கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தம் செய்வது, பாழடைந்த கிணற்றைத் தூர் வாரப்போவது, பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பை நீக்கப்போவது என்று செல்லும் தொழிலாளர்களில் பலரும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு இறப்பது என்பது அடிக்கடி நமது நாட்டில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. வருடந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வகையில் இறக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருமாள் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது வீட்டின் கழிவுநீர் தொட்டியின் அடியில் தேங்கிய கழிவை அகற்றுவதற்காக, சுத்தம் செய்ய நினைத்து இறங்கியபோது, அவரை விஷ வாயு தாக்கியது. அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் இருவரும், உதவவந்த மூவரும் விஷ வாயு தாக்குதலுக்கு ஆளாகினார்கள். இதில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு தொடர்கதை! வேலூரில், தோல் தொழிற்சாலைக் கழிவுநீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலி. பல்லாவரம்: தனியார் கம்பெனி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறப்பு. பெரும்புதூரில் உள்ள ஹோட்டல் ஊழியர்களை விஷவாயு தாக்கியதில் 3 பேர் இறப்பு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
முக்கிய வாயுக்கள்:
கழிவு நீரிலிருந்து, ஹைட்ரஜன் சல்பைட், அம்மோனியா, மீத்தேன் , ஈஸ்டர்கள் , கார்பன் மோனாக்சைடு, சல்பர் டையாக்ஸைட் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்கள் வெளிப்படலாம். கழிவுநீர்த் தொட்டிகளில், வடிகால் பணித் தளங்களில் வெளிப்படும் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைட் ஆகிய வாயுவை மனிதர்களின் நுகர்வு சக்தியைக் கொண்டு கண்டறிய முடியாது.
ஏனென்றால், இந்த வாயு நுகர்வு உணர்வு நரம்புகளை உடனே பாதித்துவிடும். இதனால், மணமில்லை என்று உள்ளே இறங்கக் கூடாது. குறைந்த அளவிலான இந்த வாயுக்களின் வெளிப்பாட்டால், தலைவலி, கண் எரிச்சல், சோர்வு, தொண்டைக்கமறல், இருமல், வாந்தி, கிறுகிறுப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அதிகமான அளவு வெளிப்பட்டால் உயிரை இழக்க நேரிடும்.
பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் காப்பாற்றலாம்?
மேற்கூறியபடி, எல்லா முன்னெச்சரிக்கைகளுடன் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வது, பாழடைந்த கிணற்றைத் தூர் வாரப்போவது, பாதாளச் சாக்கடைகளில் வேலைகள் செய்வது என்பதை மேற்கொண்டால் ஆபத்து ஏற்பட வழியில்லை.
ஒருவேளை, ஏதாவது சிறு கவனக் குறைவால் ஊழியர் பாதிக்கப்பட்டாலும், ஏற்கெனவே செய்த ஏற்பாடுகளால், முதலுதவி செய்து, ஆக்ஸிஜன் கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, தேவைப்பட்டால் செயற்கை சுவாசம் தந்து நோயாளியைக் காப்பாற்றிவிட முடியும்.
ஆனால், பொது மக்களைக் காப்பாற்றப் போகிறேன் என்று இது போன்ற இடங்களில் உள்ளே குதித்தால், அவர்களால் அவர்களையே காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.
எப்படி மின்சாரம் பாதித்தவரைத் தொட்டால், தொட்டவரும் இறக்க வேண்டியது வருமோ, அதேபோன்றே, விஷவாயு பாதித்தவரைக் காப்பாற்றப் போகும் அனைவருமே இறக்க நேரிடும் என்பதற்கு உதாரணம் தான். ஸ்ரீபெரும்புதூரில், ஒரே நேரத்தில் 6 பேரும் இறந்த சம்பவம்..
பாதிப்பை எப்படித் தடுக்கலாம்?
# வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தொட்டிக்குள் நுழையக் கூடாது.
# இதற்கெனப் பயிற்சி பெற்றவர்கள்தாம் உள்ளே இறங்க வேண்டும்
# தொட்டிக்குள்ளிருக்கும் காற்றின் தன்மை, வெளிக் காற்றின் தன்மை ஆகியவற்றை முறை யான கருவிகளைக் கொண்டு ஆராய வேண்டும்.
# கற்பூரத்தை, மெழுகுவர்த்தியைக் கொளுத்தித் தொட்டிக்குள் போட்டு தொட்டிக்குள் விஷ வாயு இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
# கழிவு நீர்த்தொட்டிக்குள் முதலில் விஷவாயுக்கள் எந்த அளவில் உள்ளன என்பதை அதற்குரிய விசேஷக் கருவியைக் கொண்டு (Calibrated gas detector) பரிசோதனை செய்து அறிய வேண்டும்.
# Multiple-sensor gas monitor-ஐப் பயன்படுத்த வேண்டும்.
# உள்ளே சென்று டிரில்லிங் மிஷின் மூலம் துளைத்தல் போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது.
# தொட்டிக்குள் பல்வேறு இடங்களிலிருந்து வரும் கழிவுக் குழாய்களை அடைத்து வைக்க வேண்டும்.
# உள்ளே இறங்குவதற்கு முன்பாக அங்குள்ள திடப் பொருட்கள் மற்றும் கழிவுகளை, (jet cleaning) கருவிகளைக் கொண்டு வெளியேற்ற வேண்டும்.
# கழிவு நீரையும் அகற்றி, உட்புறம் காற்றோட்டமாக இருக்க வெளிக்காற்றை உள்ளே செலுத்தவேண்டும்.
# ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் பின் முகக் கவசம் கொண்ட சுவாச உபகரணம் (Personal protective equipment) அணிந்து, உள்ளே இறங்க வேண்டும்.
# அதே நேரம் வெளியிலிருந்து அவரைக் கண்காணிக்கவும் தொடர்பு கொள்ளவும் தேவைப்பட்டால் உதவுவதற்கும் குறைந்தபட்சம் ஒரு பணியாளர் இதே போன்ற சுவாச உபகரணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.
# முதலுதவிப் பெட்டி ஆக்ஸிஜன் ஆகியவையும் தயாராக வைத்திருப்பது அவசியம்.
# இப்பணியில் ஈடுபடுபவர், வாடை தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது அருந்திவிட்டுப் பணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
# ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவர்கள் தயாராக இருப்பது நல்லது.
# விழிப்புடன் இருப்போம்! விஷவாயு பாதிப்பைத் தடுப்போம்!
மீத்தேன்:
கழிவுப் பொருட்களின் மீது பாக்டீரியா வகைக் கிருமிகள் புரியும் வினைகளால் இந்த வாயு உருவாகிறது. இது நிறமற்றது. எளிதில் பற்றி எரியக் கூடியது. கழிவுத் தொட்டிகளுக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றும், இதன் காரணமாக, இங்கு ஆக்ஸிஜன் சுவாசிப்பதற்குப் போதுமானதாக இருக்காது. மூச்சுத்திணறல், படபடப்பு, பார்வை மங்குதல், தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பிறகு, நினைவை இழந்து உயிரை விட நேரிடும்.
கார்பன் மோனாக்சைடு:
இது, நிறமும் மணமும் இல்லாத வாயு. 1,200 பிபிஎம் செறிவுகளால் உடலுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு விடும். இந்த வாயு, ஹீமோகுளோபினோடு சேர்ந்து, கார்பாக்ஸிஹீமோகுளோபினாக மாறுவதால், தலைவலி ஏற்படும். உடல் செர்ரிப்பழம் போல் சிவந்துவிடும். மூளை பாதிக்கப்படும், சுவாச செயலிழப்பு ஏற்படும். தலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டு நினைவிழந்துவிடுவார்கள். இறப்பு சம்பவிக்கும்.
ஹைட்ரஜன் சல்பைட்:
அழுகிய முட்டை மணம் கொண்டது. ஆனால், ஹைட்ரஜன் சல்பைட் (> 100 பிபிஎம்) செறிவால் உடல் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் வாசனையைக் கண்டறிய முடியாது. அதே நேரம் 1000 பிபிஎம்) என்ற உயர்ந்த அளவுக்கு மேல் சென்றால், நோயாளி உடனடியாக மயக்கமடைந்து விழுந்துவிடுவார். இந்த வாயு, செல் சுவாசத்துக்குத் தேவையான சைட்டோ குரோம் ஆக்ஸிடேஸ் என்ற நொதியைத் தடை செய்வதால், செல் சுவாசம் பாதிக்கப்படும். இறப்பு சம்பவிக்கும்.
கட்டுரையாளர்,
மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு:
muthuchellakumar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago