மூலிகையே மருந்து 47: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் கீழாநெல்லி

By டாக்டர் வி.விக்ரம்குமார்

பறவையின் கால்களைப் போன்ற சிறிய இலைகள், உருவத்தில் நேர்த்தி, கொஞ்சத் தூண்டும் சின்னஞ்சிறு காய்கள் என ரசிப்பவர்களைப் பரவசப்படுத்தும் மூலிகை கீழாநெல்லி! பித்த தேகம் உடையவர்களுக்குத் தேவையான மூலிகை இது. அனைத்து இடங்களிலும் சிறிய உருவத்துடன் அமைதியாய்க் காத்திருக்கும் கீழாநெல்லிக்குள் புதைந்திருக்கும் நுண்கூறுகள், பல்வேறு நோய்களை அழிக்கும் கூர் கருவிகள்!

பெயர்க்காரணம்: கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய்நெல்லி போன்றவை இதன் மாற்றுப் பெயர்கள். இலைகளுக்குக் கீழ்ப்புறமாக நெல்லி வடிவில் சிறு அளவிலான காய்கள் இருப்பதால் ‘கீழா’நெல்லி என்று பெயர். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் ‘செங்கீழாநெல்லி’ எனும் வகையும் உண்டு.

அடையாளம்: நீர்ப்பாங்கான இடங்களில் ஓரடி உயரத்துக்கு வளரும், ஓராண்டு வாழும் சிறுசெடி. இலைத் தொடக்கத்தின் அடிப்பகுதியில் ‘மரு’ போன்ற சிறு காய்கள் கீழ்நோக்கித் தொங்கும். ‘பைலாந்தஸ் நிரூரி’ (Phyllanthus niruri) என்ற தாவரவியல் பெயர்கொண்ட கீழாநெல்லி, ‘யுஃபோர்பியேசி’ (Euphorbiaceae) குடும்பத்தின் உறுப்பினர். ‘பைலாந்தின்’ (Phyllanthin), ‘குவர்செடின்’ (Quercetin), ‘டானின்’ (Tannin), ‘குமாரின்’ (Coumarin), அமாரின் (Amarin) போன்ற தாவர வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: கைப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு என நான்கு சுவைகளின் அற்புதக் கலவை யைப் பரிசளிக்கும் கீழாநெல்லி, குளிர்ச்சியை வாரி வழங்கும் இயற்கையின் ‘குளிர்சாதனப் பெட்டி’. மோரில் கறிவேப்பிலைப் பொடியையும் கீழாநெல்லிப் பொடியையும் கலந்து அருந்த, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்க, அரிசிக் கஞ்சியுடன் கீழாநெல்லியை அரைத்துக் கொடுக்கும் வழக்கம் மலைக் கிராமங்களில் உண்டு.

கீழாநெல்லியோடு சீரகத்தைச் சேர்த்து தயிரில் அடித்து ‘லஸ்ஸி’ போல் பருக, வேனிற் காலங்களில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், கண்ணெரிச்சலுக்கான தீர்வு கிடைக்கும். உணவின் மீது வெறுப்பு கொள்ளும் ‘அன்னவெறுப்பு’ குறி குணத்துக்கு, கீழாநெல்லி, கடுக்காய், மிளகு ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து பருகலாம். கீழாநெல்லியை அரைத்துத் தயிரில் குழைத்துச் சாப்பிடுவதை, வெப்ப நோய்களைத் தடுக்கும் கற்ப முறையாக வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

மருந்தாக: கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது. உடல் செயல்பாடுகளால் உண்டாகும் கழிவு, கல்லீரலைப் பாதிக்காமல் கீழாநெல்லி தடுப்பதாக இன்றைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கல்லீரலைக் குறிவைக்கும் வைரஸ்களின் பெருக்கத்துக்குக் காரணமான நொதியைத் தடுத்து நிறுத்தும் வீரியம் கீழாநெல்லிக்கு இருக்கிறது. செரிமானத்துக்கு உதவும் சுரப்புகளை அதிகரிக்கச் செய்யும் கீழாநெல்லி, செரிமானக் கருவிகளைத் திறம்படச் செயல்பட வைக்கும்.

வீட்டு மருந்தாக: கரிசாலை, கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை ஆகியவற்றைக் கொண்டு மிளகு, சின்ன வெங்காயத்தின் உதவியுடன் செய்யப்படும் கலவைக் கீரைச் சமையலை ருசிப்பதன் மூலம் செரியாமை, மலக்கட்டு, ரத்தக் குறைவு, தோல் நோய்கள் போன்றவை குணமாகும். விஷமுறிவு மருத்துவத்திலும் கீழாநெல்லி முக்கியத்துவம் பெறுகிறது. மங்கிய பார்வைக்கு ஒளிகொடுக்க, கீழாநெல்லியோடு பொன்னாங்கண்ணி கீரையைச் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். ‘பித்தவிடம் விழியின் நோய்க்கூட்டம்…’ எனும் சித்த மருத்துவப் பாடலின் மூலம் கீழாநெல்லியின் மகிமையை உணரலாம்.

‘காணும் யாவும் மஞ்சளாகவே தோன்றும் கீழாநெல்லி காணாதவரை…’ எனும் முதுமொழி, சில வகையான காமாலை நோய்க்குக் கீழாநெல்லி சிறந்த மருந்து என்பதை முன்மொழிகிறது. முழுத் தாவரத்தையும் அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவில், மோரில் கரைத்துக் கொடுப்பது, ஈரலுக்கான டானிக். கீழாநெல்லியும் கரிசலாங்கண்ணியும் ஈரலுக்குப் பாதுகாப்பளித்து, காமாலை நோயை மட்டுப்படுத்தப் போராடும் இரட்டையர்கள் என்றால் மிகையல்ல. கல்லீரலுக்கு வலிமையைக் கொடுக்க, கீழாநெல்லி, கரிசாலையை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து பருகும் வழக்கம் நம்மிடையே இன்றும் தொடர்கிறது. எவ்வகையான காமாலை என்பதை அறிந்து, மருத்துவர் ஆலோசனையோடு நோயை அணுகுவது முக்கியம்.

சிறுநீர்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்களை நீக்கவும் கீழாநெல்லி பரிந்துரைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, கீழாநெல்லிப் பொடியோடு நெல்லிக்காய்ப் பொடி சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரலாம். கீழாநெல்லி, மலைவேப்பிலை, மிளகு ஆகியவற்றை மோரில் அரைத்துக் கொடுக்க, மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் நிவர்த்தியாகும். பேதியைக் கட்டுப்படுத்த, கீழாநெல்லியோடு மாதுளை ஓடு சேர்த்துத் தயிரில் குழைத்துக் கொடுக்கச் சட்டென நிற்கும்.

பித்தத்தைச் சமன்படுத்தி, நோய்களின் அடிப்படையைக் களைய, கீழாநெல்லித் தைலத்தால் தலைமுழுகச் செய்யும் புறமருத்துவ முறை சித்த மருத்துவத்தில் பின்பற்றப்படுகிறது. தலை சுற்றல், கை, கால், கண் எரிச்சல் போன்ற குறிகுணங் களுக்குக் கீழாநெல்லித் தைலக் குளியல் ஆத்ம திருப்தி அளிக்கும். வேனிற் காலத்தில் கீழாநெல்லித் தைலத்தைக்கொண்டு தலை முழுகுவதால் கோடைக்காலத் தொந்தரவுகளை வரவிடாமல் தடுக்க முடியும். கீழாநெல்லியை அம்மியிலிட்டு மையாக அரைத்து, தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துத் தலைக்கு முழுகினால், அலைக்கழிக்கப்படும் மனம் நிதானமடையும்.

இதன் இலைகளோடு பாசிப்பயற்று மாவு, மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கச் சரும நோய்கள் தலை காட்டாது. வெட்டுக் காயங்களுக்குப் பூசவும் கீழாநெல்லிச் சாறு உதவும். தலைபாரத்தை நீக்க, உத்தாமணிச் சாற்றுடன் இதன் சாற்றைச் சேர்த்துத் துளிக் கணக்கில் மூக்கில் நசியமிடும் மருத்துவ முறை சிறப்பான பலன் கொடுக்கும்.

கீழாநெல்லி… நோய்களைக் களைவதில் கில்லி!…

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்