‘சு
ண்டக்கா மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலை பண்றான் பாரு’ எனும் சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறிதாக இருந்தாலும் நோய்களைப் போக்கும் மிகப் பெரிய வேலையைச் சுண்டைக்காய் செய்கிறது.
சுண்டைக்காயின் கசப்புத் தன்மை காரணமாக, அதன் பெயரைக் கேட்டவுடனே, காய்ந்த சுண்டை வற்றலைப் போல் பெரும்பாலோரின் முகமும் சுண்டிவிடுகிறது. கசக்கும் சுண்டைக்கு முகம் சுளிக்காமல் உணவில் இடமளிக்க, இனிக்கும் வாழ்வு நிச்சயம்!
பெயர்க் காரணம்: காய்கள் சுண்டிவிடும் தன்மை கொண்டவை என்பதால், ‘சுண்டை’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம். மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது சுண்டை. சுண்டையின் வகைகளில், மலைச்சுண்டை அதிகக் கசப்புச் சுவை கொண்டது, வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டைக்குக் கசப்புத் தன்மை சிறிது குறைவு. காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் உண்டு.
அடையாளம்: ஓரளவு வளரும் பெருஞ்செடி வகை. அகன்று விரிந்த இலைகளில் சிறிய பிளவுகள் தென்படும். வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். முட்கள் கொண்ட தாவரம். சுண்டையின் தாவரவியல் பெயர் ‘சொலானம் டார்வம்’ (Solanum torvum). இதன் குடும்பம் ‘சொலானேசியே’ (Solanaceae). ரூடின் (Rutin), கேம்ஃபெரால் (Kaempferol), குவர்செடின் (Quercetin), சொலாஜெனின் (Solagenin) போன்றவை இதிலுள்ள வேதிப் பொருட்கள்.
உணவாக: வற்றல் வகைகளில் சுண்டை வற்றலுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரியாமை சார்ந்த அறிகுறிகளைக் குணப்படுத்த, சுண்டை வற்றல் மட்டுமே போதும் என்கிறது சித்த மருத்துவம். உலர்ந்த சுண்டைக் காய்களைப் பிளந்து, உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம்.
குடல் பகுதிகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, செரிமானப் பாதையைப் பாதுகாக்கும் ‘மூலிகைக் காவலன்’ தான் சுண்டை. கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலைப் பொடியாக்கி, மோரில் கலந்து சாப்பிடலாம். மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் இது உதவுகிறது. சுண்டையின் கசப்புச் சுவையை ஈடுகட்ட, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டலாம்.
மருந்தாக: இதன் காய்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லி செய்கை (Anti-microbial) இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுண்டையிலுள்ள டார்வனால் (Torvanol), டார்வோசைட் (Torvoside) போன்ற தாவர வேதிப்பொருட்கள், சில வகையான வைரஸ்களுக்கு எதிராகச் செயல்பட உதவுகின்றன. அதிக அளவு அமிலச் சுரப்புகளிலிருந்து வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சளி திரவத்தை (Mucus) சுரக்கச் செய்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் (Anti-ulcerogenic) இதன் இலைச் சாறு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீட்டு மருத்துவம்: முதிர்ந்த சுண்டையின் பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி குறையும். முதிராத சுண்டையைச் சமைத்துச் சாப்பிட சளி, இருமல் மறையும். பசியைத் தூண்டுவதற்கான சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது. ‘சுண்டை வற்றல் சூரணம்’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை… இவற்றை லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்தினால் கழிச்சலும் ஆசனவாய் எரிச்சலும் குறையும். நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம்.
‘என்ன சாப்பிட்டாலும் பிள்ளையின் உடம்புல ஒட்ட மாட்டேங்குதே’ என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள், சுண்டைக்கு அவ்வப்போது உணவில் இடம் அளிக்கலாம். உணவின் சாரம் முறையாக உறிஞ்சப்பட்டு, உடலில் சதைப் பிடிக்க ஆரம்பித்துவிடும். சுண்டை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களில் வைத்துக் கட்டலாம். உடலின் வெப்பத்தைக் குறைக்க, இதன் இலைச் சாற்றைப் பருகலாம்.
தயிரோடு சேர்ந்து உலர்ந்துகொண்டிருந்த சுண்டை வற்றலை வீடுகளில் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. சுண்டைக்காய் புளிக் குழம்பின் ருசியில் மயங்கிய கடந்த தலைமுறைக்கு, செரிமான நோய்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வயிற்றுக்குள் குறுகுறுவென நடனமாடும் புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியைச் சுத்தம் செய்ய, சுண்டையைவிடச் சிறந்த உணவு இல்லை என்பதை இந்தத் தலைமுறையும் புரிந்துகொண்டால் செரிமான நோய்கள் தலை காட்டாது. சாப்பிட்டுப் பாருங்கள்… ‘சுண்டைக்காய் சூப்பர் காய்!’ என்பீர்கள்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago