சாட்’ செய்தபடியே இருப்பதால், அவர்களின் உடல், படிப்பு, குடும்பத்தினருடனான உறவு என எல்லாமே மெல்ல மெல்லச் சீரழியும். அதிகமாக ‘சாட்’ செய்ய அவர்கள் முதலில் உறக்கத்தை இழக்கிறார்கள். உறக்கம் இழந்தால், நாம்  உடலையே இழந்தது போலத்தான். அதைவிடக் கொடுமை அரைத் தூக்கத்தில் வாகனத்தைச் செலுத்தி, விபத்துக்குள்ளாவது. ஒருவேளை காதலர்களாக இருந்தால், பல மாத /வருட ‘சாட்’ பதிவுகள், காதல் தோல்விக்குப் பின், பழி வாங்கும் ஆயுதமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கை!

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

முதலில், இந்தச் செயலியை உங்கள் பிள்ளைகள் பயன்படுத்துகிறார்களா எனத் தெரிந்துகொள்ளுங்கள். உடனடி ‘தடா’ வேண்டாம். அவர்களுக்கு நண்பர்களின் அழுத்தம் இருக்கும். ஒருவேளை அதிகமாக ‘சாட்’ செய்வதாகத் தெரிந்தால், அதன் நன்மை தீமைகளைப் பற்றி அவர்களுடன் பேசுங்கள். நீங்களும் அவர்களின் நண்பர்கள் பட்டியலில் இணையுங்கள். கண்காணிக்க வேண்டாம், வழிகாட்டுங்கள். மேலும் வழிகாட்டுதலுக்கு இந்த ஃபேஸ்புக் குழு உதவியாக இருக்கும் (www.facebook.com/digitaldiet4all).

ஒருவேளை உங்கள் பிள்ளைகள் அதீதமான மன உளைச்சலில் இருந்தாலோ பள்ளி/கல்லூரியில் இருந்து புகார்கள் வந்தோலோ அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தாலோ, உடனடியாகத் தகுந்த மனநல ஆலோசகரிடம் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். எல்லாவற்றையும் குணப்படுத்திவிட முடியும்!

vinodhjpg

வினோத் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப நிபுணர். சமூக ஊடகங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். ஏற்கெனவே ‘நலம் வாழ’ இதழில் ‘டிஜிட்டல் போதை’ எனும் பிரபலமான தொடரை எழுதியவர்.


கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்