“ஓவர் உற்சாகம் உடம்புக்கு நல்லதில்லை” எனச் சொல்லிக் கேட்டிருப்போம். அது ஒருவரின் விஷயத்தில் உண்மையாகிப் போனது. அவருக்கு வயது இருபத்தைந்து இருக்கும். பட்டப்படிப்பு முடித்தவர். அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
சென்ற வாரம்வரை மிக அமைதி யாக பணி செய்து வந்தவர்தான். திடீரென அவருடைய செயல்களில், ஒரு விதமான மாற்றம். 10 மணிக்குத் தொடங்கும் அலுவலகத்துக்குக் காலை 7 மணிக்கே போய்விடுகிறார். அதுமட்டுமில்லை. தினமும் விதவிதமான, கலர் கலரான உடைகளை அணிந்து செல்கிறார். மிக உற்சாகமாக எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கிறார். தன் வேலை போக, பக்கத்து சீட்டில் உள்ளவரிடமும், “ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க”ன்னு கேட்டு வாங்கிச் செய்றார்.
"இன்னும் ஒரு வாரத்தில் மேலாளர் ஆகிவிடுவேன்" என்று அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கூறுகிறார். எப்போதும் ஏதோவொரு பாடலைச் சந்தோஷமாக முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார். "தான் ஒரு சூப்பர்மேன் என்றும், தன்னால் எதையும் சாதிக்க முடியும்" என்றும் சொல்கிறார்.
அலுவலக நண்பர்களும் முகதாட்சண்யத்துக்காக சிறிது நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தாலும், பின்னர் அவர் மீது எரிச்சல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் இரவிலும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருக்கிறார் என அவருடைய வீட்டாரும் சொல்கிறார்கள். இவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் இப்போது எல்லாருடைய கேள்வியும். இந்தக் கேள்விக்கான பதிலை விளக்குகிறார் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரும் மனநல மருத்துவருமான ஒய். அருள்பிரகாஷ்:
அதி உற்சாகம்
இதேபோல் ஒருவரை என்னிடம் அழைத்துவந்தனர். அவரது பிரச்சினை இதைப் போன்றதுதான். ஆனால், சற்றே வித்தியாசமானது. அவர் செய்த காரியம் என்னவென்றால், திடீரென அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று ஒரு லட்ச ரூபாய் பணம் எடுத்துள்ளார். பிறகு ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு உறவினர்கள் அனைவரின் வீட்டுக்கும் சென்றுள்ளார். எல்லோரது வீட்டுக்கும் ஸ்வீட், பழம் என விதவிதமான தின்பண்டங்களை வாங்கிச் சென்று கொடுத்துள்ளார். அது அவருடைய வழக்கத்துக்கு மாறானது.
அதேபோல எதிரில் வருபவர்கள் எல்லோருக்கும் பணத்தை வாரிவாரி வழங்கியிருக்கிறார். “ஏன் இப்படி வீணாகச் செலவழிக்கிறீர்கள்?” என்று கேட்டவர்களிடம், “நான்தான் நிகழ்கால வள்ளல். எதிர்காலத்தில் இந்தியப் பிரதமர் ஆகப் போகிறேன்” எனச் சொல்லியிருக்கிறார்.
அவர் கூறியதை எதிர்த்து யாரேனும் பேசிவிட்டால் அவ்வளவுதான், என்ன நடக்கும் என்பது தெரியாது. அப்படிப் பேசிய ஒருவரைக் கோபப்பட்டுக் கன்னத்தில் அறைந்துவிட்டார். என்னிடமும், “டாக்டர், உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்! கார் வேண்டுமா, பங்களா வேண்டுமா, உங்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆக்க வேண்டுமா? கேளுங்கள் செய்து தருகிறேன்” என்று சொன்னார்.
சூப்பர் பவர் உண்மையா?
இந்த இரு நோயாளிகளின் பிரச்சினைகளும் வெவ்வேறான வையாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒருவகையில் ஒன்றுதான். இருவருக்கும் அடிப்படையில் மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகள் அளவுக்கு அதிகமாகவும், சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. இதனால்தான் அவர்கள் அளவு கடந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறார் கள். அதன் வெளிப்பாடுதான் கலர் கலராக உடுத்துவது, ஊர் ஊராகச் சுற்றுவது, பணத்தை வாரி இறைப்பது போன்ற செயல்கள் எல்லாம்.
இவர்கள் தங்களுக்கு மிதமிஞ்சிய சக்தி (சூப்பர் பவர்) இருப்பதாக நம்புகிறார்கள். இப்படிச் சுயக் கட்டுப்பாட்டை மீறிய மிதமிஞ்சிய உணர்ச்சிகளும் எண்ணங்களும் மனத்தை ஆக்கிரமிக்கும் நிலையை மனஎழுச்சி நோய் (Mania) என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் செயலும் சிந்தனையும் (Psychomotor Activity) அதீத வேகத்தில் காணப்படும்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் தன்னைக் கடவுளுக்கு இணையாகக்கூட நினைப்பார்கள். அவர்களைத் தூண்டினால் அல்லது எதிர்த்தால் பயங்கரமான கோபம் வந்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட செயல்பாடுகள், மிதமான நிலையில் இருக்கும். அதை மிதமான மனஎழுச்சி (Hypomania) என்கிறோம்.
எதிரெதிர் துருவங்கள்
ஒரு சிலருக்கு இதே நோய் வேறு விதமாகவும் வெளிப்படலாம். அதாவது ஆரம்பத்தில் ஒரு சில நாள்கள் மிகுந்த மன வருத்ததுடன் இருந்துவிட்டு, பின்னர் திடீரென அளவில்லாத சந்தோஷத்தில் திளைப்பார்; உற்சாகமாக இருப்பார். இப்படி மனவருத்தமும் மனஎழுச்சியும் இரு வேறு துருவங்கள் போன்று அடுத்தடுத்து வருவதை இரு முனை அல்லது இரு துருவ மனஎழுச்சி நோய் (Bipolar Mood Disorder ) எனச் சொல்கிறோம். இந்நோய் பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை எனச் சுழற்சி முறையிலும் வரலாம்.
மூளையில் செய்திப் பரிமாற்றம் செய்யும் சில அலைபரப்பி நரம்புகளில் (Neuro transmitters) ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மையே, இந்த மனப் பிரச்சினைக்கான முக்கியக் காரணம். மனரீதியாக பலவீனமாக உள்ளவரையும், இந்த மனஎழுச்சி நோய் தாக்க வாய்ப்புண்டு.
என்ன சிகிச்சை?
சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய மனநோய் இது. பிரச்சினை இருந்த சுவடே தெரியாமல், ஒருவருக்கு இந்த நோயைக் குணப்படுத்த முடியும். இது போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்த உடனே மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
சிலர் பேய், பிசாசு பிடித்துள்ளதாகத் தவறாக நினைத்து, அதற்கான வழிகளில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயல்வர்கள். ஆனால், அதனால் தீர்வு கிடைக்காது. மேலும், இதனால் மனப் பிரச்சினை முற்றக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்தப் பிரச்சினையைக் குணப்படுத்துவதில் மனத்தை நிலைப்படுத்தும் மருந்துகள் (Mood stabilizer) முக்கியப் பங்கு வகிக்கிறன.
மருத்துவர் அருள் பிரகாஷ் தொடர்புக்கு: arulmanas@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago