மனநலமும் டிஜிட்டல் ஊடகமும்

By பவித்ரா

மனிதனுக்கும் ஊடகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை டிஜிட்டல் ஊடகத் தொழில்நுட்பங்கள் இல்லாமல் செய்துவிட்டன. வீடுகள், அலுவலகங்கள், பயணம் என எல்லாவற்றிலும் கைவிரல்கள் கெஞ்சும் அளவுக்கு நாம் செல்போன்களையும் ஐபேட்களையும் பயன்படுத்தியபடி இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துவரும் மன நலப் பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் ஊடகப் பயன்பாடும் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க உளவியல் கழகம் செய்த ஆய்வில், 1995-க்குப் பிறகு பிறந்த இளைஞர்களிடம் எதிர்மறையான உளவியல் அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளில் தாக்கம் பெற்றபிறகு இந்தப் பிரச்சினைகளின் அழுத்தம் கூடியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

“தற்கொலை எண்ணங்கள், தீவிர மன அழுத்தம், மனத் தொந்தரவுகள், தற்கொலை முயற்சிகள் 2010-க்குப் பின்னர் அதிகமாகியுள்ளன. இந்த எண்ணிக்கை பதின்பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் 2000-ல்

இருந்ததைவிட இன்று அதிகமாகி யுள்ளது” என்கிறார் ஐஜென் புத்தகத்தின் ஆசிரியரும் உளவியல் பேராசிரியருமான ஜீன் ட்வென்ஜ். 30 வயதைத் தாண்டியவர்களிடம் இந்த நிலைமைகள் இல்லையென்றும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்வென்ஜ்-ம் அவருடைய குழுவினரும் அமெரிக்காவில் 12 முதல் 17 வயதுவரை உள்ள சிறார்களிடமும் இளைஞர்களிடமும் 18 வயதுக்கு மேலுள்ள 4 லட்சம் இளைஞர்களிடமும் ஆய்வு செய்ததில், சமூகரீதியான உறவு பலமாக உள்ள மூத்தவர்களைவிட வளரிளம் பருவத்திலுள்ளவர்களும், இளம்பிராயத்தினரிடமும் தாக்கம் செலுத்தும் டிஜிட்டல் ஊடகங்கள்தாம், மனரீதியான அழுத்தங்களையும் தற்கொலை எண்ணங்களையும் தூண்டுவதற்குக் காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது.

மரபியல், பொருளாதாரப் பின்னணி ஆகியவைதாம் மன நலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான காரணிகளாக இதுவரை இருந்துவந்தன. நேரடியாகச் சமூகத் தொடர்புகள், உறவுகளை வைத்திருப்பவர்களுக்கும் டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகவே தொடர்புகளைப் பராமரிப்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களின் அடிப்படையில் மனநலப் பிரச்சினைகளை அணுக வேண்டும் என்ற புரிதலையும் இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூகரீதியான பதற்றம், சமூகத் தனிமை, தனிமை உணர்வுகள் டிஜிட்டல் ஊடகங்களைப் பாவிப்பவர்களிடையே அதிகம் உள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உறக்கம் குறைகிறது

முந்தைய தலைமுறையினர் உறங்குவதற்குப் போதுமான நேரமிருந்ததாகவும் தற்போதைய தலைமுறையினர் சரியான அளவில் உறங்குவதில்லை என்பதும் இந்த ஆய்வுகள் வழியாகத் தெரியவந்துள்ளது. தூக்கக் குறைபாடும் படபடப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பதையே அவை காட்டுகின்றன.

“வளரிளம் பருவத்தினர் படுக்கையிலேயே செல்போனிலிருந்து வரும் ஒளிக்கு மிக அருகில் நிறைய நேரத்தைச் செலவழிக்கின்றனர். அந்த ஒளியே 30 நிமிடங்களுக்குத் தூக்கத்தைத் தள்ளிப்போடும் ஆற்றல் மிக்கது” என்கிறார் உளவியல் மருத்துவர் ஆரோன் ஃபோபியன்.

டிஜிட்டல் ஊடகங்களைத் தவிர்த்து நம் ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. வளரிளம் பருவத்துக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு ஆலோசனை கூற வேண்டும். நேரடியான சமூகத் தொடர்புகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வீட்டில் சேர்ந்திருக்கும் நேரங்களில் பெரியவர்களும் போன் பயன்பாட்டைத் தவிர்ப்பதிலிருந்து இதைத் தொடங்கலாம். செல்போன்கள், ஐபேட்களிலிருந்து குழந்தைகளை விடுவிக்க பெற்றோர்களே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்