தன்னிலை தொலைந்து திரிபவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவ உலகம் வரையறுத்துள்ளது. பொதுச் சமூகமோ அவர்களை ‘பைத்தியம்’, ‘மெண்டல்’, ‘மறை கழன்றவர்கள்’, ‘பூச்சாண்டிகள்’ எனப் பலவாறு ஏளனம் செய்கிறது.
இது போதாதென்று ‘திருடர்கள்’ என்றோ ‘குழந்தை கடத்துபவர்கள்’ என்றோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவர்கள் அடித்துக் கொல்லப்படும் அவலங்களும் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன.
இவற்றுக்கிடையில், அத்திப்பூத்தாற் போல, யாரோ ஒரு சிலர், ஏதோ ஒரு முறை, தங்களால் இயன்ற அளவுக்கு உணவையோ பணத்தையோ அவர்களுக்கு அளிக்கின்றனர்.
இருப்பதைக் கொடுப்பதா உதவி?
இருப்பதையும் இயன்றதையும் கொடுப்பது உதவியல்லவே? என்ன தேவையோ அதைக் கொடுப்பதுதானே உதவி. எது தேவை என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அதைக் கொடுப்பதற்கும் மனம் மட்டும் இருந்தால் போதாது. அறிவும் திறனும் அர்ப்பணிப்பும் முழு ஈடுபாடும் வேண்டும்.
மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பாரத் வாட்வாணியிடம் அவை மிகுதியாக உள்ளன. அதனால்தான் அவருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு இணையாக ஆசிய அளவில் வழங்கப்படுவதுதான் இந்த விருது!
மனநோயாளிகளின் மீதான நேசம்
அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும், தனக்குத் தானே பேசிக்கொண்டோ தமக்குள் உருவகித்து வைத்திருக்கும் யாரோ ஒருவரை வசைபாடிக்கொண்டோ சாலைகளில் திரியும் நபர்களை அன்றாடம் நாம் எதிர்கொள்கிறோம். பேருந்தில் செல்லும்போதும் ரயிலில் செல்லும்போதும் நடந்து செல்லும்போதும் தினமும் அத்தகைய மனிதர்களை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம்.
ஆனால், பாரத் வாட்வாணி அப்படிக் கடந்து செல்லவில்லை. மனநலம் குன்றியவர்களை நேசிக்கும் மனமும் சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வையும் அவருக்கு இயல்பிலேயே இருந்தது. சுயத்தை மறந்தும் இழந்தும் சாலைகளில் அனாதைகளாக, ஒரு பரதேசியைப் போன்று திரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை அரவணைத்துச் சிகிச்சையளித்து, அவர்களை அவர்கள் குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளார்.
சேவையின் தொடக்கப் புள்ளி
மருத்துவப் படிப்பு முடித்தபின், மனங்களின் மேல் இருந்த நேசம் காரணமாக முதுநிலை படிப்புக்கு மனநலத்தைத் தேர்வுசெய்தார் வாட்வாணி. மனநல மருத்துவம் நன்கு சம்பாதிக்க வழிவகுக்கும் ஒரு துறை. இருந்தும், வாட்வாணியின் கவனம் பணத்தின் மீது இல்லை. அவரது கவனம் சாலைகளில் திரியும் மனநோயாளிகளின் மீது இருந்தது. எல்லாச் செயல்களுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். வாட்வாணியின் இந்த உன்னதச் சேவைக்கும் ஒரு தொடக்கம் இருந்தது.
ஒரு பயணத்தின்போது, சாக்கடையிலிருந்து கழிவு நீரை அள்ளிக் குடிக்கும் ஒரு இளைஞரை அவர் காண நேர்ந்தது. நீண்ட தலைமுடியும் ஒல்லியான தேகமும் அழுக்கையே உடையாகவும் கொண்ட அந்த இளைஞரை அப்படி விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. மனநல மருத்துவர் என்பதால், மனச்சிதைவு நோயால் அந்த இளைஞர் பாதிக்கப்பட்டிருந்தது வாட்வாணிக்குப் புரிந்தது.
அந்த இளைஞரைத் தனது மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சையளித்தார். சில மாதங்களில் அவன் குணமும் அடைந்தார். அந்த இளைஞரின் பின்னணி வாட்வாணிக்கு அதன் பிறகுதான் தெரியவந்தது. அந்த இளைஞர் ஒரு பட்டதாரி. மருத்துவ லேப் டெக்னாலஜியில் டிப்ளோமா முடித்தவர். அவர் தந்தை அரசு வேலையில் உள்ளார். அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இந்தத் தகவல்கள் வாட்வாணியை அதிர்ச்சியில் உறையவைத்தன.
அவர்களுக்கும் வாழ்வு உண்டு
சாலைகளில் திரியும் மனநோயாளிகள், எந்த விதப் பிரக்ஞையுமற்று, யாருமற்ற அனாதைகளாக இன்று திரியலாம். ஆனால், அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கக்கூடும். ஒரு அழகான கடந்த காலம் இருந்திருக்கக்கூடும். அவர்களின் பிறப்பு கொண்டாடப்பட்டிருக்கக்கூடும். நேசமும் பாசமும் மிகுந்த பெற்றோர் அவர்களுக்கும் இருக்கக்கூடும். சிறு வயதில் அவர்களின் மீதும் செல்லம் பொழியப்பட்டிருக்கக்கூடும் என்பதை அந்த இளைஞரின் மீட்பு முயற்சி அவருக்கு உணர்த்தியது.
சாலைகளில் இவரைப் போன்று இன்னும் எத்தனை பட்டதாரிகள் தன்னிலை மறந்து திரிகிறார்களோ என்ற எண்ணம் அவரது ஆன்மாவை உலுக்கியது.
இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தவர், 1989-ல் தன் மனைவி ஸ்மிதாவுடன் (அவரும் ஒரு மனநல மருத்துவர்) இணைந்து ‘சாரதா மறுவாழ்வு மையம்’ எனும் அமைப்பை மகாராஷ்டிர மாநிலத்தின் கர்ஜாத் எனும் பகுதியில் அவர் தொடங்கினார். அதன்மூலம் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான மனநோயாளிகளை மீட்டு, குணப்படுத்தி, அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்துவைத்துள்ளார். உத்தர பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத், பிஹார், ஆந்திரா, தமிழ்நாடு எனப் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் அவரால் மறுவாழ்வு பெற்றோரின் பட்டியலில் அடங்குவர்.
தேடி வந்த மகசேசே
மீட்பதும் குணப்படுத்துவதும் குடும்பத்துடன் இணைப்பதும் ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் எளிதான செயல் அல்ல. மீட்கப்படுபவர்கள் பெரும்பாலும் தங்கள் சுயநினைவில் இருக்கமாட்டார்கள். பல மாதத் தொடர் சிகிச்சைக்கும் முறையான பராமரிப்புக்கும் பிறகுதான் அவர்களுக்கு சுயம் புரிபடும். அதற்குப் பின்தான் அவர்களது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைக்க முடியும்.
இத்தகைய சவால்மிக்க அலுப்பூட்டும் பணியைத்தான் 1989 முதல் இன்றுவரை வாட்வாணி தன்னலம் துறந்து அலுப்பின்றி ஒரு ஆழ்ந்த தவம் போன்று மேற்கொண்டு வருகிறார். விருதுகளையும் அங்கீகாரத்தையும் அவர் ஒருபோதும் தேடிச் செல்லவில்லை. நோயாளிகளை மட்டுமே தேடிச் சென்றார். இன்று இந்த ‘மனங்களின் மீட்பருக்கு’ மகசேசே தேடி வந்துள்ளது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago