‘ஒரு மலரில் பல இதழ்கள்’ எனும் பன்மை பொதுவானது. ஆனால் ‘ஒரு மலரில் ஒரே ஒரு இதழ்’ எனும் ஒருமை சிறப்பானதன்றோ! அந்தச் சிறப்பு ஓரிதழ்தாமரை மலருக்குச் சொந்தம். உள்ளடுக்கு, வெளியடுக்கு போன்ற பிரிவுகளோடு பல மலர்களை ரசித்தவர்களுக்கு, ஒரே இதழை மட்டும் கொண்ட மலரைப் பார்க்கும்போது ஆச்சர்யம் உண்டாவது இயல்பே!
பெயர்க் காரணம்: ரத்தனபுருஷ், ரத்னாயுரஷரி ஆகிய வேறுபெயர்கள் இதற்கு உண்டு. ஒரே இதழ் கொண்ட மலர் என்பதால், ‘ஓரிதழ்’ தாமரை எனும் பெயர். தாமரைப் பூவின் நிறத்தில் (வெளிர் சிவப்பு) இதன் மலர் காட்சி தருவதால், ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் தொடர்பு கிடையாது.
அடையாளம்: தாமரைபோல இது நீர்த்தாவரம் அல்ல. நிலத்தில் வளரும் மிகச் சிறிய செடி வகையினம். ஓரளவுக்கு ஈரப்பதம் மிக்க இடங்களில் ஒற்றை மலரைச் சுமந்துகொண்டு, மெளனமாகக் காட்சிதரும். நீளமான இலைகளை உடையது. இதன் இலைகளை நீரிலிட, குழகுழப்புத்தன்மை உண்டாகும்.
வாயிலிட்டுச் சுவைக்க, இதன் குழகுழப்புத் தன்மையை உணர முடியும். ஓரிதழ் தாமரைக்கு, ‘ஐயனிடியம் சஃப்ருடிகோசம்’ (Ionidium suffruticosum) என்ற தாவரவியல் பெயர். ‘வையொலேசியே’ (Violaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. டிரைடெர்பினாய்ட்கள் (Triterpenoids), ஃப்ளேவனாய்டுகள் (Flavonoids), ஆல்கலாய்டுகள் (Alkaloids) போன்ற தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.
உணவாக: ‘தாதுவை உண்டாக்கும் தனிமேகத்தைத் தொலைக்கும்…’ என்ற ஓரிதழ் தாமரைக்குச் சொந்தமான மருத்துவப் பாடல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் இது சிறந்த மருந்து என்று குறிப்பிடுகிறது. ஓரிதழ் தாமரையை (முழுத் தாவரத்தையும்) தினமும் காலையில் உணவு முறைக்குள் சேர்த்து வர, உடலுக்குப் பலமுண்டாகும்.
குளிர்ச்சித்தன்மை கொண்ட ஓரிதழ் தாமரை, யானை நெருஞ்சில், அம்மான் பச்சரிசி போன்ற மூலிகைகளை ஒன்றாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் குணமாகும். ஓரிதழ் தாமரையை உலர்த்திப் பொடிசெய்து, பனைவெல்லம் கலந்து அரை தேக்கரண்டி வீதம் பாலில் இருவேளை சாப்பிட்டுவர, தாது விருத்தியாகும்.
மருந்தாக: கொழுப்பு மிகுந்த ஊட்டத்தை எலிகளுக்குக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஓரிதழ் தாமரையிலிருக்கும் ‘கொமரின்’ (Coumarin) எனும் பொருள், அதிகரித்த கொழுப்புச் சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விந்தணுக்களின் உருவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவற்றின் செயல்திறனைச் சிறப்பாக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் நுண்சிரை பாதிப்புகளைத் தடுக்க, இது பெருமளவில் பயன் தருகிறது.
வீட்டு மருந்தாக: மன அழுத்தத்தைக் குறைக்க, ஓரிதழ் தாமரை மற்றும் நீர்ப்பிரம்மியை அரைத்துத் தலையில் பூசும் முறை பின்பற்றப்படுகிறது. விரைவில் விந்து முந்தும் நிலையைக் குணமாக்க, ஓரிதழ் தாமரைச் சூரணம் சிறந்த மருந்து. சிறுநீர் எரிச்சலைக் குறைக்க, ஓரிதழ் தாமரையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.
சுரத்தைக் குறைக்கும் கஷாய வகைகளில் ஓரிதழ் தாமரையையும் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. பொடுதலை, செம்பரத்தை, மருதாணி இலைகளோடு இதன் இலைகளை அரைத்து நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி, முடித் தைலமாக பயன்படுத்த, கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், பொடுகுத் தொந்தரவின் தீவிரமும் குறையும். உடல் பருமனைக் குறைக்க இதை முயன்று பார்க்கலாம் எனும் சித்த மருத்துவக் குறிப்பு ஆய்வுக்குரியது.
ஓரிதழ் தாமரை, கோரோசனை, பச்சைக் கற்பூரத்துடன் பசு நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘மை’ வகை மருந்தை, பாலியல் நோய்களில் ஏற்படும் புண்களுக்கு வெளிப்பிரயோகமாகத் தடவலாம்.
ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மட்டுமல்ல, ஓரிதழ் தாமரையின் இந்த ஓரிதழும் ஆனந்தக் கும்மிகள் கொட்டும்!...
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago