அரவணைப்பே தற்கொலைக்கான தடுப்பு மருந்து!

By நீரை மகேந்திரன்

உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் - செப்டம்பர் 10


‘தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம். புரிந்துகொள்ளவே முடியாதது’  என்கிறார் உளவியல் மருத்துவர் கே. ரெட்ஃபீல்டு ஜேமிசன். உலகில், சாதாரண மனிதர்கள் முதல்  சாதனை நிகழ்த்தியவர்கள் வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நீளமானது.

தற்கொலை எண்ணம் உருவாவதற்கான காரணங்கள், நபர்களைப் பொறுத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாகவே தற்கொலை முடிவுகள் நம்பப்படுகின்றன என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாக இருக்கிறது என்றால், வேலையில்லாத விரக்தி இன்னொருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது.

சமீபகாலமாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, விபத்து, விவாகரத்து எனக் குடும்ப அமைப்புகளின் சிதைவால் ஏற்படும் குழப்பம், காதல் பிரச்சினைகளில் ஏற்படும் கோபம், பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வதாக அமைகிறது. இளைஞர்கள் மிக எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

ஆனால், தற்கொலை செய்துகொள்ள முனைபவர்கள் சாக விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம்தான் நம்மிடம் இருக்கிறது.  உண்மையில், ‘அவ்வாறு முயல்பவர்கள் அந்தச் சூழலில் இருந்து தங்களைக் காப்பாற்ற யாருமில்லையே, தங்களை அரவணைக்க யாருமில்லையே’ என்ற அழுத்தத்தில்தான் அப்படியான முடிவைத் தேடுகிறார்கள் என்கிறார் வெ. இறையன்பு.

தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல்களை எழுதி வந்தவர், தற்போது தற்கொலை எண்ணத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க, ‘உச்சியிலிருந்து தொடங்கு’ என்ற தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி நூலைக்கொண்டு வந்திருக்கிறார். ‘உலகத் தற்கொலைத் தடுப்பு நாளை’ முன்னிட்டு அவருடன் உரையாடியதிலிருந்து ...

இன்றெல்லாம் மிக இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்களே. என்ன காரணம்?

சிறு வயதில் பாலியல்தொல்லை களை அனுபவித்தவர்கள் வளர்ந்த பிறகு, அவர்களிடையே தற்கொலை எண்ணம் தலைதூக்குவதற்கு ஐந்து மடங்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சின்ன வயதில் ஒரு குழந்தை எப்படி நடத்தப்படுகிறது என்பதுதான், அதன் தன்னம்பிக்கைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

suicide 2jpg

ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர், தற்கொலையில்தான் சாவார் என்பது உண்மையா?

தற்கொலை குறித்து நிறைய கற்பிதங்கள் இருக்கின்றன. தற்கொலை பற்றி நிறையப் பேசுகிறவன் செய்ய மாட்டான், ஒரு முறை தோற்றவன் மறுபடி முயல மாட்டான், சோர்ந்திருந்தவன் மகிழ்ச்சியடைந்தால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டான், தற்கொலை செய்யத் தீர்மானித்து விட்டவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பன போன்ற பல பொய்யான தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன.

எப்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சாப்பிடுவதிலும், தூங்குவதிலும் பெரிய வித்தியாசம் இருப்பது, நண்பர்களிடமிருந்தும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் விலகியிருப்பது, போதைப்பொருள் உட்கொள்வது, தோற்றத்தில் அக்கறையில்லாமலிருப்பது, பள்ளிப் பாடங்களைப் புறக்கணிப்பது, விரும்பும் செயல்களைச் செய்யாமலிருப்பது, மற்றவர்கள் பாராட்டைப் பொருட்படுத்தாம லிருப்பது, வன்மத்துடன் செயல்படுவது, வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டுவது, பழக்கவழக்கங்களில் மாற்றம், சாவு குறித்த புத்தகங்களை அதிகம் வாசிப்பது போன்றவை எச்சரிக்கைக்குரிய நடவடிக்கைகள்.

வன்மத்தின் அடிப்படையில் நிகழும் தற்கொலைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

வன்மத்தை மற்ற வர்கள் மீது திருப்பினால் அது கொலை. தன் மீதே திருப்பிக்கொண்டால் அது தற்கொலை. திருமணமான  ஏழு ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் மரணங்களை நான் சார் ஆட்சியராக இருந்தபோது விசாரித்திருக்கிறேன். அவர்களில் பலர் சின்ன மனஸ்தாபத்தில் மடிந்து போனவர்கள். தன் சாவால் கணவனோ மாமியாரோ வருத்தமடைய வேண்டும் என்ற நோக்கமே அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது.

தற்கொலை தவறு என்ற புரிதல்கொண்ட படித்தவர்கள்கூட தற்கொலைதான் தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதேன்?

பணியிடத்தில் கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட காயங்கள், அது ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை காரணமாக இத்தகைய தற்கொலைகள் நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அதிக அளவில் நடைபெறுகிறது.

தற்கொலைகளைத் தடுக்க, ஒரு நிர்வாகியாக நீங்கள் சொல்லும் தீர்வு என்ன…?

வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டிய வேலை இது. மதிப் பெண்களோ பணமோ முக்கியமல்ல என்பதைக் குழந்தைகளிடம் பெற்றோர் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். குழந்தைகளின் போக்கை அறிந்து அதற்கேற்றவாறு ஆலோசனை, மனநல மருத்துவம் போன்றவற்றால் சரி செய்ய முயல வேண்டும். நண்பர்களும் பதின்ம வயதில் வித்தியாசமான போக்குடைய மாணவர்களை அறிந்து, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதற்கடுத்து, போதைப் பொருட்களை உட்கொள்கிறவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. முதியவர்களின் தனிமையைப் போக்கும் சூழலும் அவசியம். இவற்றை ஒரே நாளில் மேற்கொண்டுவிட முடியாது. ஆனால், இவை குறித்த விழிப்புணர்வு அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்