தனியார்மயமாகிறதா பொது மருத்துவம்?

By நிஷா

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியாணாவில் பிறந்த கரிஷ்மாவுக்குப் பிறக்கும்போதே புது அடையாளம் கிடைத்துவிட்டது. ஆம், உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’வின் முதல் பயனாளி அவர். “சிசேரியன் முறையில் பிறந்த அவர், குலுக்கல் முறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது குடும்பத்துக்கு மருத்துவச் செலவுக்கு என 9,000 ரூபாய் வழங்கப்பட்டது” என ஆயுஷ்மான் பாரத்தின் துணை நிர்வாக அதிகாரியான தினேஷ் அரோரா டிவிட்டரில் தெரிவித்தார். அதன்பிறகு, தேசத்தின் பிரபல முகமாக கரிஷ்மா மாறினார். தேசத்தின் தனிநபர் மருத்துவச் செலவு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 13,000 ஆக இருக்கும் நிலையில், இந்த 9,000 ரூபாய் என்பது பெரும் தொகைதானே!

ஆரவாரத்துடன் ஆரம்பமான திட்டம்

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பத்து கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்று அவர் தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து பேர் இருப்பதாகக்கொண்டால், பத்து கோடிக் குடும்பம் என்பது 50 கோடி பேர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ‘அனைவருக்கும் உடல்நலம்’ என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசு முயன்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மருத்துவ மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டது. முதல் மருத்துவ மையம் சத்தீஸ்கரில் தொடங்கப்பட்டது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2001-2015-க்கு இடைப்பட்ட காலத்தில் மருத்துவக் குறைபாடு காரணமாக இந்தியாவில் நான்கு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இந்தியாவில் நிகழ்ந்த மொத்தத் தற்கொலையில் 21 சதவீதம். தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் கூறுவதன்படி மருத்துவச் செலவுக் கடன்கள் 2002-2012-க்கு இடைப்பட்ட காலத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளன.

எனவே, இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால், இந்தியாவின் பொதுச் சுகாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் திட்டம் உறுதியளித்த மாற்றங்களில் பொதுச் சுகாதார நிபுணர்களும் தனியார் சுகாதாரப் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டவில்லை. விரைவில் இந்தத் திட்டத்தின் குறைகள் பேசுபொருளாயின. இந்தத் திட்டம் சிறந்த முறையில் செயல்படுகிறது என்பதற்கான உரிய தரவுகள் அரசிடம் இல்லை.

புறக்கணிக்கப்பட்ட முன்னோடித் திட்டம்

2005-ல் ‘நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் (NHRM)’ எனும் மருத்துவத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில் 18 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டம், பிறகு நாட்டின் கிராமப்புறம் முழுவதும் பரவலாக்கப்பட்டது. ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அந்தத் திட்டம், மகப்பேறு ஆரோக்கியத்தையும் நோய்த் தடுப்பையும் ஒருங்கே வலியுறுத்தியது.

நாட்டின் அடிப்படைச் சுகாதாரத் தரத்தை இந்தத் திட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளது எனப் பல ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. மகப்பேறு மருத்துவத்தில் இந்தத் திட்டம் பெரிய அளவில் முன்னேற்றத்தை உருவாக்கியிருப்பதுடன், பாலின விகிதாச்சார வேறுபாட்டையும் கணிசமாகக் குறைத்துள்ளது என ‘ஜர்னல் ஆன் ஹெல்த் பாலிசி அண்ட் சிஸ்டம் ரிசர்ச்’ தெரிவிக்கிறது.

ஆனாலும் அந்தத் திட்டம் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2017-ல் என்.ஹெச்.ஆர்.எம் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 4,000 கோடி ரூபாயில் பேரளவு செலவழிக்கப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் பணியாள் பற்றாக்குறையால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இயலாமல் தடுமாறி நிற்கிறது.

2,061 கதிரியக்கவியலாளர்கள், 4,582 மருந்தகர்கள், 5,753 ஆய்வக வல்லுநர்கள், 11,288 செவிலியர்கள் ஆகிய பணியிடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்படாமல் உள்ளன என்ற சுகாதார, குடும்ப நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

‘முதல் கட்ட சுகாதார மேம்பாட்டுக்கு என்.ஹெச்.ஆர்.எம். திட்டம் உதவினாலும், நாட்டு மக்களின் இன்றைய தேவையான இரண்டாம், மூன்றாம் கட்ட சுகாதார மேம்பாட்டுக்கு அது பயனளிப்பதில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டமே அதற்கு வழிவகுக்கும்’ என்று அரசு வலியுறுத்துகிறது.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு சொல்வதுபோலவே இரண்டாவது, மூன்றாம் கட்ட சிகிச்சைக்கான தேவை மிக அதிகமாக இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், ஆரம்ப கட்ட சிகிச்சை நமது நாட்டில் இன்றும் வலுவானதாக இல்லை. அதேபோல் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ திட்டத்துக்கு அதிக நிதி தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சன நிலை. அதேநேரம், அரசு இந்தத் திட்டத்துக்குப் போதுமான நிதியை ஒதுக்க முனையவில்லை.

ஊக்கம் பெறும் தனியார் மருத்துவமனைகள்

முதல்கட்ட சிகிச்சை புறக்கணிக்கப்படும் ஆபத்தில் இருப்பதால், நோயின் தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை பெறும் வாய்ப்பை இழந்தவர்கள், சிகிச்சைக்குக் கட்டுப்பாடு இல்லாத - முறைப்படுத்தப்படாத தனியார் துறையை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், பொது சுகாதாரத் துறைக்குக் கூடுதல் நிதி கிடைக்கும் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக தனியார் மருத்துவமனைகளை அரசு ஊக்குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலை-1, நிலை-2 நகரங்களில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைக்கும் யோசனையை நிதி ஆயோக் நிறுவனம் முன்மொழிந்திருப்பது இதற்கு ஒரு ஆதாரம்.

பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியாவுக்கு 10 ஆண்டு அனுபவம் உண்டு. பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனியாகப் பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம், மகாராஷ்டிரத்தின் ‘ராஜீவ் காந்தி ஜீவன் தயே ஆரோக்ய யோஜ்னா’, டெல்லியின் ‘ஆப்கா ஸ்வஸ்தியா பீமா யோஜ்னா’, கர்நாடகத்தின் ‘வாஜ்பாய் ஆரோக்ய ஸ்ரீ’, குஜராத்தின் ‘முக்யமந்திரி அம்ருதம் யோஜ்னா’ போன்றவை இதில் அடங்கும்.

ஆனால் நிலைமை என்னவென்றால் மருத்துவத்துக்கு தங்கள் கையிலிருந்து மக்கள் செலவழிக்கும் தொகையின் அளவு இன்றும்கூடக் குறையவில்லை. மருத்துவச் செலவில் வெறும் 11 சதவீதம் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது எனப் பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எவ்வளவு பணம் கோரப்படுகிறது, எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களை அறிவதற்கு ஏற்ற முறையான அதிகாரபூர்வமான தரவுகள் எதுவும் அரசிடம் இல்லை. அது மட்டுமல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுத் தொகையை நோயாளர் பெறுவதும் மிகவும் கடினமாகவே உள்ளது.

சீனா தனது ஜி.டி.பியில் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 3 சதவீதத்தை சுகாதாரத்துக்குச் செலவழிக்கிறது. இந்தியாவோ வெறும் 1 சதவீதத்தைத்தான் செலவிடுகிறது. மேலும், சீனாவில் பொது சுகாதார மையங்கள், தனியாருடன் போட்டியிடும் அளவுக்கு வலிமையானவையாக உள்ளன. ஆனால், இந்தியாவின் நிலைமையோ தலைகீழ். 2014-ன்

படி சீனாவில் 13,314 பொது மருத்துவமனைகளும் 12,545 தனியார் மருத்துவமனைகளும் இருந்தன. அதே ஆண்டில், 4,91,885 ஆரம்பநிலை பொது சுகாதார மையங்களும் 4,25,450 கிராமப்புறத் தனியார் மருத்துவமனைகளும் அங்கு இருந்தன. இந்தியாவிலோ 80 சதவீத மருத்துவப் படுக்கைகள் இன்றும் தனியார் மருத்துவமனைகளில்தான் உள்ளன.

இதனால்தான், பொது சுகாதார குறியீட்டில் இந்தியாவைவிட சீனா மேம்பட்டதாக உள்ளது. எனவே, பொது சுகாதார அமைப்பின் கட்டமைப்பை மேம்படுத்தாமலும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தாமலும், ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற திட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதை உறுதிப்படுத்துவது கடினம்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்