உங்கள் குழந்தைகள் விளையாடுகிறார்களா?

By மு.வீராசாமி

 

ள்ளிகள் திறந்துவிட்டன. புத்தாடைகளுடன் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். பள்ளிக்கு அவர்கள் செல்வதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும் நமக்கு, பள்ளியிலிருந்து அவர்கள் திரும்பி வருவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

சில பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்லும் பிள்ளைகள், திரும்பி வரும்போது வியர்த்து, தலைமுடி கலைந்து, சீருடைகளில் கறை படிந்து, காலணிகளின் நிறமே மாறும் அளவு தூசு படிந்து வருவார்கள். அவ்வளவு விளையாட்டு! இப்போதெல்லாம் மடிப்புக் கலையாத உடையுடன் எப்படிச் சென்றார்களோ அப்படியே துணிக்கடை பொம்மைகள் போலத் திரும்பி வருகிறார்கள். அது சரி, இன்றைக்குக் குழந்தைகள் விளையாடுகிறார்களா என்ன?

ஆய்வு தரும் அதிர்ச்சி

நண்பர் ஒருவரின் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் பரிதாபமாக இருக்கும். பிள்ளையைப் பார்த்த உடனேயே சொல்லிவிடலாம், வளர்ந்த பிறகோ அல்லது ஏன் வளரும் பருவத்திலேயேகூட அந்தக் குழந்தைக்கு நீரிழிவு நோய் வருவதற்குரிய சாத்தியம் இருக்கிறது என்று. அவரது பெற்றோரும் நீரிழிவு நோயாளிகள் என்பதால் சாத்தியம் சற்றே அதிகம்தான். அந்தக் குழந்தைக்கு அந்த நோய் ஏற்படலாம் என்று சொல்வதற்கு அந்தக் குழந்தையின் அதிக உடல்பருமன்தான் காரணம்.

எந்நேரமும் தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம்ஸ். போதாதற்கு வாயில் நுழையாத பெயரைக் கொண்ட நொறுக்குத் தீனிகள். அதோடு குளிர்பானங்களும் சேர்த்து என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஏதோ இந்தப் பிரச்சினை இந்தக் குழந்தையோடு நின்றுவிடவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி கள ஆய்வு நடத்தியது. இந்தக் கள ஆய்வில் மாணவ-மாணவிகளில் சுமார் 10 சதவீதம் பேர் உடல்பருமனாக இருப்பதும், சுமார் 9 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்களின் தாக்கம் ஆரம்ப நிலையில் இருப்பதும் தெரிய வந்தது.

குழந்தைகளிடையே காணப்படும் உடல்பருமன் குறித்துப் பல ஆய்வுகள் நடந்துள்ளன. உடல் உழைப்பு இல்லாததும் துரித உணவு, குளிர்பானங்களும் அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

கல்வி மறைக்கும் ‘ஒளி’

இதோடு தொடர்புடைய இன்னொரு பிரச்சினையையும் பார்க்கலாம். பள்ளி செல்லும் பிள்ளைகளிடையே அண்மைக் காலமாக பார்வைக் குறைபாடு அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிக் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கண்ணாடி போட்டிருப்பதைக் காணலாம். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளிடையே இந்த அளவுக்குப் பார்வைக் குறைபாடு பிரச்சினை இருந்தது இல்லை. பிள்ளைகளும் அதிக அளவில் கண்ணாடி போட்டிருக்க மாட்டார்கள்.

மாற்றம் எப்படி வந்தது? இதற்குத் தற்காலக் கல்வி முறையைத்தான் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். போட்டி நிறைந்த கல்வி உலகத்தில், பிள்ளைகள் எந்நேரமும் சதா படிப்பாகவே இருக்க வேண்டியிருக்கிறது. இரவு 12 அல்லது 1 மணிவரை வீட்டுப்பாடம், படிப்பு என்று விழித்திருந்து படிக்க வேண்டி இருக்கிறது. இதனால் விளையாட முடியாத நிலை. வெளியில் போய் விளையாடுவது என்பதே இல்லாமல் போய்விட்டது.

கல்வியால் கிட்டப்பார்வை

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே விளையாடுவதைப் பார்க்க முடியும். விதவிதமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வார்கள். இப்போது? விளையாட்டு என்பதையே மறந்துவிட்டார்கள். வீட்டுக்கு வெளியே சென்று விளையாடுவது அரிதாகிவிட்டது. விளையாட்டு என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்தான் என்றாகிவிட்டது. தேவை என்றால் நொறுக்குத்தீனி தின்றுகொண்டே தொலைக்காட்சியில் விளையாட்டை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த அளவுதான் விளையாட்டுக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையேயான தொடர்பு இருக்கிறது.

சரி, பள்ளியிலாவது விளையாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. பள்ளிகளில் மாணவர்களை விளையாட அனுமதிப்பதே இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டுத் திடலே கிடையாது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால், மொத்தமே நாலாயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களையும் மற்ற பணிகளுக்கு அனுப்புவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. அப்படியே விளையாட நேரமும் இடமும் இருந்து, விளையாட்டு சொல்லித்தர ஆசிரியர்களும் இருந்தாலும், விளையாட்டு நேரத்தை வேறு ஆசிரியர்கள் வாங்கிக்கொண்டு ‘சிலபஸை’ முடிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். இந்த அளவில்தான் இருக்கிறது விளையாட்டுக்கு நாம் தரும் முக்கியத்துவம்.

கல்வி முறை ஒருபக்கம் பிள்ளைகளை வீட்டோடு கட்டிப்போட்டுவிட்டது என்றால், இன்னொருபுறம் செல்போனும் கணினியும் பிள்ளைகளைப் பாடாய்ப்படுத்துகின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிள்ளைகள் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும் சூரியஒளி அவசியம். ஆனால், பிள்ளைகள் வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடாததால் கிட்டப்பார்வை (Myopia) குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு விழிக்குமா?

‘ஓடிவிளையாடு பாப்பா’ என்று பாரதி சொன்னதை அலட்சியப்படுத்தியதன் விளைவையே இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இனியேனும் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்பதைப் பிள்ளைகள் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளிடையே காணப்படும் உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளை உணர்ந்த சி.பி.எஸ்.இ. தற்போது விழித்துக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. அதாவது, 9 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் தினமும் மைதானத்தில் சென்று விளையாடவும் அதற்கென்று தனியாக ஒரு வகுப்பை ஒதுக்கவும் சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டுள்ளது. ஓடியாடி விளையாடுவதன் மூலம் பிள்ளைகளுக்கு உடல்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு பார்வைக் குறைபாடு ஏற்படாமலும் தடுக்க முடியும். தமிழக அரசும் வரும் கல்வி ஆண்டிலேயே இதை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் நலனைப் பாதுகாக்கலாம்.

விளையாடித் தீர்க்கட்டுமே நம் பிள்ளைகள்!

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்