இனிப்பு தேசம் 09: சிறுநீரகத்தை பாதிக்கும் ‘மைக்ரோ’ புரதம்!

By கு.சிவராமன்

வா

ழ்க்கையில் அவசரமாகக் கடந்து போய், தவறவிட்ட கணங்கள் திருப்பிக் கிடைக்காதவை மட்டுமல்ல, தீர்க்க முடியாத சிக்கல்ளையும் கொண்டுவந்து சேர்க்கும். நீரிழிவு நோயும் அப்படித்தான்.

‘என்ன செய்துவிடப் போகிறது?’ என இந்நோயில் நாம் அலட்சியமாய், அறியாமையாய்த் தவறவிடும் கணங்கள், எதிர்பாராத சிக்கல்களைப் பிற்காலத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும். சர்க்கரை நோயில் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு (Diabetic Nephropathy) அப்படியான சிக்கல்களில் ஒன்று!

அவசியமில்லாமலும் சரியான மருத்துவ வழிகாட்டுதலும் இன்றி, இஷ்டத்துக்கு எடுக்கும் எந்த மருந்தும் பின்னாளில் பிரச்சினையைத்தான் தரும். அது நவீனமோ மரபோ, துல்லியமாய்க் கணித்து, திறம்பட மருந்தைப் பரிந்துரைக்காதபோது இச்சிக்கலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

அலட்சியமே முதல் காரணம்

ஹைதர் அலி காலத்தில் டாக்டரிடம் போய் வாங்கிய பிரிஸ்கிரிப்ஷனை நார் நாராகப் பிய்யும்வரை பர்ஸில் வைத்திருந்து, அதே மருந்தை பல வருடங்களுக்கு முட்டுச்சந்தில் உள்ள மருந்துக்கடையில் வாங்கிச் சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு, இந்தப் பிரச்சினை முடிவு கட்டிவிடுகிறது.

மருந்துகளில் அலட்சியம், உணவில் அலட்சியம், உடற்பயிற்சியில் அலட்சியம் என இருப்போர் இறுதியில் வந்து சேர்வது சிறுநீரக நோய்ச் சிக்கலில்தான். கிட்டத்தட்ட 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், சில வருடங்களில் சிறுநீரக நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அதுவும் இந்த அளவு, தற்போது இனிப்பு தேசத்தில் எக்குத்தப்பாக அதிகரித்து வருகிறது.

புரத அளவைப் பாருங்கள்

கட்டற்ற சர்க்கரையால் பழுதாகும் சிறுநீரகம், முதலில் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. முழுசாய் முடங்கிப் போவதற்குச் சற்று முன்னதாகத்தான் சின்னச் சின்ன அறிகுறிகளையும் ரத்தத்தில் புரதம், உப்பு, கிரியாட்டினின்களில் மாற்றத்தையும் காட்டத் தொடங்குகிறது. ‘ரத்தத்தில் யூரியாவும் கிரியாட்டினின் அளவும் சரியாக உள்ளது’ என அலட்சியமாய் இருப்பதைவிட ஆபத்து, இந்நோயில் வேறு எதுவும் கிடையாது.

கிரியாட்டினின் நம்பகத்தன்மையை நவீனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. ‘மைக்ரோஅல்புமின் யூரியா’ (Microalbumin urea) எனும் சிறுநீரில் வரத் தொடங்கும் நுண்ணியப் புரதக் கழிவைத்தான் இப்போது நவீன மருத்துவம் உற்றுப் பார்க்கச் சொல்கிறது.

ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும், தன் ரத்தச் சர்க்கரை அளவோடு உள்ளதா எனக் கணிக்கும் போதே, சிறுநீரில் நுண்ணியப் புரதம் (urine Microalbumin) கழிகிறதா என்பதை அவ்வப்போது பார்க்கத் தவறிவிடக் கூடாது. கூடவே ‘எஸ்டிமேஷன் ஆஃப் க்ளோமெரூலா ஃபில்ட்ரேஷன் ரேட்’ (Estimation of Glomerula filtration rate) எனப்படும் eGFR என்னுமொரு மிக முக்கிய பரிசோதனையையும் பார்த்தாக வேண்டும்.

சோதனைகள் சூழ்ச்சி அல்ல

இந்த இரு சோதனைகளை எல்லா நீரிழிவு நோயினரும் அவ்வப்போது செய்து பார்த்து தம் நலத்தை, தம் சிறுநீரக நலத்தை உறுதி செய்துகொள்வது மிக மிக முக்கியம். மைக்ரோஅல்புமின் (Microalbumin) கொஞ்ச நாளில் ‘மேக்ரோஅல்புமின்’ (macroalbumin) ஆகி பின்னர் ‘எண்ட் ஸ்டேஜ் ரீனல் டிசீஸ்’ (End stage renal disease) எனும் ESRD ஆவது இந்தியாவில் மிக மிக அதிகம். மேலோட்டமாக நீரிழிவுக்கென செய்யப்படும் பல பரிசோதனைகளில் சிறுநீரகத்தின் நலம் முழுதாக அறியப்படுவதில்லை.

‘எல்லாப் பரிசோதனைகளும் தவறு. வணிகச் சூழ்ச்சி கொண்டது’ என்கிற பிரசங்கம் வேறு, நீரிழிவு நோய் சார்ந்து ஆங்காங்கே பேசப்படுவதும், இப்போது கணிசமாக அதிகரித்திருப்பது இன்னும் வேதனை. மருத்துவத் துறையிலுள்ள அறமற்ற வணிகத்தை எதிர்ப்பதாகப் புறப்பட்டு, உண்மையான அறிவியலையும் புறக்கணிக்கும் போக்கு, இந்நோயில் பல சிக்கல்களைச் சாமானியனிடம் கொண்டுவந்து சேர்க்கிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம், நீரிழிவு நோயுடன் யாருக்கு ரத்தக்கொதிப்பு அதிகம் உள்ளதோ, அவருக்கே சிறுநீரக பாதிப்பு வரும் ஆபத்து அதிகம் என்கிறது நவீன மருத்துவம். குறிப்பாக இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம், அதாவது ‘டயாஸ்டாலிக் பிரஷர்’ (diastolic pressure) 90-க்குள் இருக்க வேண்டும்.

உள்ளூர் உணவே நல்லது!

சிறுநீரகத்தின் அளவு ஒவ்வொரு மரபுக்கும் மாறுபடும். அதில் உள்ள மிக நுண்ணிய வடிகட்டிகள், அதாவது ‘நெப்ரான்கள்’ அளவும்கூட மாறுபடும். ஆப்பிரிக்க மரபினரின் நெப்ரான் அளவும் அமைந்தகரை மரபினரின் நெப்ரான் அளவும் நிச்சயம் ஒன்றல்ல. அதேபோல் போஷாக்காகப் பிறந்த குழந்தைக்கும், குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தைக்கும் இந்த நெப்ரான்களின் அளவில் வேறுபாடு உண்டு.

எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் கெடாமலிருக்க பீட்சா, பிரெஞ்சு ஃபிரைஸ் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளைச் சாப்பிடாமல், ஏன் உள்ளூர் உணவு அவசியம் என்பதற்கான காரணத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளூர் மெஸ்ஸின் சாம்பாரில் உள்ள பாசிப்பயறுப் புரதத்துக்கும் அல்லது அயிரை மீன் குழம்புப் புரத்துக்கும், கலிஃபோர்னியா சந்தையில் புழங்கும் சால்மன் மீனின் புரதத்துக்கும் விலங்குப் புரதத்துக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ஆறே முக்கால் அடி உசேன் போல்ட்டுக்கு இணையாக எப்படி நம்ம ஊர் அஞ்சரை அடி சுப்பிரமணி ஓட முடியாதோ, அதே போலத்தான் அவர்கள் சாப்பிடும் பெரும்புரத உணவின் கழிவை, இயல்பிலேயே அளவில் கூடிய அவர்கள் சிறுநீரக நெப்ரான்கள் அழகாக வெளியேற்றிவிடுவதுபோல் நம் நெப்ரான்களால் முடிவதில்லை.

இயல்பிலேயே அளவில் குறைந்த நம் சிறுநீரக நெப்ரான்கள், இச்செயலில் விழிபிதுங்கி விக்கி அடைத்துக்கொள்ளும். மொத்தத்தில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. சிறுநீரகத்தையும் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்