உண்மையில் இன்றுள்ள வாழ்க்கைச் சூழலுக்கு யோகாவைப் போன்ற சரியான பன்முனை நிவாரணியைச் சொல்ல முடியவில்லை.
பல இடங்களுக்குச் சென்று பலவிதமான உடல்-மன பயிற்சிகளைச் செய்தவர்கள் யோகாவை அனுபவித்த பிறகு சொன்னது அது.
உடல், மூச்சு, உள்ளம், ஆளுமை, மனம் என்று பல தளங்களில் யோகா வேலை செய்யும்போது கிடைக்கும் அனுபவம் வியப்பாகத்தான் இருக்கும்.
பல நேரம் அது மாயமாகச் செயல்படுவதாகச் சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன். அதற்குக் காரணம், பல நிலைகளில் அது வேலை செய்து, முழுமையாய்த் தரும் பலன்கள் பேரானந்தத்தைப் போன்றவை.
உடற்பயிற்சியும் யோகாவும்
நம் நாட்டைப் பொறுத்தவரை தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் குறைவு. உடலுக்கு எந்த விதமான பயிற்சியையும் தராததால் தசைகள் இறுகிப் போயிருக்கும். பிடிப்பு அதிகம் இருக்கும். பல வலிகள் இருக்கும், இதனால் மூச்சின் (உள்-வெளி) அளவு பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.
ஆகவே, மனம் ஒரு நிலையில் இருக்காது, ஆடி ஓடி விளையாடும். ஒரே நேரத்தில் பல எண்ணங்கள் மனதில் சுழலும். அவை கன்னாபின்னாவென்று அலைபாய்ந்து இடையூறாக மாறி எரிச்சல், கோபம், மன அழுத்தத்துக்குத் தாராள இடம் தரப்பட்டிருக்கும்.
இதனால், பல உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. உறக்கம் சரியாக இருக்காது, செரிமானம் சரியாக இருக்காது, அமைதியை உணர முடியாது.
அதனால் தேவைப்படும் சக்தி இருக்காது, எண்ணங்கள் ஆரோக்கியம் குறைந்து, எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றங்கள் இருக்கும். மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.
இதனால் குடி, புகைப் பழக்கம் முதலானவை இருக்கலாம். சிலர் கடும் எரிச்சல்காரராக மாறியிருப்பார்கள். சந்தேகமும் அவநம்பிக்கையும் கூடும்.
இப்படிப்பட்டவர்களின் நட்பு வட்டம், தினசரிப் பழக்கவழக்கம் எப்படி இருக்கும்? எண்ணங்கள் எப்படி இருக்கும்? தங்கள் மீது நேசிப்பும் மதிப்பும் இருக்குமா? அப்படியென்றால் பிறர் மீது?
என்ன கிடைக்கும்?
ஒருவர் சுயமாக தன்னைச் சரியான முறையில் கவனித்துக்கொள்ளவில்லை எனில், எது வேண்டுமானாலும் நிகழலாம். இது ஒரு நாளில், ஒரு மாதத்தில் நடப்பதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் வளரும் பழக்கம்.
ஒரே மாதிரியான எண்ணங்கள், இயல்புகள், பலவீனங்கள் மெல்ல வளர்ந்து பெரிய சக்தியாக மாறிப் பிறகுதான் வெளியே வருகிறது. நினைத்தால் எந்த நேரத்திலும் நாம் நம்மை சரி செய்துகொள்ள முடியும். ஆனால், அதற்கான விலையைத் தந்தாக வேண்டும்.
இப்படியெல்லாம் பல நிலைகளில் பலவற்றை வளர்த்துக்கொண்ட மனிதர்களுக்கு யோகா போன்ற முறைமைகள்தான் சரியான பயிற்சியாக இருக்க முடியும்.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது அவர்களின் உடல் அசைவினால் ரத்த ஓட்டம் சீராகும், மூட்டுகள் நெகிழ்வுத்தன்மை பெறும், இதயம் நன்கு வேலை செய்யும், புத்துணர்ச்சி கிடைக்கும் என்று சொல்லலாம்.
அதே மாதிரி ஜிம் போகிறவர்கள் பெரும்பாலும் உடலை வலிமையாக்கப் போகிறார்கள். எடையைக் குறைக்கப் போகிறார்கள். கராத்தேயால் உடலுக்கு வலிமை, மனதுக்கு வலிமை கிடைக்கும். இப்படிப் பலவற்றையும் சொல்லலாம். ஆனால், இவற்றைத் தொடர்ந்து செய்து வாழ்க்கையில் மாறியவர்கள் மிகவும் குறைவு.
இந்தப் பயிற்சிகள் உடல் அளவில் செய்கிற மாற்றங்கள் தான் கூடுதல். மனதளவில் தேவையான மாற்றங்கள் நடப்பதில்லை. அதனால் அதுவே ஒரு பழக்கமாகி, இயந்திரத்தனமாக மாறிவிடுகிறது. பலன்களும் குறைந்துவிடுகின்றன. யோகாவையும் அவ்வாறு செய்தால், பெரிய பலன் இருக்காது. மனதை அலையவிட்டு, உடற்பயிற்சி போல் அதையும் மாற்றிவிட்டால் என்ன பலன் தேறும்?
ஆசிரியரின் பங்கு
மூச்சு குறித்த கவனத்தோடு ஒவ்வொரு ஆசனத்தையும் செய்வதே சிறந்த முறை. ஆசனத்துடன் மூச்சுப் பயிற்சி இல்லாமல் இருப்பதால், மனம் பெரும்பாலும் பயிற்சியின் மீது கவனமாக இருப்பதில்லை.
கடினமான ஆசனங்களை முதலில் செய்ய ஆரம்பிக்கும்போது மனம் பயிற்சியுடன் இருக்கும், அதுவே நீண்ட நாட்கள் செய்யும்போது, நன்கு பழகிப்போகும்போது, மனம் வெளியில் பறந்துவிடுகிறது.
யோகாவை எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள், இதில் மிக முக்கியப் பங்காற்றுகிறார்கள்.
பயிற்சி செய்பவர்களின் இயல்பு, எண்ணங்கள், பயிற்சி, ஈடுபாடு, யோகாவைப் பற்றிய புரிதல், அறிவு முதலானவை நிறைவாக அமையும்போது, அந்த யோகா வகுப்பு மிகச் சிறப்பாக - பலன் தருவதாக அமையும்.
ஆகவே ஒரு யோக முறையை, ஒரு யோகா ஆசிரியரை உங்களுக்கு ஏற்ப நீங்கள் தேட வேண்டும். அவ்வாறு முயற்சி எடுக்கும்போது, யோகாவின் பல அணுகுமுறைகளை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
பயிற்சி எதுவரை?
பயிற்சியைச் செய்கிறபோது, மகிழ்ச்சியாய்ச் செய்யுங்கள். ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வீடு-அலுவலகம் போன்ற சுய விஷயங்களை மனதுக்குள் இருத்தாமல் செய்யுங்கள்.
நிகழ்காலத்தில் இருந்து செய்யுங்கள். புரிந்து, உணர்ந்து செய்யுங்கள். பலன்கள் தேடிவரும்.
பலன்கள் கிடைத்ததும் சிலர் பயிற்சியை நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால், சிறுசிறு பலன்களைப் பெறவே அவர்கள் யோகாவுக்கு வந்திருப்பார்கள்.
உடல் வலி, ஆஸ்துமா, மூச்சு பிரச்சினை, தூக்கம் இன்மை, வயிறு சரியில்லை, முட்டி வலி, மனம் ஒரு நிலைப்படவில்லை, மனஅழுத்தம், வயிறு பெருத்துத் தொலைத்துவிட்டது... என்று. அந்தப் பிரச்சினை சரியானதும், வர மாட்டார்கள். பிறகு வேறு பிரச்சினை வரும்போது, திரும்பவும் வருவார்கள்.
யோகா செய்யத் தொடங்கிய ஒரு சில நாட்களில் மனம் அமைதியடையும், எண்ணங்கள் சீர்படும். ஆகவே எரிச்சல் குறையும், தூக்கம் சுகமாகும், நாள் முழுதும் சக்தி கிடைக்கும், மகிழ்ச்சி அதிகமாகும்.
நாள்தோறும் பயிற்சியைத் தொடங்கும்போது அவர்களுக்குள் அமைதி ஏற்படும். விஷயங்களை அழகாக, சரியாக யோசிக்க அந்த அமைதி துணை செய்யும்.
மெல்ல மெல்ல நீண்ட நாள் உடல் இறுக்கம் குறையக்கூடிய, மூச்சுப் பயிற்சி தரமானதாக-கவனமானதாக மாறமாற மகிழ்ச்சி கூடும். உடல் கனத்து இருந்ததிலிருந்து இலகுவானதாக மாறும். செரிமானம் நன்றாக இருக்கும். உள் உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.
உருமாற்றம்
வேறு என்ன பலன்கள் இருக்கும்? உள் உறுப்புகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, உடலில் ஓர் அழகு, முகத்தில் தெளிவு என்று வளர்ந்துவரும் பட்டியலில் உங்களைப் பற்றியும் செய்யும் வேலைகள் பற்றியும் யோசிப்பீர்கள்.
என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எங்கு நிறைவாகச் செய்கிறோம், எங்கு இன்னும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது, முன்னேற வேண்டியுள்ளது என்றெல்லாம் எண்ணங்கள் செம்மையடையும். இந்தக் கட்டத்துக்கு முன்பே பிறரை நேசிக்கும் ஒரு பண்பு வரும்-இயல்பு வரும்.
யோகா உடலின், மனதின் தொடப்படாத இடங்களைத் தொடும். அந்தப் பகுதிகள் தொடப்படும்போது, புதிய பரிமாணங்கள் நம்மிடம் வெளிப்பட வாய்ப்பு உண்டு. அது உடல் அளவில், மூச்சு அளவில், மன அளவில், ஆளுமை அளவில் எனப் பல நிலைகளில் ஏற்படலாம்.
பயிற்சியில் கிடைக்கும் தரத்தைச் சிலர் தங்களின் வாழ்வுக்கும் மாற்றிவிடுவார்கள். அதாவது உடல், மூச்சு, மனம், ஆளுமை என்று வேலை செய்யும்போது ஆசனத்தோடு மூச்சு, ஒலி, ஒலியுடன் எண்ணிக்கை, ஒலிக்கும் முன்போ-பின்போ மூச்சை நிறுத்துதல் என்று ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பயிற்சியில் சிறக்கும்போது, அந்த அனுபவத்தை வாழ்க்கைக்கு மாற்றும் வாய்ப்புள்ளது.
யோகா உங்களுக்கு நிறைவான பலன்களைத் தரவில்லை என்றால், ஒன்று சரியான யோகா முறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டீர்கள் அல்லது சரியான ஆசிரியர் கிடைத்திருக்க மாட்டார். அல்லது நீங்கள் தொடர்ச்சியாக, சரியாகப் பயிற்சியைச் செய்திருக்க மாட்டீர்கள்.
யோசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும். பயிற்சியைச் சரியாகத் தொடருங்கள், வாழ்க்கை மாறும்.
கட்டுரை ஆசிரியர்
யோகா பயிற்றுநர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago