மூலிகையே மருந்து 17: நாடி வரும் நலம்… நன்னாரி!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

பச்சை நிற இலைகளில், வெண்ணிறத்தில் வரிகள் கொண்டிருக்கும் பேரழகான மூலிகை நன்னாரி. ‘அட்ட வகை’ எனும் மூலிகைத் தொகுப்பில் நன்னாரியும் ஒன்று.

அந்தக் காலத்தில் திருவிழாக்கள் தொடங்கி திருமண நிகழ்வுகள் வரை மக்களின் விருப்ப பானமாக இருந்த நன்னாரி சர்பத், பாரபட்சமின்றி ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுத்தது. பன்னாட்டுக் குளிர்பானங்களின் வருகையால் சரிந்த நன்னாரி பானத்தின் மகத்துவத்தை மீட்டெடுப்பது இனி நோயில்லாமல் வாழ்வதற்குக் கட்டாயம். சில்லென்ற குளிர்ச்சியை உடல் உறுப்புகளுக்கு வழங்க, குளிரூட்டும் இயந்திரங்கள் தேவையில்லை, ஐஸ்கட்டிகள் அவசியமில்லை… நன்னாரி பானம் போதும்.

பெயர்க்காரணம்: அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்றவை நன்னாரியின் வேறு பெயர்கள். இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் ‘பாற்கொடி’ என்றும், வாசனையைக் கொடுப்பதால் ‘சுகந்தி’ என்றும் பூமிக்குள் வளரும் இதன் வேர்த்தொகுப்பைக் கருத்தில்கொண்டு ‘பாதாளமூலி’ என்ற பெயரும் இதற்கு அமைந்தது. நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி போன்ற வகைகளும் உள்ளன.

உணவாக: குளிர்காலத்துக்கு தூதுவளைத் துவையல் போல, வெயில் காலத்துக்கு நன்னாரித் துவையல், காலத்துக்கேற்ற நோய் நீக்கும் உணவு. நன்னாரித் தாவரம் முழுவதையும் எடுத்து, நெய்யிட்டு வதக்கி, மிளகு, இந்துப்பு, சிறிது புளி சேர்த்து, துவையலாகச் செய்து கொள்ளலாம். அதிகரித்திருக்கும் பித்தத்தைக் குறைக்க, நன்னாரித் துவையல் உதவும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்துவதோடு, அதன் காரணமாக உடலில் தோன்றும் நாற்றத்தையும் நீக்கும்.

அவ்வப்போது நன்னாரியைச் சமையலில் சேர்த்துவர, உடலின் வெப்பச் சமநிலை முறைப்படுத்தப்படும். நன்னாரி, பனைவெல்லம், எலுமிச்சைச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘நன்னாரி சர்பத்’ அனைவரது வீட்டிலும் புழங்க வேண்டிய மூலிகை பானம். நன்னாரி சர்பத் என்ற பெயரில் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் கலர் கலரான சாயங்கள் தரமானவை அல்ல. இயற்கையாகத் தயாரிக்கப்படும் நன்னாரி சர்பத்தின் நிறம் இளஞ்சிவப்பு.

மருந்தாக: புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் (Anti-tumour activity), பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலும் நன்னாரிக்கு இருப்பதாக உறுதிப்படுத்துகின்றன ஆய்வுகள். ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ பாக்டீரியாவை அழித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாதவாறு நன்னாரி சேர்ந்த மருந்துகள் பாதுகாக்கும்.

பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்கும் வன்மையும் நன்னாரிக்கு இருக்கிறது. காயம் ஏற்பட்ட இடத்தில், புது செல்களின் உருவாக்கத்தை (Increases epithelisation) நன்னாரி தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீட்டு மருந்தாக: நன்னாரி வேரை ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீரில் ஊறவிட்டு, சிறிது கருப்பட்டி சேர்த்துப் பருக, செரிமானம் சீராகும். சுவைமிக்க இந்தப் பானத்தை, வளரும் குழந்தைகளுக்கு வழங்க, பசி அதிகரித்து உணவின் சாரம் முழுமையாக உட்கிரகிக்கப்படும். சிறுநீரகப் பாதை தொற்று காரணமாக ஏற்படும் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற அறிகுறிகளுக்கு, நன்னாரி வேரை உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து அருந்த உடனடிக் குணம் கிடைக்கும்.

இதன் வேர்ப்பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்னாரி வேரை நன்றாக இடித்து, பாக்கு அளவு பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர, தேகத்தில் சுருக்கங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் உண்டாகாது என்கிறது ‘மூலிகை கற்பமுறை’. தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுவதோடு, ரத்தத்தையும் தூய்மையாக்க உதவும் சுத்திகரிப்பான், இந்த நன்னாரி.

ஒவ்வொரு முறை உணவருந்திய பிறகும், நன்னாரி வேர் ஊறிய நீரைக்கொண்டு வாய்க் கொப்பளிக்க, பற்களும் ஈறுகளும் பலமடையும்.

பூமிக்கு மேல் அழகிய கொடி… பூமிக்கு அடியில் மணம் வீசும் வேர் என நன்னாரி… நம் நலம் நாடி நிற்கிறது!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்