பத்திரமா பார்த்துக்குங்க

By டி. கார்த்திக்

செப். 29 - உலக இதய நாள்

# நம் நாட்டில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 - 50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள்.

# 25 சதவீத மாரடைப்பு மரணங்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றன.

# ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன.

உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்குப் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு இன்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். இன்ஜினைச் சீராகப் பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

வேண்டாமே டென்ஷன்

இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்தஅழுத்தம் மாரடைப்புக்குக் கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தைக் கடைபிடித்து, நிதானமாகச் செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எது நல்ல உணவு?

மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக் காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் ‘நவநாகரிக உணவு' என்ற பெயரில் பீட்சாகளையும், பர்கர்களையும், நூடுல்ஸையும் சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள்.

‘உணவே மருந்து' என்ற அடிப்படை தத்துவத்தைக் கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் மறந்துவிட்டார்கள். விளைவு? உடல் பருமன். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து மாரடைப்பு ஏற்படக் காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

இதயத்துக்குப் பகை

இதயத்தின் முக்கிய எதிரி புகை என்பதில் சந்தேகம் தேவையில்லை. குறிப்பாக, இந்தக் காலத்தில் கல்லூரி இளைஞர்கள் மட்டுமில்லை, பள்ளி சிறுவர்கள்கூடப் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருவதைப் பார்க்க முடிகிறது. எவ்வளவு நீண்ட காலத்துக்குப் புகைபிடிக்கிறோமோ, இதயத்துக்கு அவ்வளவு ஆபத்து அதிகரிக்கும். எனவே, புகையை விட்டொழிக்க வேண்டும். புகையிலை சார்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.

கட்டுக்குள் சர்க்கரை

பெரும்பாலான நோய்கள் ஏற்படப் பிள்ளையார் சுழி போடுவது சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்தான். தீவிர நீரிழிவு நோய் ரத்தக் குழாய்களில் ரத்தத்தை உறைய வைத்து மாரடைப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், நீரிழிவு நோயைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

சரியான உணவுப் பழக்கம் மூலமே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதோடு இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள் இதய நோய் நிபுணர்கள்.

உடற்பயிற்சி

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள், அவ்வப்போதுச் சில நிமிடங்கள் காலாற நடை போடுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் முறைப்படி பின்பற்றி வந்தால், உங்கள் இதயம் கடைசிவரை ஆரோக்கியமாகவே இயங்கும்.

இதயம் காக்க டாக்டர் டிப்ஸ்

முதுமையானவர்களுக்கு மாரடைப்பு வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் 32-40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இந்திய இளைஞர்கள் இளம் வயதிலேயே இதய நோய்க்கு ஆளாக என்ன காரணம்? இதுபற்றி எஸ்.ஆர்.எம். மருத்துவமனை இதய அறுவைசிகிச்சை நிபுணர் பி.மூர்த்தி என்ன சொல்கிறார்?:

"இளைஞர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அத்துடன் தவறான உணவுப் பழக்கத்தையும் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தக் காலத்து இளைஞர்கள் விரும்பி உண்ணும் துரித உணவு வகைகளில் ஊட்டச்சத்து இல்லை. அதிக கலோரி தரும் கார்போஹைட்ரேட்தான் அதில் அதிகம். அதனால் உடல் பருமனாகிறது. உடலில் கொழுப்பு கூடுகிறது. இதேபோல் கூல்டிரிங்க்ஸ்களிலும் வெறும் கலோரி மட்டுமே உள்ளது.

ஊட்டச்சத்தில்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவது, அதிகப்படியான கொழுப்பு சேர்வது, இதோடு நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தமும் சேர்ந்தால் மாரடைப்பு வந்துவிடுகிறது. அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நெருக்கடியான பணி சூழலில் டென்ஷனுக்கு மத்தியில் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். டென்ஷன் ஏற்படும் போதெல்லாம் புகைக்கிறார்கள். இப்படி வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதால், இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது.

சத்தான உணவு வகைகளுடன் கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தாலே மாரடைப்பைத் தடுக்கலாம். அதோடு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றைத் தினமும் செய்ய மறக்கக் கூடாது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு முதல் ஒரு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’. மார்பில் வலி ஏற்பட்டவுடனே, உடனடியாக அருகில் உள்ள எந்த மருத்துவமனையாக இருந்தாலும் சரி, அங்கு சென்றுவிடுவது நல்லது. நாக்குக்கு அடியில் ஆஸ்பிரின் மாத்திரை வைத்துக்கொள்வது பயன் தரும்.

இது உறைந்த ரத்தத்தை ஓரளவு கரைக்கக்கூடும். ஈ.சி.ஜியை பார்த்தாலே மாரடைப்பு வந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும். மாரடைப்பு உறுதியானால், அதன்பிறகு நமக்கு ஏற்ற மருத்துவமனைக்கு மாறிக் கொள்ளலாம்".

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்