சிகிச்சை டைரி 03: நடுக்கம் தரும் நினைவுகள்

By முகமது ஹுசைன்

அது 1994 ஏப்ரல் என்று நினைக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடிந்து தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நாட்கள் அவை. ஒரு நள்ளிரவில் தூக்க மாத்திரைகளை நண்பன் சாப்பிட்டுவிட்டான். அவனை காரில் தூக்கிப் போட்டு மதுரைக்கு விரைந்தோம். திடீரென்று அவனுடைய அம்மா என்னிடம் “நீதான்டே அவனுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு. எதுக்குடே இப்படிப் பண்ணினான்? என்னடே பிரச்சினை அவனுக்கு?” என்று கேட்டபடி அழுதார்.

விடை தெரியாத புதிர்

எங்கள் நண்பர்கள் குழுவிலேயே அவன்தான் தைரியசாலி. நகைச்சுவை உணர்வும் மிகுந்தவன். வயதுக்கு மீறிய மனமுதிர்ச்சியும் பக்குவமும் அவனுக்கு உண்டு. எதையும் வித்தியாசமான கோணத்தில் அவன் அணுகுவான். நிறை யப் படிப்பான். பெண்களைத் திரும்பிப் பார்க்க மாட்டான். கெட்ட பழக்கமும் கிடையாது. என்ன ஆயிற்று இவனுக்கு என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன், விடை எதுவும் கிடைக்கவில்லை.

நர்ஸின் அதட்டல்

அதிகாலை மூன்று மணிவாக்கில், மதுரையின் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றை அடைந்தோம். அங்கே அவனது வாயில் குழாயைச் செருகி, அதன் மறுமுனையில் புனலைச் செருகி, மருந்து கலந்த தண்ணீரை ஊற்றினார்கள். குழாய் வாயில் செருகப்பட்டிருந்த நிலையிலேயே அவன் வாந்தி எடுத்தான். அடிவயிற்றைப் பிடித்தபடி அவன் ஏதோ சொல்ல முயன்றான். ஆனால், அவன் சொல்வதைக் கேட்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை.

 தண்ணீர் உள்ளே ஊற்றப்படுவதும் வாந்தி எடுப்பதும் தொடர்ந்தது, அவன் வயிற்றில் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட உடன், படுக்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். நரம்புகளில் ஏதேதோ ஊசிகள் போடப்பட்டன. ட்ரிப்ஸ் ஆரம்பமானது. உடம்பிலிருந்து கழிவு வெளியேற, அவனது மூக்கில் டியூப் செருகப்பட்டது. மூக்கும் தொண்டையும் வலிப்பதாக முனகினான். ‘மாத்திரை போடும்போது மட்டும் இனித்ததோ’ என்று நர்ஸ் அதட்டினார்.

மூர்க்கமாக்கிய மருந்து

காலை ஆறு மணிவாக்கில், மதுரையின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் வந்தார். அவனிடம் தனியே பேச முயன்றார். எதிர்பார்த்த பதில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே ஆழ்தூக்கச் சிகிச்சையில் ஈடுபட்டார். அப்போதுதான் அது காதல் விவகாரம் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. அந்த மருத்துவர் உடனடியாகத் தனது சிகிச்சையைத் தொடங்கினார். அவரது மருந்து நரம்புவழி உள் சென்ற அடுத்த சில மணிநேரத்தில் அவன் மூர்க்கமானான். அப்போது நாங்கள் வெளியே நின்றுகொண்டிருந்தோம்.

திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு உள் நுழைந்தால், அவன் கை, கால் எல்லாம் ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது. ஊசியைக்கொண்டு தன்னைத் தானே அவன் காயப்படுத்தியுள்ளான் என்பது புரிந்தது. மருத்துவர், தனது மருந்தின் அளவை அதிகரித்தார். அவன் படுத்த படுக்கையானான், மருத்துவ மொழியில் சொன்னால், வெஜிடபிள் ஸ்டேட்டில் இருந்தான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இப்படியே கழிந்தன. அதன்பின் அவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

எல்லாம் பயமயம்

வீட்டுக்கு வந்த பின்னும் அவன் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுநீர் கழிக்க முடியாமல், மலம் கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். அவன் சிறுநீர் கழிப்பதற்குச் சுமார் 15 நிமிடங்கள் ஆனது. நரம்புத் தளர்ச்சியும் அவனுக்கு அதிகமாக இருந்தது. தண்ணீர் டம்ளரைக்கூட அவனால் தூக்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் பயப்படத் தொடங்கினான். தனியாக இருக்க, தனியாக நடக்க, தனியாக பாத்ரூம் செல்ல, புது நபர்களைச் சந்திக்க என அனைத்துக்கும் பயந்தான்.

திடீரென்று அவனைப் பார்க்கும் அனுமதி எனக்கு மறுக்கப்பட்டது. அவன் சித்தப்பாவுடன் எப்போதாவது வெளியே வருவான். அப்போது எல்லாம் அவன் தலையைக் குனிந்தபடியேதான் செல்வான். அவன் நடந்துசெல்லும்போதுகூட அவனது கை விரல்கள் நடுங்கியபடி இருந்தன.

நினைவில் நில்லா நினைவுகள்

ஆறு மாதங்களுக்குப்பின் ஒரு நாள், மீண்டும் அவன் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என்னைக்கூட அவன் மிரட்சியுடன்தான் பார்த்தான். மருந்தின் பக்க விளைவுகள் கண்கூடாகத் தெரிந்தன. நண்பர்கள் அனைவரும் சென்று அவனுடைய அம்மாவிடம் பேசினோம். சென்னைக்கு அழைத்துச் செல்ல அவர்களைச் சம்மதிக்க வைத்தோம். சென்னைக்கு வந்து ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்தோம். ஒரு மாதத்துக்குள் ஏறக்குறைய பழைய நிலைக்குத் திரும்பிவிட்டான்.

இருப்பினும், சில ஆண்டுகள் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமணம் நடந்தது. இன்று நலமாக, வளமாக உள்ளான். என்னிடம் இன்று அவன் சிரித்துப் பேசும்போது எல்லாம், நடந்தவை எல்லாம் கனவோ எனத் தோன்றும். மறக்க முடியாத நாட்கள் அவை. ஆனால், பெரும்பாலான சம்பவங்கள் அவனது நினைவில் இல்லை என்பது மட்டுமே எங்களுக்கு ஆறுதல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்