தேசிய மருத்துவர்கள் நாள்: ஜூலை 1
ஓகம் என்றால் யோகம். ஒளடதம் என்றால் மருந்து, மருத்துவம். இவை இரண்டும் ஒன்றானால், அற்புதங்கள் நிகழும் என்கின்றன புதிய ஆய்வுகள். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று இந்தியாவின் பல மருத்துவமனைகளில் ‘இன்டெக்ரேட்டிவ் மெடிசின்’ எனும் புதிய பிரிவு தோன்றியிருக்கிறது. வழக்கமாக வழங்கப்படும் அலோபதி சிகிச்சைகளுடன் சித்தா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, அக்குபங்சர், யோகாசனங்கள் போன்றவை துணை மருத்துவமாக வழங்கப்படுவதுதான் அந்தப் புதிய பிரிவின் சிறப்பம்சம்.
இன்று பல அலோபதி மருத்துவர்கள் யோகாவைச் சந்தேகக் கண்களுடன் பார்த்துவரும் வேளையில், அலோபதி மருத்துவத்துடன் யோகாவை இணைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முன்வந்திருக்கிறது தர்மபுரி மாவட்டம் சிட்டிலிங்கியில் உள்ள ‘டிரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ்’ எனும் பழங்குடி மருத்துவமனை.
ரெஜி ஜார்ஜ் – லலிதா ஜார்ஜ் எனும் மருத்துவத் தம்பதி அந்த மருத்துவமனைய 1993-ல் தொடங்கினார்கள். இது, அந்த மருத்துவமனையின் 25-வது ஆண்டு! அந்தப் பயணத்தைப் பற்றியும், யோகா மூலம் சிகிச்சை அளிப்பது பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் லலிதா:
இனி லலிதா பேசுவார்
“கேரள மாநிலம் கொச்சில இருக்கிற திருப்புனித்துரா என் பூர்வீகம். சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணும்னு ஆசை. ஆலப்புழாவில் இருக்கிற மெடிக்கல் காலேஜ்லதான் படிச்சேன். மகப்பேறு மருத்துவத்துல பயிற்சி எடுத்தேன். படிக்கும்போது, அனெஸ்தீசியாவுல ஸ்பெஷலைஸ் பண்ணிக்கிட்டிருந்த ரெஜி ஜார்ஜும் நானும் காதலிச்சோம். கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
எங்க ரெண்டு பேருக்குமே, கிராமப் பகுதியில மருத்துவர்கள் தேவைப்படுற இடத்துல போய் வேலை செய்யணும்னு ஆசை. அதனால படிப்பு முடிஞ்ச கையோட, நாங்க ரெண்டு பேரும் திண்டுக்கல்ல இருக்கிற காந்தி கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்க இருக்கிற கஸ்தூர்பா மருத்துவமனையில வேலை செஞ்சோம்.
அப்புறம், 1991-ல் ரெஜி, இந்தியா முழுக்கப் பயணம் போய், மக்களோட வேலை செய்யுற நிறைய அமைப்புகளைச் சந்திச்சார். அந்தப் பயணத்தின் வழியா நாங்க வந்து சேர்ந்த இடம்தான் சிட்டிலிங்கி. நாங்க வந்தப்போ, இந்தப் பகுதியில நிறைய மருத்துவத் தேவைகள் இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டோம். தொடர்ந்து 1993-ல் ஒரு சின்ன குடிசையில ஹாஸ்பிட்டல் தொடங்கினோம். இன்னைக்கு அது 6 மருத்துவர்கள், 35 படுக்கைகள் கொண்ட 24 மணி நேர மருத்துவமனையா வளர்ந்திருக்கு” என்று தன் பயண அனுபவத்தைப் பகிர்ந்தார் டாக்டர் லலிதா.
“நாங்க காந்திகிராமம் மருத்துவமனையில வேலை செஞ்சப்போ, அங்க டாக்டர் கவுசல்யான்னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்களை நாங்க எல்லோரும் ‘அம்மா’ன்னுதான் கூப்பிடுவோம். அவங்க அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றினாலும் சித்தா, ஆயுர்வேதம், யோகா மாதிரியான மரபு மருத்துவ முறைகளுக்கும் இடம் கொடுத்தாங்க. அது எங்களை ரொம்பவும் கவர்ந்துச்சு. அவர் வழியில, இப்ப நாங்களும் யோகாவை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கிறோம்” என்று புன்னகைத்தார்.
இந்த மருத்துவமனையைச் சார்ந்த செவிலியர்களுக்கு சென்னையைச் சார்ந்த ‘யோகவாஹினி’ எனும் யோகா கல்வி நிறுவனம் மூலம் ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்பட்டது. வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தவர்களுக்கு, கடந்த வாரம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சரஸ்வதி. தான் யோகாவுக்குள் வந்த கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
இனி சரஸ்வதி பேசுவார்…
“சென்னைதான் என் ஊர். எம்.எஸ்சி. நியூட்ரீஷியன் படிப்பை முடிச்சிட்டு, 1990-ல் ‘கிருஷ்ணமாச்சார்ய யோகா மந்திர’த்துல இருந்து வெளிவந்துக்கிட்டிருந்த பத்திரிகையில ‘எடிட்டோரியல் கன்சல்டண்ட்’ ஆக இருந்தேன். யோகா மந்திரத்துல வேலை செஞ்சுக்கிட்டு, யோகா தெரியாம இருந்தா எப்படி? அதனால 1992-94 காலத்துல டி.கே.வி. தேசிகாச்சார்கிட்ட யோகா கத்துக்கிட்டேன்.
அப்புறம் கல்யாணம், குடும்பம்னு ஆனதுல யோகா செய்றதுல கொஞ்சம் இடைவெளி விழுந்திடுச்சு. அந்த நேரத்துல எனக்குக் கடுமையான முதுகுவலி இருந்துச்சு. அதுக்கு சிகிச்சை எடுத்துக்க எலும்பியல் நிபுணர் ஒருத்தர்கிட்ட போனேன். அவரோ, நீங்க புஜங்காசனம், சலபாசனம் எல்லாம் செய்யணும்னு சொன்னார். எனக்கு ஆச்சரியம் தாங்கலை. ‘இதைத் தானே நாம் பல வருஷங்களா செஞ்சுக்கிட்டிருந்தோம். அதைக் கைவிட்டுட்டோமே’ன்னு அப்ப எனக்குத் தோணுச்சு. திரும்பவும் யோகா செய்ய ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் முதுகுவலி திரும்ப வரவேயில்லை.
அப்பதான், இந்தக் கலையை ஒரு துணை மருத்துவமா ஏன் மத்தவங்களுக்கும் எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னு யோசிச்சேன். 2010-ல ஹைதராபாத்தில் ‘யோகவாஹினி’யை ஆரம்பிச்சேன். 2014-ல சென்னையில் தொடங்கினேன். இங்க யோகா பயிற்சிகளை மட்டுமில்லாம, யோகா சிகிச்சையாளர் (தெரபிஸ்ட்) பயிற்சிகளையும் வழங்குறோம். அமெரிக்காவுல இருக்கிற ‘சர்வதேச யோகா சிகிச்சையாளர் சங்க’த்தின் அங்கீகாரம் பெற்ற முதல் இந்திய யோகா கல்வி நிறுவனம் எங்களுடையதுதான்” என்று புன்னகைக்கும் சரஸ்வதி, யோகா எப்படி துணை மருத்துவமாகப் பயன்படும் என்பதைச் சொல்கிறார்.
“நிச்சயமாக யோகாவால் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிட முடியாது. என்கிட்ட வர்ற எல்லோருமே ‘ஆஸ்துமாவுக்கு என்ன ஆசனம் செய்யணும்?’, ‘ரத்த அழுத்தத்துக்கு என்ன ஆசனம்?’ அப்படின்னு எல்லாம் கேட்கிறாங்க. யோகா, நோயை மையப்படுத்தியது அல்ல. அது தனிநபரை மையப்படுத்தியது. அதனால, யாராவது என்கிட்ட ‘ஆஸ்துமாவுக்கு என்ன ஆசனம்?’னு கேட்டா, நான், ‘யாரோட ஆஸ்துமாவுக்கு?’ன்னு கேட்பேன். இதைப் புரிஞ்சுக்கிட்டாலே, யோகா தொடர்பா அலோபதி மருத்துவர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இருக்கும் சந்தேகங்கள் தீர்ந்துவிடும்!” என்கிறார் அழுத்தமாக!
யோகமும் மருந்தாகட்டும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago