தன் மகன் மூன்றாம் வகுப்பு முடிக்கும்வரை நன்றாகப் படித்தான். என்னவோ தெரியவில்லை நான்காம் வகுப்பில் அவன் படிப்பில் கவனம் குறைந்துவிட்டது என்று பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் வருத்தப்பட்டார் ஒரு தாய். அதற்கு அந்தப் பாட்டி, ‘உங்க மகனுக்குக் கண் பரிசோதனை செய்யுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’ என்று கருதிய அந்தத் தாயும் பாட்டி சொன்னபடி, கண் மருத்துவரை அணுகினார். அந்தக் குழந்தையைப் பரிசோதித்த கண் மருத்துவர், அந்தக் குழந்தைக்குக் கிட்டப் பார்வைக் குறைபாடு இருப்பதாகக் கூறிக் கண்ணாடி கொடுத்தார். அதற்குப் பின் அந்தக் குழந்தை முன்பு போல நன்றாகப் படிக்கத் தொடங்கிவிட்டது.
மாணவர்கள், 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது விரல்களின் நீளம் மாறுபடுவதைப் போல, அவர்களது கண் அளவும் மாறுபடும். அதனால் கண்களில் கிட்டப் பார்வை (Myopia), தூரப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) போன்ற பார்வைக் குறைபாடுகள் ஏற்படலாம். பெரும்பாலும் தூரப் பார்வையால்தான் பலர் பாதிக்கப்படுவார்கள்.
படம் பிடிக்கும் கேமராவைப் போலத்தான் நம் கண்களும். நாம் பார்க்கும் பிம்பங்கள் ஒளியாக நம் கண்களின் கருவிழி (cornea) லென்ஸ் வழியாகச் சென்று, கண் விழித்திரையின் (Retina) மையப் பகுதியில் விழுந்து, அங்குள்ள பார்வை நரம்பு (Optic nerve) வழியாக மூளையை அடைந்து, அது நமக்குக் காட்சியாகத் தெரிகிறது.
» அசாம் | சாலையோர தள்ளுவண்டி கடையில் பானிபூரி சாப்பிடும் யானை
» மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தீர்வுகள் | உலக மூட்டு நோய் தினம் சிறப்புப் பகிர்வு
கண்ணில் விழித்திரையின் மையப் பகுதியில் விழ வேண்டிய ஒளியானது, மையப் பகுதிக்கு முன்பாகவே விழுந்தால் அது கிட்டப் பார்வை என்றும், மையப் பகுதிக்குப் பின்பாக விழுந்தால் அது தூரப் பார்வை என்றும், சிதறி விழுந்தால் அது சிதறல் பார்வை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதன் மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர், 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள்தாம்.
இவர்களில் 12 சதவீதத்தினர் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, சிதறல் பார்வை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? - உங்கள் குழந்தை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் அமர்ந்து பார்க்கிறது என்றால் அதற்குக் கிட்டப் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகள், கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தாலோ, கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தாலோ, அடிக்கடி கண் கட்டி வந்தாலோ அந்தக் குழந்தைக்குக் கண் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அடிக்கடி குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்பட்டாலும், பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்று உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தைகள் வெயிலில் கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தால், அவர்களின் விழித்திரையில் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விழித்திரை விலகல் மற்றும் கிளாக்கோமா வரவும் சாத்தியமுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இதன் பாதிப்பைத் தடுக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதால், பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.
ஆசிரியர்களின் பங்கு என்ன? - சமீபத்தில், தன் மருத்துவமனைக்கு அருகிலிருந்த பள்ளி ஒன்றில் உள்ள மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யச் சென்றிருந்தார் கண் மருத்துவ நண்பர் ஒருவர். அப்போது 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவர், தனது கண் மங்கலாகத் தெரிவதாகவும், தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் ‘பவர்’ அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதாகவும், கரும்பலகையில் எதையாவது எழுதி ஆசிரியர் படிக்கச் சொன்னால் கண்ணாடி போட்டாலும் சரியாகத் தெரியவில்லை என்றும் புலம்பியிருக்கிறார்.
அந்த மாணவனின் கண்களைப் பரிசோதித்தபோது அவருக்கு ‘கேரட்டோகோனஸ்’ (keratoconus) என்ற கருவிழிக் கோணல் பார்வை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக கொலாஜன் கிராஸ் லிங்க் (collagen cross linking) என்ற சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய கருவிழி பாதிப்பு அதிகமாவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும், பக்கத்தில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள், நோட்டில் அடித்து அடித்து எழுதுபவர்கள் ஆகியோரை அழைத்து வாருங்கள் என்று அந்த மருத்துவர், ஆசிரியர்களிடம் கூறினார். மாணவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவர்களில் பலருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மாணவன், ஆசிரியர் பாடம் நடத்தும்போது கரும்பலகையில் உள்ள எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லையென்றால் பக்கத்துப் பையனைப் பார்த்து ‘காப்பி’ அடிப்பான். அப்போது நோட்டில் அடித்து அடித்து எழுதுவான். இப்படி இருந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இப்படியான மாணவர்களைக் காண நேர்ந்தால், உடனே அவர்களைத் திட்டவோ அடிக்கவோ செய்யாமல், ஒவ்வொரு மாணவனையும் கடைசி பெஞ்சில் அமர வைத்து, அதாவது இருபது அடி தூரத்தில் அமரவைத்து ஒரு கண்ணைக் கையால் மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் கரும்பலகையில் எழுதுவது தெரிகிறதா என்று ஆசிரியர் பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.
மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதுகுறித்து விளக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பார்வையைக் கொடுப்பது நம் சமூகக் கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் உணர வேண்டும். நல்ல பார்வையே தொலைநோக்கில் பார்வையைக் கொடுக்கும்!
பார்வைக் குறைபாட்டைத் தடுக்க…
# ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்கும் முன் மற்றும் வருடம் ஒரு முறை என முழுக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களான கேரட், கீரை வகைகள், காய்கறிகள், பப்பாளி, மீன், பால், முட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
# குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெளிச்சம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்குக் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். அதை விடுத்து நாமாகவே வைத்தியம் செய்யக் கூடாது.
# வீடியோ கேம், செல்போன் விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து, டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற இதர மைதான விளையாட்டுகளில் அவர்களைக் கவனம்செலுத்த வைக்க வேண்டும்.
கட்டுரையாளர், அரசு கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago