‘கண்கள் உடம்பின் ஒளிவிளக்கு’ என்பது மோசஸ் காலத்திலிருந்து உள்ள கூற்று. கண்ணைக் கொடுத்து கடவுளின் அதீத அன்பைப் பெற்றதாகட்டும், தன் கண்களைக் கடைசி வரை கட்டி வைத்திருந்து, கண்ணிருந்தும் பார்வையற்றவளாக வாழ்ந்து கணவனின் காதலைப் பெற்றதாகட்டும், இந்திய இலக்கியங்களும் இதிகாசங்களும் கண்ணைக் கொண்டாடிய நிகழ்வுகள் ஏராளம். உண்மையில் அகத்திலுள்ளதை முகத்தில் காட்டும் முக்கிய பணியைச் செய்வது கண்கள்தாம்.
அழுக்கோ அழகோ… தன் முன்னால் உள்ளதை ஒளிக்கற்றை வழியாகப் பெற்று, மூளைக்கு அனுப்பி, அங்கே ‘அமைக்டலா’வைத் தூண்டி காதலையோ கரிசனத்தையோ கொட்டச் செய்வது கண்கள் வழிதாம்.
அந்தக் கண்களை, கரிசாலை மை தடவிக் குளிர்ப்பித்த காலத்திலிருந்து, மஸ்காரா போட்டு மயக்கும் காலம்வரை பராமரித்த விதங்கள் ஏராளம். 80-களில் ‘டேய் கண்ணாடி’ என அழைப்பது ஒருவரை மிக அவமானப்படுத்தும் இளக்காரச் சொல். ஆனால், இன்று கண்ணாடி அணிவது ஒரு ஸ்டைல் ஸ்டேட்டஸ்!
விளைவுகளை உதாசீனப்படுத்தாதீர்
இனிப்பு தேசத்தில் இந்தக் கண்களைப் பராமரிக்க இன்னும் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாதபோது, ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு, பின்னாட்களில் பார்வைக்காகப் போராட்டம் நடத்துவோர் பலர்.
சர்க்கரை நோயினர், கண்கள் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
# அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம்
# பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு
# தெளிவற்ற காட்சி
# காட்சியில் ஆங்காங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம்
இந்தப் பிரச்சினைகள் இருந்தால் அது ‘டயாபட்டிக் ரெட்டினோபதி’யின் (Diabetic retinopathy) தொடக்கம் எனலாம்.
என்ன நடக்கிறது கண்ணில்?
கண்ணில் விழித்திரையை (ரெட்டினா) ஒட்டிய நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிப்புறுவதால், விழித்திரையில் உள்ள நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. ஆதலால் அந்த நுண்ணிய நரம்புகள் வலுவிழப்பது, நரம்பின் உறை வீக்கமுறுவது என பாதிப்புகள் ஏற்பட்டு, பார்வைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.
‘கேட்டராக்ட்’ நோயில் நிகழும் லென்ஸ் பாதிப்பு போன்றோ, சாதாரண கிட்ட- தூரப் பார்வை போன்றோ இது அவ்வளவு எளிதாகச் சரி செய்யக் கூடியது அல்ல என்பதை இனிப்பு நோயினர் கவனத்தில் கொள்ள வேண்டும். விழித்திரையின் நரம்பில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்பு முழுமையான பார்வை இழப்பைக் கொடுத்துவிடும்.
இரண்டு வகை பிரச்சினைகள்
சர்க்கரை நோய் இரண்டு விதமாய் விழித்திரையைப் பாதிக்கிறது. ‘நான் ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டினல் டிசீஸ்’ (Non proliferative retinal disease), ‘ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டினல் டிசீஸ்’ (proliferative retinal disease) என்பன அவை. முதலாவதில், அடிக்கடி பார்வைத்திறன் குறைந்து கண்ணாடி மாற்றும் செலவை அடிக்கடி தரும். நரம்பு உறை நார்கள் வீக்கமும், விழித்திரையின் மையப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். இது தொடர்ந்தால், நாளடைவில் ‘ரெட்டினல் டிடேச்மெண்ட்’ (retinal detachment) எனும் விழித்திரை விலகல் ஏற்படலாம்.
இரண்டாம் பிரிவில், விழிக்கோள நீரினுள் ரத்தக் கசிவு, விழித்திரை விலகல், ‘க்ளுக்கோமா’ எனப்படும் கண் அழுத்தம் அதிகரித்தல் என ஒவ்வொன்றாய் ஏற்பட்டு முடிவில் பார்வை இழப்பு வரக் கூடும்.
என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை நிச்சயம் அவசியம். இன்று லேசர் சிகிச்சை முதல் கண்ணுக்கு உள்ளேயே செலுத்தும் மருந்துவரை நிறைய மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. அதனால் ஆரம்ப கட்டத்தில் பரிசோதித்துவிட்டால், சிகிச்சை சுலபம்.
தவிர, சீரான ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாகக் கண்களைப் பாதுகாக்க மரபு சொல்லும் முக்கிய வழி எண்ணெய்க் குளியல். பித்தத்தைச் சீர்செய்யும் இந்த மரபுப் பழக்கம், பல நூறு ஆண்டுகள் நம்மிடம் இருந்த நலவாழ்வுப் பேணல். இனிப்புநோய் அதி பித்தத்தில் பிரதானமாய்த் தொடங்கும் நோய். ஆதலால் இனிப்பு நோயினருக்கு எண்ணெய்க் குளியல் நிச்சயம் அவசியமான ஒன்று.
கூடவே, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, மீன்கள், வெள்ளாட்டு மண்ணீரல் ஆகியவை கண்களைப் பாதுகாக்க, மரபு சொன்ன உணவு வகைகள். திராடகா யோகப் பயிற்சி, கண்களுக்கான யோகாசனப் பயிற்சி. இத்தனையையும் பின்பற்றினால், இனிப்பு கண்ணைக் கசக்காது.
(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago