சொன்னதும் செய்ததும்

By முகமது ஹுசைன்

பிரசித்தி பெற்ற மருத்துவ இதழான ’லான்செட்’டின் முதன்மை ஆசிரியரான ரிச்சர்ட் ஹார்ட்டன் ‘சுகாதாரம் என்பது தேசியப் பாதுகாப்பு பிரச்சினை’ என்கிறார். நாட்டின் மக்கள் நலமாக, நோய் நொடியற்று இருந்தால்தான், நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கும் என்பதே அவரது கருத்தின் அடிப்படைச் சாரம்.

புதிய மருத்துவமனைகளைத் தொடங்குவதும் இலவச மருந்துகளை அளிப்பதும் மட்டும் பொதுச் சுகாதாரத் துறையின் வேலையல்ல.

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீண்ட காலத் திட்டமிடலே அதன் முக்கியப் பணி. ‘அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் சுகாதாரம்’ என்பதே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது.

ஸ்வச் பாரத் அபியான், ஜன் ஆயுஷாதி மருந்தகங்கள், மிஷன் இந்திராதனுஷ், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா போன்ற பல  திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் அரசு அறிவித்தது. ஆனால், பிரச்சினை அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் இருந்தது.

நோய்த் தடுப்பில் முன்னேற்றம்

ஆட்சியில் அமர்ந்த ஏழே மாதங்களில், ‘மிஷன் இந்திரதனுஷ்’ எனும் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. நாட்டு மக்களின் கவனத்தை இத்திட்டம் பெரிதும் ஈர்க்காவிட்டாலும், சர்வதேச சுகாதார அமைப்புகளின் கவனத்தை இது ஈர்த்தது.

 இத்திட்டத்தின்கீழ் மக்களிடம் தடுப்பூசியைக் கொண்டுசெல்வதில் ஆண்டுக்கு 1 சதவீத முன்னேற்றம் மட்டுமே கண்டது. இலவசத் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வதில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது.

இருந்தாலும், போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், இந்தத் திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும்.

2017-க்குள் காலா-அசார் எனப்படும் கருங் காய்ச்சல் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அப்போது அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

பிஹாரிலும் ஜார்கண்டிலும் இந்த நோய் முன்பைவிட அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மலேரியா கண்காணிப்பு அமைப்பு, வெறும் 8 சதவீத மலேரியா நோயாளிகளை மட்டுமே கண்டுபிடித்துள்ளது என்று உலக மலேரியா அறிக்கை தெரிவிக்கிறது. மலேரியாவைக் கண்டறிவதில் உலக அளவில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.

தூய்மை இந்தியா

'ஸ்வச் பாரத்' திட்டத்தின்கீழ் 9 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன; 5 லட்சத்துக்கும் மேலான கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமங்களாக மாறின; 616 மாவட்டங்கள்  திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டங்களாக மாறின என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

ஆனால், கழிப்பறை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும் தரமற்ற கட்டுமானமும் நிதி மோசடிகளும் விரைவில் இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும் பலனையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன.

மலிவு விலை மருந்தகங்கள்

பா.ஜ.க. ஆட்சியில் 2017-க்கு முன்புவரை, சுகாதாரத் துறைக்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், 2017-ன் நிதி அறிக்கை விதிவிலக்காக அமைந்தது.

சுகாதாரத் துறையில் அரசு கூடுதல் கவனத்தைச் செலுத்திய ஆண்டு என 2017-யைச் சொல்லலாம். முந்தைய ஆண்டைவிட, சுகாதாரத் துறைக்கு 17 சதவீதம் கூடுதலான நிதி அந்த முறை ஒதுக்கப்பட்டது. அந்த ஆண்டு 'ஜன் ஆயுஷாதி' திட்டத்தின்கீழ் 3,000 புதிய மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொது மருந்துகளை மக்களுக்கு மலிவான விலையில் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 184 மருந்தகங்களில் 87 மருந்தகங்கள் மட்டுமே தற்போது செயல்படுவதாக ஜே.ஏ.எஸ். இணையதளம் தெரிவிக்கிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடிப் பேர் பயன்பெறும் வகையில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத்தின்கீழ் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மருத்துவ மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டது.

இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால், இந்தியாவின் பொதுச் சுகாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு இந்தத் திட்டத்துக்குப் போதுமான நிதியை ஒதுக்க முனையவில்லை.

ஆயுஷ்மான் பாரத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம்,  பொதுச் சுகாதாரத் துறைக்குக் கூடுதல் நிதி கிடைக்கும் என்று முதலில் கூறப்பட்டது. அதற்கு மாறாகத் தனியார் மருத்துவமனைகளை அரசு ஊக்குவிக்கும் நிலை ஏற்பட்டது.

பொதுச் சுகாதார அமைப்பின் கட்டமைப்பை மேம்படுத்தாமலும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தாமலும், ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற திட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதை உறுதிப்படுத்துவது கடினம் என்ற விமர்சனம் பதில் இல்லா கேள்வியாகவே இன்னும் இருக்கிறது.

விழிப்புடன் இருப்போம்

இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் அரிய வகை நோய்களாலும்; 25 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயாலும்; 3 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயாலும்; 6 கோடிக்கும் அதிகமானோர் மனநல நோயாலும்; மிக அதிகமானோர் இதய நோய்-அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியாக நோய்கள் ஏற்படுத்தும் நெருக்கடியைத் தாங்க முடியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள். முறையான திட்டங்களும் அதற்குத் தேவையான உரிய நிதி ஒதுக்கீடும் இல்லையென்றால், அனைவருக்கும் மருத்துவம் என்பது வெறும் கானல் நீராகவே ஆகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்