இரட்டை சதம் அடித்த ஒளிவிளக்கு

By டி. கார்த்திக்

உலகிலேயே இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவமனை, தெற்காசியாவின் முதல் கண் மருத்துவமனை, ஆசியாவிலேயே முதல் கண் வங்கி தொடங்கப்பட்ட மருத்துவமனை, ஆசியாவில் முதல் கண் மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற மருத்துவமனை எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டது சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை. இந்த ஆண்டு முக்கியமானதொரு மைல்கல்லை அந்த மருத்துவமனை தொட்டிருக்கிறது. ஆமாம், அந்த மருத்துவமனை 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

அழகு சேர்க்கும் கட்டிடம்

லண்டனில் உள்ள மார்ஃபீல்டு மருத்துவமனைதான் உலகின் முதல் கண் மருத்துவமனை. அதன்பிறகு சென்னையில் 1819-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் ‘மெட்ராஸ் ஐ இன்ஃபர்மரி’. முதலில் ராயப்பேட்டை பகுதியில்தான் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டது. ஆனால், இடப் பற்றாக்குறை காரணமாக தற்போது எழும்பூரில் உள்ள இடத்துக்கு 1844-ம் ஆண்டில் மருத்துவமனை மாற்றப்பட்டது.

44 ஆண்டுகள் கழித்து இந்த மருத்துவமனையின் பெயரை ‘அரசு கண் மருத்துவமனை’ என ஆங்கிலேய அரசு மாற்றியது. இப்போதுவரை அதே பெயரில் அந்த மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. ஆனால், பேச்சு வழக்கில் ‘எழும்பூர் கண் மருத்துவமனை’ என்றால்தான் தெரியும்.

‘லேடி லாலி வார்டு’ என்ற கட்டிடத்தில்தான் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. இன்றும் இந்தக் கட்டிடம் அந்த மருத்துவமனைக்கு அழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது. 2007-ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த வளாகத்தில் இரண்டு பிரம்மாண்டக் கட்டிடங்களுடன் மருத்துமனை செயல்பட்டுவருகிறது.

கிளாகோமாவுக்குத் தனி கவனம்

“கண்புரை அறுவைசிகிச்சை, கண் மாற்று அறுவைசிகிச்சை மட்டுல்ல மாறுகண் பாதிப்பு, பார்வை நரம்புக் கோளாறுகளுக்கான சிகிச்சைகள், கண்களில் ஏற்படக்கூடிய கட்டிகளைச் சரிசெய்தல் என எல்லா பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கண் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிளாகோமா பிரச்சினையைக் கையாள்வதற்கு என தனி `கிளாகோமா யூனிட் ' உள்ளது. இங்கே பார்வைத்திறன், கண் அழுத்தம், நரம்புப் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்கிறார் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி.

தினமும் காலை 7:30 மணிக்கெல்லாம் மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடுகிறது. சிகிச்சைக்கு வருபவர்கள் ஓ.பி. சீட்டை வாங்கிக்கொண்டு மதியம் 1:30 மணிவரை மருத்துவர்களைச் சந்திக்கலாம். முதலில் முதுகலை பயிலும் மாணவர்கள் பரிசோதனை செய்கிறார்கள். பின்னர் சீனியர் மருத்துவர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகிறார்கள்.

சிகிச்சை சாதனைகள்

ஆசியாவிலேயே முதல் கண் வங்கி இங்கேதான் தொடங்கப்பட்டது. இதேபோல ஆசியாவிலேயே முதல் கண் மாற்று அறுவைசிகிச்சையும் இங்கேதான் நடைபெற்றிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கள் இங்கே தானமாகப் பெறப்படுகின்றன. புள்ளிவிவரங்களின்படி சராசரியாக ஒன்று முதல் மூன்று பேர்வரை கண்தானம் செய்கிறார்கள்.

இதற்காக தனிப் பிரிவு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 300 - 350 கண் மாற்று அறுவைசிகிச்சைகள் இங்கே நடக்கின்றன. 1980-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6,890 கண் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற்றிருக்கினறன. இதேபோல இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 854 கண்புரை நீக்கும் அறுவைசிகிச்சைகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன.

படிப்பும் உண்டு

“மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 1942-ம் ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 1949-ம் ஆண்டில் எம்.எஸ். ஆப்தல்மாலாஜி படிப்புகள் தொடங்கப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் 12 பேர் எம்.எஸ். ஆப்தல்மாலாஜியும் 18 பேர் டிப்ளமோ இன் ஆப்தல்மாலாஜியும் நிறைவு செய்கிறார்கள். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 250 மாணவர்களுக்கு ஆப்தல்மாலஜி குறித்த வகுப்புகள் இங்கேதான் நடத்தப்படுகின்றன” என்கிறார் மருத்துவமனை இயக்குநர் மகேஸ்வரி.

இரு நூறு ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றிவரும் இந்த மருத்துவமனை சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பார்வையில் குறைபாடு ஏற்பட்டால், இந்த மருத்துவமனையைத்தான் உடனே நாடிவருகிறார்கள். அவர்களின் விழி பிரச்சினையைத் தீர்த்துவைத்து வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரும் பணியை செய்துவரும் இந்த மருத்துவமனைக்கு 200-வது பிறந்த நாள் வாழ்த்தை அனைவரும் உரக்கச் சொல்லலாம்!

வசதிகள்

இந்த மருத்துவமனையில் மொத்தம் 478 படுக்கைகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,000 வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 47 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் தினசரி 50 கண்புரை நீக்கும் அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்தக் கண் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவும் உள்ளது. இரவில் ஒரு மருத்துவருடன் செயல்படும் பிரிவில் எல்லா நேரமும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஒரு மூத்த கண் மருத்துவர், ஒரு மயக்கவியல் நிபுணர், 20 முதுகலை மாணவர்கள் இங்கே செயல்படுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்