நமது வயிற்றுப் பகுதியில் வெப்பம் மிகுந்தால் உதடுகள் உலர்ந்தும் வெடித்தும் விடுவதுபோல், பெருங்குடலில் வெப்பம் மிகுந்தால் ஆசனவாய் எனப்படும் குதப்பகுதி வறண்டும், வெடிப்புற்றும்விடும். உதடுகளைப் போலவே தன்மையில் மென்மையாகவும் நுட்ப உணர்வு மிக்கதாகவும் இருக்கிறது குதவாய்.
உதடுகளை எந்த அளவுக்குச் சிரத்தையுடன் பராமரிக்கிறோமோ அதே அளவுச் சிரத்தையுடன் குதவாயின் மென்மையையும் மென்னுணர்வையும் பராமரித்தல் வேண்டும். குதவாய் குறித்துப் பேசுவதையும் அதன் மீது காட்டும் அக்கறையையும் நாம் அருவருப்பாகக் கருதுவோமேயானால், நமது மொத்த உடலும் அருவருக்கத்தக்கதாக மாறிவிடக்கூடும். குறிப்பாக, உடலில் வாயு மிகுந்து அடிக்கடி காற்றுப் பிரிதலில் தொடங்கி வாயுப் பிடிப்பு, தோல் வறட்சி, தோல் கறுத்துப் போதல் எனப் பல்வேறு வகையான தொல்லைகளை எதிர்கொள்ள நேரிடும்.
குதவாயைப் பராமரிப்பதா…. அது எப்படி? இதுவரை அப்படிக் கேள்விப்பட்டதுகூட இல்லையே. ஆம்… இதுவரை நாம் அதுபற்றிய எந்த அக்கறையும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குத் தன்னியல்பாகவே குதவாய் மென்மையாகவும் மென்னுணர்வோடும் இருந்தது.
ஆனால் தற்கால வாழ்க்கை முறையில் குதவாயைப் பச்சிளங்குழந்தைப் பருவம் தொடங்கி மிக மோசமாகக் கெடுக்கத் தொடங்கிவிட்டோம். ஆகையால் மல வெளியேற்றம் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டது. மட்டுமல்லாமல் பிரச்சினை மிக வேகமாகப் பரவலாகவும் தொடங்கிவிட்டது.
சந்தனமும் பன்னீரும்
முதலில் எப்படிக் கெடுக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்க்கப் பழகுவோம். பிறகு பராமரிப்பில் அக்கறை காட்டுவோம். அதைக் குழந்தைப் பருவம் தொடங்கியே பார்ப்போம்.
இரண்டு தலைமுறைக்கு முந்தைய தாய்மார்களும் சரி, இன்றளவும் கிராமப்புறத் தாய்மார்களும் சரி, தமது குழந்தைகளிடம் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். அது என்ன?
நடக்கத் தொடங்கும் குழந்தைகள் மலம் கழித்துவிட்டு வந்து “ஆய் கழுவு” என்று நின்றால் பெற்றோருக்குப் பெருமிதம் பொங்கும். ஆகா என் குழந்தை தானாக மலம் கழித்துவிட்டு வந்து அதைக் கழுவ வேண்டும் என்பதை உணரத் தொடங்கிவிட்டதே என்று உள்ளுக்குள் பூரிப்படைவார்கள். ஆசன வாயை இடக்கையால் நீரூற்றிக் கழுவிவிட்டு நடு விரலின் அடிப் பாகத்தால் மென்மையாக ஒரு அழுத்து அழுத்திவிட்டு ஈரக் கையால் செல்லத் தட்டு தட்டுவார்கள்.
பெரியவர்கள் குழந்தையின் மலத்தைச் சந்தனம் என்றும் சிறுநீரைப் பன்னீர் என்றும் கூறி மகிழ்ந்த காலம் இன்று மிக வேகமாகச் சுவடிழந்து கொண்டிருக்கிறது.
பால் தருவது தாயாக இருந்தாலும் குழந்தையின் மலத்தை, சிறுநீர் கழித்த துணியை மாற்றுவது குளிக்கவைப்பது போன்ற தூய்மைப் பணியைப் பாட்டிமார்களே செய்து வந்தனர். ஏன் இன்றும்கூடச் செய்து வருகின்றனர். ஏனென்றால் குழந்தையை மென்மையாகக் கையாளும் பக்குவமும் பொறுமையும் அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே கைகூடும்.
டயாப்பர் வேண்டாம்!
ஆனால், தற்கால சுத்தம் குறித்த அதீத எச்சரிக்கை உணர்வும் கிருமிகள் பற்றிய தேவையற்ற பய உணர்வும் குழந்தைகளின் கழிவைக் கையாள்வதில் புகுந்து, குழந்தை ஆரோக்கியத்தை மிக மோசமான ஒரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது.
நாம் தூய்மை விஷயத்தில் அதிக கவனம் கொண்டவர்கள் என்ற எண்ணத்தோடு புறத் தூய்மையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் குழந்தைக்கு ‘டயாபர்’ பொருத்திவிடுகிறோம்.
என்னதான் நவீன சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், கிருமித் தொற்றுத் தடுப்பு என்று கூறப்பட்டாலும், டயாபரானது சிறுநீரையும் மலத்தையும் குழந்தையின் தொடையிணைப்புப் பகுதி, தொடையின் உட்பகுதி, பிட்டம் ஆகிய பாகங்களுடன் குறைந்த நேரமேணும் தொடர்புறச் செய்யும்.
“நானெல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாத்திடுவேன்” என்று சொன்னாலும், சிறுநீர் அல்லது மலம் கழித்த உடனே மாற்றினாலும் டயாபர் எந்த வகையிலும் குழந்தையின் உடல் நலனுக்கு ஏற்றதல்ல.
ஏனென்றால், உடலின் இணைப்புப் பாகங்களில் உடல் உருவாக்கும் வெப்பம் உணர முடியாத வியர்வை போன்றவற்றில் உடலுக்குத் தேவையற்ற கிருமிகளும் சேர்த்தே வெளியேற்றப்படும். அவை புறச் சூழலில் வாழ இயலாதவை. ஆனால், டயாபர் அல்லது இறுக்கமான ஆடை ஆகிய பாதுகாப்புக் கவசம் என்று நாம் கருதுபவற்றைக்கொண்டு உடலோடு இறுக்கி வைத்தால், உடலிலிருந்து வெளியேறிய கிருமிகள் தோலுடன் வினை புரியக்கூடும். அத்தோடு உள்நோக்கியும் செலுத்தப்பட வாய்ப்பாகலாம்.
அப்படியானால் என்ன செய்வது?
பெண், தாய்மைப் பேறு அடைய கருக் கொள்வதில், கர்ப்ப காலத்தில் அதைப் பேணுவதில், குழந்தை ஈன்பதில் எந்த அளவுக்குச் சிரத்தை கொள்கிறோமோ அதே அளவுக்குக் குழந்தையைப் பராமரிப்பதிலும் அக்கறைகொள்ள வேண்டும். குழந்தைப் பராமரிப்பு என்பது நேர நேரத்துக்குப் பால் புகட்டுவதிலோ குளிப்பாட்டுவதிலோ மட்டும் இல்லை. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது மட்டும் போதாது.
அதன் கழிவு நீக்கத்தில் எப்போதும் கவனத்தோடு இருப்பதும், அதை உடனடியாக அகற்றுவதும் மிக முக்கியமான பொறுப்பு. குழந்தையைக் கையில் ஏந்தி இருக்கும்போது சிறுநீர் கழித்தால், ஏந்தி இருப்பவர் எந்தச் சலனமும் காட்டக் கூடாது. ஒரு சிறு அதிர்வும் சிறுநீர்க் கழித்தலைத் தடுத்துவிடக்கூடும். அப்படித் தடுத்தல் குழந்தையின் மென்னுணர்வைப் பெருமளவு பாதிக்கும்.
ஆனால், இன்றைய ‘அட்டாச்டு பாத்ரூமாக’ குழந்தையின் இடுப்பில் பொருத்திவிடும் டயாபர் அதன் உள்வெப்பத்தை வெளியேறவிடாமல் தேக்கி வைத்துக்கொள்கிறது. அப்படித் தேக்கி வைக்கப்படும் வெப்பம், வயிறு உப்பல் தொடங்கி பொடுகுவரை பல்வேறு விதமான உடல் நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடும்.
உணவு முறையும் பயிற்சியும்
அதுபோக மிக முக்கியமாக ஆசனவாயின் மென்னுணர்வு மரத்து விடுவதால் மல வெளியேற்றம் இயல்பாக நடந்தேற முடிவதில்லை. மல வெளியேற்றம் வலி தரும் ஒன்றாகிவிடுமானால் வலிக்குப் பயந்து குழந்தை மலத்தை உள்நோக்கி உந்தத் தொடங்கும்.
இதற்குப் பழைய கை மருத்துவ சிகிச்சையோ அல்லது அலோபதி சிகிச்சையோ மேற்கொண்டு மலத்தை வெளியேற்றலாம். அது தற்காலிகத் தீர்வை மட்டுமே தரும். மல வெளியேற்றத்தை இயல்பான ஒன்றாக மாற்றியாக வேண்டும். மல வெளியேற்றம் இயல்பானதாக மாற, உணவு முறையும் இயற்கையான பயிற்று முறைகளுமே பொருத்தமானது.
குழந்தைப் பருவத்தில் தொடங்கும் மலச்சிக்கல் நிரந்தரமாக மாறி மனச்சிக்கல்வரை கொண்டு வந்து சேர்த்துவிடலாம். மலச் சிக்கலைத் தவிர்ப்பதற்குரிய எளிய வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago