சில நேரங்களில் சில மனிதர்கள்

By கி.ச.திலீபன்

‘பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்..!’

‘ஏதேனும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கான ஒன்லைனா..?’ என்று யோசிக்க வேண்டாம். இது ஒரு ஆளுமைக் கோளாறு. அதாவது, மதில் மேல் பூனை நிற்பதைப் போன்ற மனநிலை என்று குறிப்பிடுகிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இக்கோளாறு உள்ளவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரம், இயல்பானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளியில் நின்றிருப்பதே இந்தப் பிரச்சினை. இது எதனால் ஏற்படுகிறது? இந்தப் பிரச்சினைக்கு ஆளாகியவர்களை எவ்வாறு கையாள வேண்டும்?

விடை தருகிறார் மனநல மருத்துவர் ஜெயக்குமார்…

“ஆளுமைத் தன்மையில் ஏற்படும் பிரச்சினைகள் பல வகைப்படும். அவற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைதான் ‘பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ (Borderline Personality Disorder). ஆண்களைக் காட்டிலும் பெண்களே இந்தப் பிரச்சினைக்கு அதிகம் ஆளாகின்றனர்.

அறிகுறிகள்

இந்தப் பிரச்சினைக்கு ஆளாகியவர்களுக்குத் தன்னைப் பற்றிய குழப்பம் அதிகமாக இருக்கும். அதே போல் தன்னம்பிக்கையும் குறைவாகவே இருக்கும். சக மனிதர்களுடன் மிகவும் எளிதாக நெருக்கமாவார்கள். அதே போல் பிரியவும் செய்வார்கள். அவர்களால் உணர்ச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அதனால் கட்டுப்படுத்த முடியாத கோபம் அவர்களிடமிருந்து வெளிப்படும்.

கத்துவார்கள், பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைப்பார்கள், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வார்கள். கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலை முயற்சிகள் செய்வதெல்லாம் இது போன்ற மனநிலையால்தான்.

தன்னை அனைவரும் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். யாரையும் நம்ப முடியாமல் வெறுமையுடன் இருப்பார்கள். ரொம்பவும் ‘பொசஸிவ்’ ஆக இருப்பதால் அதிகமாகச் சந்தேகப்படுவார்கள். உறவு முறையில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக எது நடந்தாலும் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.

இவர்களின் இந்த நடவடிக்கைகளால் குடும்பத்துக்குள் அமைதி இருக்காது. பாதிப்புக்குள்ளானவரின் இணையர் முதலில் அமைதியை இழப்பார். அடுத்ததாகக் குடும்ப உறுப்பினர்கள் இவர்களால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள்.

இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. நடத்தையை வைத்துதான் இந்தப் பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். நிலையற்ற உணர்ச்சியைக் (unstable emotion) கொண்டிருப்பார்கள். ‘இதற்கெல்லாமா இப்படி நடந்து கொள்வார்கள்?’ என்று கேட்கும்படி நடப்பார்கள். தன்னால் யாருக்கும் பயனில்லை என்று நினைத்துக்கொள்வார்கள். எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கியிருக்கும். சமூகத்துடன் தொடர்பற்று விலகியிருப்பார்கள்.

நல்லது, கெட்டது என இரண்டிலுமே அதிகப்படியாக யோசிப்பார்கள். மற்றவர்களைப் பற்றிய தனது கருத்தை உடனடியாக மாற்றிக்கொள்வார்கள். இப்படி இவர்களின் உணர்வுநிலை மாறிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கு நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள். உறவினர்களும் விலகியிருப்பார்கள். மதுப் பழக்கம் போன்ற பழக்கங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள். அதி துணிச்சலான நடவடிக்கைகளில் நாட்டம் கொண்டிருப்பதால் நிதானம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கும், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மேற்சொன்ன அறிகுறிகளில் சிலவற்றை வைத்து மட்டும் ஒருவர் இந்தப் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறார் என்று தீர்மானித்துவிட முடியாது. அடிக்கடி கையை வெட்டிக்கொள்ளுதல், தற்கொலைக்கு முயல்தல் மற்றும் தற்கொலை மிரட்டல் விடுத்தல் போன்றவை தென்பட்டால் முதலில் அவர்களை உளவியல் ஆலோசனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். அதன் பிறகே அவருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

எதனால் ஏற்படுகிறது?

இந்தப் பிரச்சினை மரபுரீதியாகச் சிலருக்கு ஏற்படலாம். மூளையில் உள்ள  ‘ஃபிரண்ட்டல் லோப்’ (frontal lobe) எனும் பகுதிதான் உணர்ச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. இந்தப் பகுதி சரியாக வளர்ச்சியடையவில்லை என்றால் அவர்களால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துயர்மிகு அனுபவங்களைக் கடந்து வந்தவர்களும் இந்தப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

மருத்துவத் தீர்வு

மருந்து, மாத்திரைகள் மூலமும், ‘காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி’ (CBT - Cognitive Behavioural Therapy), ‘டயலெக்டிக்கல் பிஹேவியரல் தெரபி’ (DBT - Dialectical Behavioural Therapy) ஆகிய தெரபிகளின் மூலம் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். அவர்கள் கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்களை மாற்றி அவர்களை யதார்த்தத்துக்குக் கூட்டி வரப்படுவார்கள்.

கடுமையான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். நம் உணர்வுகளை நாமே சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். தான் கோபமாக இருப்பதை ஒருவர் ஏற்றுக்கொண்டாலே அந்தக் கோபத்தை அவரால் கட்டுப்படுத்திவிட முடியும். அது கொஞ்சம் கடினமானதுதான் என்றாலும் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அதைக் கட்டுப்படுத்தலாம்.

18 வயதுக்கு மேல் ஆரம்பித்து 45 வயதுவரை இந்தப் பிரச்சினை தீவிரமாக இருக்கும். 45 வயதுக்கு மேல் அதன் தீவிரம் குறைய ஆரம்பித்துவிடும். இந்தப் பிரச்சினை தீவிரத்தன்மையோடு இருக்கிற வரையில் அது அவர்களையும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களையும் பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால் மருத்துவத் தீர்வை நாடுவது சிறந்தது” என்கிறார் ஜெயக்குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்