நமக்கே நமக்கென்று உதவியாளர் ஒருவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம் உத்தரவுகளை அப்படியே செயல்களாக மாற்றும் உதவியாளர். அதுவும் சம்பளம் ஏதும் கேட்காத உதவியாளராக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். இல்லையா? அதோடு அந்த உதவியாளருக்கு இனிமையாகப் பாடவும் தெரிந்திருந்தால்..? மகிழ்ச்சியின் உச்சம்தான்!
உண்மையில் அப்படியான உதவியாளர் ஒருவர் இருக்கிறார். அதுவும் ஒரே ஒருமுறை உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் 3 ஆயிரம் ரூபாய் அல்லது 7 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும். அந்த டிஜிட்டல் உதவியாளரை விலைக்கு வாங்கிவிடலாம். அந்த உதவியாளர் பெயர் ‘அலெக்ஸா’.
பாடல்களை ‘ஒலி’ பரப்பும் கருவி
அமேசான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஒரு டிஜிட்டல் கருவிதான் அலெக்ஸா. இதனுடைய முதன்மை வேலை, ஒரு ஒலிப்பெருக்கியாகச் செயல்படுவதுதான். இணையத்தில் இருக்கும் பாடல்களைப் பாடும். உங்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, ஸ்மார்ட்ஃபோன் அல்லது பிற இசைக் கருவிகளில் இருக்கும் பாடல்களை ஒலிக்கச் செய்யவும் அலெக்ஸாவைப் பயன்படுத்தலாம்.
ஆனால், இணையத்திலிருந்து பாடல்களைப் பாட நீங்கள் அமேசான் நிறுவனத்தின் இசை வலைத்தளமான ‘அமேசான் மியூசிக்’ நிறுவனத்திடம் பணம் கட்டிய சந்தாதாரராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சில செயலிகளின் உதவியுடன் இலவசமாகக் கிடைக்கும் இசையை அலெக்ஸா ஒலிக்கும். உங்கள் ஸ்மார்ட்ஃபோனை இதனுடன் ‘ப்ளூடூத்’ உதவியுடன் இணைத்து நீங்கள் இசையை ஒலிக்கச் செய்யலாம்.
செயற்கை நுண்ணறிவாளனின் ‘ஸ்கில்’
எல்லாவற்றையும்விட அலெக்ஸாவின் முக்கிய சிறப்பம்சம், இதன் செயற்கை நுண்ணறிவுத் திறன்தான். நீங்கள் வாய்மொழியில் இடும் கட்டளைகளைச் செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஆர்டிஃபீஷியல் இண்டெலிஜென்ஸ்) மூலம் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களுக்கான பணிகளைச் செய்து முடிக்கும். இப்போதுவரை ஆங்கில மொழியில் சொல்லப்பட்ட கட்டளைகளை மாத்திரம்தான் இது புரிந்துகொள்கிறது. விரைவில் தமிழ் மொழியை அலெக்ஸா புரிந்துகொள்ளும் காலம் வரும்.
அலெக்ஸாவை வாங்கிய உடன் அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்புச் செயலியை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அந்தச் செயலியின் பெயரும் அலெக்ஸாதான். அதை நீங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பின் அமேசான் நிறுவனம் அலெக்ஸா செயலியில், உட்செயலிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இதை ‘ஸ்கில்’ (Skill) என்பார்கள். நீங்கள் உங்களுக்குத் தேவையான ஸ்கில்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, செய்திகளுக்காக ‘தி இந்து’ ஸ்கில் உள்ளது. இசைக்காக, எப்ஃஎம் ரேடியோக்களாக, இணையத்தில் பொருட்களை வாங்க அமேசான், ஃப்ளிப்கார்ட் என்று ஸ்கில்கள் குவிந்துள்ளன. அனைத்தும் இலவசம். இந்த ஸ்கில்களை நீங்கள் தரவிறக்கம் செய்துவிட்டால் போதும், அவை குறிப்பிட்ட கட்டளைச் சொற்களைக் கொண்டு இயங்கும். உதாரணத்துக்கு, ‘அலெக்ஸா, இன்றைய செய்திகள்’ என்று நீங்கள் ஆங்கிலத்தில் கூறினால் போதும். தற்போதைய செய்திகள் ஒலிக்கத் தொடங்கும். ‘அலெக்ஸா’ என்று சொல்லிவிட்டு நீங்கள் அடுத்துப் பேசுவது அனைத்தும் அதற்கான கட்டளைச் சொற்கள்தாம்.
சிக்கல்கள் என்ன?
இது ஆப்பிள் ஐபோனில் இருக்கும் ‘சிரி’ எனும் செயலியைப் போன்றது. இப்போது ஆண்ட்ராய்டில் கூகுள் நிறுவனம், ‘கூகுள் அசிஸ்டென்ட்’ எனும் செயலியைக் கொடுத்துள்ளது. இவையெல்லாம் ஒரே மாதிரி இயங்கும். அமேசான் நிறுவனத்தின் இந்தக் கருவி, பல அற்புதங்களை நிகழ்த்தினாலும், இதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை.
இந்தக் கருவியை நீங்கள் இணையத்தில் தொடர்புபடுத்திவிட்டால் போதும், உங்களுக்கான சேவகனாக மாறும். ஆனால், அதேநேரம் உங்களைப் பற்றிய பல தகவல்களை இது சேகரித்து அமேசான் நிறுவனத்துக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.
அலெக்ஸாவை வைத்து நிகழ்த்திய ஒரு தொழில்நுட்ப ஆய்வில், நீங்கள் இந்தக் கருவியை இணையத்துடன் சேர்த்துவிட்டால் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு முறை, அது பல தகவல்களைச் சேகரித்து அமேசான் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும் என்று கணினி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சரி, எந்த மாதிரியான தகவல்கள்?
தகவல் திருட்டும் பொருள் திணிப்பும்
ஒரு பயனாளர் கேட்கும் பாடல்கள், எந்த மாதிரியான கட்டளைகளை அவர் பிறப்பிக்கிறார், எதை விரும்புகிறார் என்பது போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும். இவை அனைத்தும், ஒருவருக்குத் தகுந்த விளம்பரங்களையும் சரியான பொருட் களையும் கொடுப்பதற்காகத்தான் என்று அமேசான் நிறுவனத்தினர் சொல்வார்கள்.
இது மாதிரியான இணைய நிறுவனங்கள் அவர்கள் சொல்வதைப் போல் சரியாகச் செய்துவிட்டால், நமக்குச் சிக்கல் இல்லை. ஆனால், நமக்கே தெரியாமல் அவர்கள் செய்யும் செயல்கள்தாம் நம்முடைய பாதுகாப்புக்கு எதிராகத் திரும்பி விடுகின்றன.
உதாரணத்துக்கு, சமீபத்தில் அமேசான் நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தியில், பயனாளரின் குரலை வைத்தே அவருக்கு மருத்துவ ரீதியான உதவிகளைச் செய்ய முடியும் என அறிவித்துள்ளார்கள். இதற்கான ஆய்வுகளைச் செய்து வருவதாகக் கூறுகிறார்கள்.
இப்படி அவர்கள் சேகரிக்கும் தகவல்களை, தங்கள் பொருட்களை உங்களிடம் திணிப்பதற்காக அவர்கள் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. ‘கிண்டில்’ கருவி செய்வது போல! அதேபோல் உங்கள் ரசனை என்ன, நீங்கள் இந்த நேரத்தில் இந்த இடத்துக்கு வாடகை வண்டி மூலம் செல்கிறீர்கள், இந்தப் பொருளை இன்ன தேதியில் வாங்கினீர்கள், என்ன வகைப் படங்களுக்குச் செல்கிறீர்கள் என்று அவர்கள் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் உங்களுக்கு வலுக்கட்டாயமாக அவர்களின் பொருட்களைத் திணிப்பதற்கான உளவியல் உத்திகளைக் கையாள வாய்ப்பிருக்கிறது.
சேவகனா, ஒற்றனா..?
நம்மைப் பற்றிச் சேகரிக்கும் தகவல்கள், அவர்களின் பாதுகாப்பையும் மீறி வெளியே கசிந்துவிட்டால் அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். இன்று அமேசான் நிறுவனம் உத்தரவாதம் கொடுத்தாலும் பல நேரம் தகவல்கள் கசிந்து ஹேக்கர்களின் கையில் சென்ற செய்திகளை நாம் படித்திருக்கிறோம்.
இன்னொரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்கள். உங்களுடைய வாய்மொழி உத்தரவுகளுக்காகக் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் மைக், உங்கள் உத்தரவுகளை மாத்திரமல்ல, உங்கள் குடும்பத்தில் நிகழும் அனைத்து உரையாடல் களையும் பதிவுசெய்து, நிறுவனத்துக்குப் பகிர்வதாகப் பீதியைக் கிளப்புகிறார்கள்.
நமக்கு ஒரு சேவகனாக இருக்கும் என்று நீங்கள் வாங்கி வைக்கும் இந்தக் கருவி, நம் குடும்பத்தின் ஒற்றனாக மாறவும் வாய்ப்பிருக்கிறது என்பது சோகமான செய்தி. இப்போதுவரை அமேசான் நிறுவனம் இந்தச் செய்தியை மறுத்து வந்துள்ளது. அலெக்ஸா, நிச்சயம் பயனாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் என அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது. என்றாலும், ‘இப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது’ என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்!
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago