இனிப்பு தேசம் 22: மனசு இனிக்கச் சாப்பிடுவோம்…

By கு.சிவராமன்

இரவு விருந்துப் பழக்கம், கடந்த இரு தலைமுறைகளில் பற்றிக்கொண்ட புதுப் பழக்கம். இந்தப் பழக்கம் நம் நலத்திலும் மனத்திலும் நிறையவே தீங்குகளை விதைத்துவிட்டது. சனிக்கிழமை இரவு தமிழகத்தின் அத்தனை நகர்ப்புறத்து உள்வட்ட சாலைகள், குறிப்பாக, உணவு விடுதிகள் உள்ள சாலைகளில் பயணிக்க வழியின்றி, ‘பார்க்’ செய்யப்பட்ட வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

அன்று இனக்குழுக்களாகத் திரிந்தபோது, இரவில் நிலவொளியில் கள்ளருந்தி ஆடிக் களித்த வரலாறிருந்தால்கூட, அந்த வாழ்க்கையின் உடலுழைப்பையும் அப்போதிருந்த  தேக வன்மையையும் இப்போதைய நம் உடலோடு கனவிலும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

இரவு உணவு என்பது ‘இயலாதவன் உணவு போல’ நலிந்து, குறைவாக இருக்க வேண்டும் என்பது நம் மரபு சொன்ன உணவு விதி. ஆனால், ‘இரவுதான் களிப்புக்கான நேரம் உள்ள பொழுது’ என சந்தை நாகரிகம் மொத்தமாய் நம்மை மாற்றிவிட்டது. சிறு, எளிய உணவாக இருக்க வேண்டிய இரவு உணவு, பேருண்டியாய், அதிக கலோரி உணவாக மாறிப்போனது. இனிப்பு நோயின் பெருக்கத்துக்கு மிக முக்கியக் காரணம் இது.

இரவில் எதைச் சாப்பிடலாம்?

அநேகமாக, சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் படுக்கப் போகும் பழக்கமுள்ளோருக்கு இரவு உணவு முதலில் குறைந்த கலோரியைத் தருவதாக இருக்க வேண்டும். இரவு,   சந்திரனுடைய ஆட்சி. உடல் பிரபஞ்சத்தின் குளிர்ச்சியிலிருந்து தன்னைப் பாதுகாக்க, சற்று வெம்மையாகத் தன்னை வைத்திருக்கும் நேரம்.  அப்போது நாம் சாப்பிடும் உணவு கண்டிப்பாகக் கூடுதல் வெம்மையைக் கொடுத்துவிடக் கூடாது. கூடுதல் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடாது.

கொள்ளுப்பயறு, எண்ணெய்யில் பொரித்தது, கோழிக்கறி, பரோட்டா  இவை கொஞ்சம் சூட்டைத் தருபவை. தர்பூசணிப்பழம், வெள்ளைப்பூசணிக் கூட்டு, நீர்க்காய்கறிகள், புளிப்பான பழங்கள் போன்றவை குளிர்ச்சியைத் தருபவை. இரண்டுமே ஆகாது. வெம்மையும் குளிர்ச்சியும் அளவாய்த்தரும் இட்லி ஆகச் சிறந்தது.

அதுவும் குறிப்பாக வெள்ளை அரிசி இட்லிக்குப் பதிலாய், சிறுதானியமான குதிரைவாலியில் செய்த இட்லி சிறந்தது. தானியங்களை அரைத்து மாவாக்கிவிட்டால் அது முழு தானிய உணவு அளவுக்குச் சிறந்தது இல்லை என்றாலும்,  பிற  ‘ரெடி டு ஈட்’ உணவு வகைகளைக் காட்டிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கோதுமை உணவு வகைகள், உடற்சூட்டைத் தரக்கூடியவை. குறிப்பாக மைதா சேர்ந்த உணவு வகைகள். குறைவான அளவில் முழு, பட்டை தீட்டாத கோதுமை உணவை எடுப்பதை (வாரம் ஒரு நாள் போல) ஏற்றுக்கொள்ளலாம். அதையும் கோதுமை ரவை கிச்சடி (பல காய்கறிகளுடன்) என எடுப்பது நல்லது. வேகவைத்த காய்கறிகளுடன், கொஞ்சமாய் ஞவரை அரிசிச் சோறு, மோரும் வெங்காயமும் சேர்த்த  கம்பங்கூழ், முடக்கறுத்தான் தோசை, பாலக் கீரை போட்ட புல்கா சப்பாத்தி என இரவு உணவு இருப்பது சிறப்பு.

எந்தத் தானிய மாவாக இருந்தாலும், கூடவே நிறைய நார்ச்சத்துள்ள வேகவைத்த காய்கறியைச் சேர்க்கும்போது, இரவில், தானியத்தின் சர்க்கரை, ரத்தத்தில் வேகமாகக் கலக்காது.

இரவு உணவுக்குப் பின்னர்?

இரவு உணவுக்குப் பின், மெல்ல ஒரு குறு நடை (20-30 நிமிடங்கள்) நடப்பது நன்று. சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவது,  ‘டெஸர்ட்’ எனச் சொல்லி, உணவுக்குப் பின்னர் பழத்துண்டுகள், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லதல்ல. பழங்களை உணவுக்கு முன்னதாக மாலை 6-7 மணி போல சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் மா, பலா, வாழை இரவில் கண்டிப்பாக வேண்டாம்.

சர்க்கரை வியாதியின் வலியில்லா மாரடைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில் ஏற்படுவதற்கு, இரவில் சாப்பிடும் மதுவும் பெருவிருந்தும் மிக முக்கியக் காரணம். விசேஷ நிகழ்வுகளில் அவசியமில்லாத, அளவற்ற  இனிப்புகளுடன் கொண்டாடப்படுவது இங்கே பெருகிக்கொண்டிருக்கிறது.

இலையில் மூன்று இனிப்பைப் பரிமாறுவதும், பெருவாரியான உணவைத் தூர எறிவதும் நாம் சமூகத்துக்குச் செய்யும் பெருங்குற்றம். வளர்ந்த ஒரு நாட்டில், ஒரு நாள் தூர எறியும் உணவின் அளவு சகாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள 21 ஏழை நாடுகளின் ஒரு வருட உணவாம்!

விருந்தில் வீட்டுச் சாப்பாடு!

சர்க்கரை நோயாளிகள், ‘பஃபே’ உணவை இரவில் தவிர்ப்பது நல்லது. கொடுத்த காசுக்கு அல்லது செய்த மொய்க்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் என 15 வகையில் ஒவ்வொன்றிலும் ஒரு கரண்டி என எடுத்தாலும் முடிவில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நாம் சாப்பிட்டிருப்பது சுமார் 1,100 கலோரியைத் தாண்டியிருக்கும். இனிப்பு நோயர், திருமணத்துக்குப் போனால், ‘நல்லா இருங்க’ என மணமக்களிடம்  கைகுலுக்கிவிட்டு, சமர்த்தாக வீட்டில் வந்து சாப்பிடுவது சாலச் சிறந்தது.

கடற்கரை வரை இருசக்கர வாகனத்தில், மனைவியுடன் காதல் நிரம்பப் பயணித்து, சற்று அலையோடு விளையாடி, காற்றோடு உறவாடி, கொஞ்சம் கடல் மணலில் ஓடி, கடைசியாக வீட்டில் சுட்ட சோளப் பணியாரத்தை, கெட்டியான  காரச் சட்னியோடு தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள்… அடடா, ஏகத்துக்கு இனிக்கும். ரத்தத்தில் இல்லை, மனத்தில் மட்டும். ஆம் நண்பர்களே… விருந்தில் இனிக்க வேண்டியது நா அல்ல. மனசு!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்