இனிப்பு தேசம் 20: தினமும் ‘சர்க்கரை’ விடியலா..?

By கு.சிவராமன்

ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கணக்கிடுவது, சர்க்கரை நோயின் கட்டுப்பாட்டை அறிய நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மிக எளிய, மிக முக்கியச் சோதனை. அதன் துல்லியம் குறித்த சர்ச்சை அவ்வப்போது அறிவியல் உலகில் எழுந்தாலும், நோயின் கட்டுப்பாட்டை அறிய இதை அளவிடுவதை ஒருபோதும் மறுக்க இயலாதது.

‘என் உடல் நன்றாக இருப்பதாக  உணர்கிறேன். பிறகு ரத்த சர்க்கரை அளவு பற்றி நான் எதற்குக் கவலைப்பட வேண்டும்?’ என்போர் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  நம் உடலினுள் வலைப்பின்னலாய் உள்ள பல மில்லியன் ரத்த நாடி நாளங்களில், அவற்றின் நுண்ணிய நாளங்களில் ஏற்படும் பாதிப்பை உடல் உணர்ந்து, நோயாக மாறி வதைக்கப் பல நாட்கள் பிடிக்கக்கூடும்.

அறிவியல், முதலில் நுட்பமான தொடர்ச்சியான பார்வையாலும், அதன்பின் காய்ப்பு உவப்பற்ற புள்ளிவிவரங்களாலும், அதன் பின்னர் உலகின் பல மூலைகளிலும் நடக்கின்ற ஆய்வுகளாலும், அவற்றைக் குறித்து நடக்கின்ற விவாதங்களாலும் கட்டமைக்கப்படுகிறது. வணிகம் கட்டமைக்கும் பொய்யோ போலி அறிவியல் பேசும் சான்றோ நெடுநாள் நிலைக்க வாய்ப்பில்லை.

மொழிகள் வேறு… புரிதல் ஒன்றே!

‘மேக நோயின் அவஸ்தைகள்’ என சித்த மருத்துவம் பாடல் பாடி, குறைந்தபட்சம் 1,500 வருடம் இருக்கும். அதில் பிளவைக் கட்டிகள் எனப் பாடியதை, இப்போதைய நவீன அறிவியல் சொல்லும்  ‘டயாபட்டீக் கார்பன்கிள்’ (Diabetic carbuncle) எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘சிறுநீரின் புளித்த பழச்சாற்றின் நாற்றம்’ என்ற வரிகளுக்குப் பின்னர், நவீனத்தின் ‘கீட்டோ அசிடோசிஸ்’ (ketoacidosis) என்ற புரிதலும், சிகிச்சை அளிக்கப்படாத, கவனிக்கப்படாத மதுமேகம் ‘இளைத்துக் கொல்லும்’ என்ற வரிகளுக்குப் பின்னர், ‘எமாசியேட்டிங் மல்ட்டி ஆர்கன் ஃபெயிலியர்’ (emaciating multi organ failure) என்ற நிலைப்பாடும் உள்ளது.

அறிவியலின் அலகுகள், மொழிகள் வேறுபட்டிருந்தாலும் புரிதல் ஒன்றே என்பதற்கு இந்த இரு மருத்துவத் துறை இலக்கணங்கள்தாம் சான்று. எனவேதான், எந்தத் துறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்,  உடல் நலமாக இருந்தாலும் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள்  இருக்கிறதா என்பதை அறிந்திருப்பது மிகமிக நன்று.

காலை வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரையைச் சோதித்துப் பார்ப்பது, சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை மிக எளிதாய் உணரும் வழி. 10-11 மணி நேர இடைவெளிக்குப் பின்னர், அதன் அளவைச் சோதிக்க வேண்டும். இடையில் இரவு உணவுக்குப் பின்னர், புகைப் பிடித்தல், இரவு உணவோடு மது, காலையில் சர்க்கரை போடாத பானம் அருந்துதல் எதுவும் நிச்சயம் இருக்கக் கூடாது. நல்ல ஆழ்ந்த தூக்கம் இருப்பது அவசியம். இரவு பயணத்துக்குப் பின்னான சர்க்கரை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தம் எடுப்பதைக் கவனிக்க

வழக்கமாக, சோதனைச் சாலையில் நாம் எடுக்கும் ரத்தம், ரத்த நாளங்களில் (venous blood) இருந்து உறிஞ்சப்படுவது. நாளத்தில் ரத்தம் நன்கு அழுத்தத்துடன் வர, முழங்கையின் மேலே ‘டார்னிக்’ (Tornique) எனும் கருவியால் இறுகக் கட்டி ஊசி மூலம் ரத்தத்தை எடுப்பார்கள். கயிறு இறுக்கியதும் ரத்தம் எடுக்க வேண்டிய நாளம் வெளிப்பட்ட பின்னர், உடனடியாகக் கயிறை இளக்கிவிட வேண்டும்.

பிறகுதான், ரத்தம் எடுக்கப்பட வேண்டும். 5-6 நிமிடங்கள் இறுகக் கட்டி வைத்து அதில் புடைக்கும் நாளத்தில் ரத்தம் எடுப்பது 20-25 மிகி  அளவைக் குறைத்துக் காட்டிவிடும். உங்கள் சோதனையின்போது, இப்படியான முறை பின்பற்றப்படுகிறதா எனக் கவனிப்பது நல்லது.

நல்ல ரத்தம் பாயும் ரத்த நாடியில்தான் (arterial blood) நாளங்களைவிடத் துல்லியமாகச் சர்க்கரை அளவைக் கணக்கிட முடியும் என்றாலும், ஆர்ட்டரியில் ரத்தம் சேகரிக்க முடியாது என்பதாலேயே, புற நாளங்களில் சோதனை செய்யப்படுகிறது. வீட்டில் சோதிக்கப்படும் ரத்த நுண்குழாய்ச் சர்க்கரைகளில், அதன் அளவு முழங்கை நாளத்தில் எடுக்கும் அளவுக்குச் சற்றுக் கூடுதலாகவோ/குறைவாகவோ இருக்கலாம்.

இருப்பினும் பெரும் வேறுபாடு இருப்பதில்லை. உடனடி நிலை அறிய, நுண்நாளங்களில் (capillary sugar levals) சர்க்கரையை குளுகோமீட்டர்கள் உபயோகிக்கப்பட்டாலும், எடுத்துவரும்  சிகிச்சையை மாற்ற நாள சர்க்கரை அளவே உலகெங்கும் கணக்கிடப்படுகிறது.

‘இனிப்பு’டன் விடிகிறதா காலை..?

சில சர்க்கரை நோயாளிக்கு அதிகாலைச் சர்க்கரை அளவு எப்போதும் உயர்ந்தே இருக்கும். நவீன மருத்துவம் அதனை ‘டாவ்ன் சிண்ட்ரோம்’ (dawn syndrome)  என்கிறது. அதிகாலையில் உடலில் இயல்பாகக் கூடும் ரத்த கார்டிசால் அளவு, உடலை வளர்க்கும் ஹார்மோன்கள் ஆகியவை இன்சுலின் பயன்பாட்டை மந்தப்படுத்துவதால் இந்த உயர்வு இருக்கும் எனக் கருதுகிறார்கள்.

இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்காதவர்கள், ஆஸ்துமா நோயில் அவதிப்படுவோர், அதி தொப்பையும் குறட்டையுமாய் ‘ஸ்லீப் ஏப்னியா’ (sleep apnea) பிரச்சினையால் தூக்கமில்லாது அவதிப்படுவோர் ஆகியோருக்கு ‘டாவ்ன் சிண்ட்ரோம்’ வர சாத்தியம் அதிகம்.  அதிகாலைச் சர்க்கரை எப்போதும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது என்றால், முதலில் இதர பின்னணிக் காரணங்களைச் சரி செய்ய வேண்டும்.

HbA1C  சோதனை ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு,  கடந்த 3 மாதங்களில் சரியாக இருந்திருக்கிறதா என்பதை அறியும் சோதனை. ரத்தச் சிவப்பணுக்களில் ஒட்டியிருக்கும் ‘கிளைக்கோஜன்’ கூறுகளை வைத்தும், சிவப்பணுக்களின் 120 நாட்கள்  வாழ்நாளைக் கொண்டும் இது கணக்கிடப்படுகிறது.

வெகு சமீபமாக, ‘6 - 6.5 அளவுதான் மிகச் சிறந்த கட்டுப்பாடு என்ற நிலைப்பாடு தவறு. 7 – 7.5 வரை இருக்கலாம்’ என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. ரத்தச் சோகை, சிறுநீரகப் பாதிப்பில் வரும் ‘யுரீமியா’ நிலை ஆகியவற்றின்போது இந்தச் சோதனையின் முடிவு துல்லியமாக இராது.

‘நலமாக உணர்கிறேன்’ என்பதற்கும் ‘நலமாக இருக்கிறேன்’ என்பதற்கும் இடையே, வெகுஜனம் புரிந்துகொள்ள இயலாத அறிவியல் இருக்கிறது. பல்வேறு சமூக அழுத்தங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் அவர்களின் நலனை, அந்த அறிவியலை உணர்ந்து, அறம் சார்ந்து பயன்படுத்துவது எல்லாத் துறை மருத்துவருக்கும் மிக முக்கியக் கடமை.

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்