குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

By டி.எல்.சஞ்சீவி குமார்

‘காருக்குள் சிக்கிக் குழந்தைகள் பலி’ என்ற செய்தியைப் படித்தவுடன் பரிதாபத்தில் ‘உச்சு’ கொட்டியோ... பதற்றத்தில் ‘அச்சச்சோ’ என்று சொல்லியோ வழக்கமான ஒரு விபத்து செய்தியாகத்தான் கடந்து போயிருப்போம். காருக்குள் அடைபட்டிருந்த அந்தப் பத்து நிமிடங்களில் அந்தக் குழந்தைகள் எத்தனை எத்தனை மரணப் போராட் டங்களை அனுபவித்திருப்பார்கள்? ஒரு நிமிடம் மனக்கண்ணில் காட்சிப்படுத்தி யோசிப்போமா? பயங்கரமாக இருக்குமே என்று ஒதுங்க வேண்டாம். அப்போதாவது அந்த வேதனை உறைக்கட்டும்.

விளையாட்டு, ஆச்சரியம், கேள்விகள், பதற்றம், பயம், அங்கும் இங்கும் அலைபாய்வது, கதவைத் தட்டுவது, உதைப்பது, அழுகை, கதறல், முக்கல், முனகல், மூச்சுத்திணறல், மயக்கம், வாய் கோணி கைகால் இழுத்து இறுதியில் மரணம்... எவ்வளவு கொடுமை? ஐந்தாறு வயதே ஆன அந்தப் பிஞ்சுகள் செய்த தவறுதான் என்ன?

யாரைத் தண்டிப்பது? அந்தக் காரை திறக்கும்படி அலட்சியமாக நிறுத்திவிட்டுச் சென்றவர்களையா? இல்லை, குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டவர்களையா?

இங்குதான் என்றில்லை... ஆழ்துளைக் கிணறுகளில், ஓடும் பேருந்துகளில், படிக்கும் பள்ளிகளில், விளையாடும் மைதானங்களில், வசிக்கும் வீடுகளில் எனப் பெரியவர் களான நாம் செய்யும் தவறுகளால் தினம் தினம் குழந்தைகளைக் கொல்கிறோம். நமது அலட்சியத்தால் மடிந்து போகிறார்கள் பல நூறு குழந்தைகள்.

வெளி இடங்களின் பாதுகாப்பு நம் கையில் இல்லை என்பது உண்மை தான். நம் வீட்டில் இருந்து பாதுகாப்புப் பணிகளைத் தொடங்கலாமே:

# சின்ன அழி ரப்பர், தீப்பெட்டி, ஊக்கு, ஊசி, சிறு நாணயங்கள், பல் குத்தும் குச்சி, பாதி தீர்ந்துபோன கிரேயான் பென்சில்கள், மீதமான சோப்புத் துண்டுகள், பூச்சி உருண்டை கள், வாசனை உருண்டைகள், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, பட்டாசு, பிளேடு, கத்தரிக்கோல், முள்கரண்டி, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், ஆசிட், வீடு கழுவும் சோப்புத் திரவப் பாட்டில், இதர மருந்து பாட்டில்கள்... எல்லாம் குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.

# பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்தத் துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவிக் குழந்தையின் மீதே விழக்கூடும். சென்னையில் இப்படி ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.

# வாஷிங் மிஷின் இயந்திரத்தைத் திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்ட குழந்தை, உள்ளே இறங்கிக் கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குளிர்பதனப் பெட்டியின் பின்புறம் குழந்தைகள் அணுகாதபடி, சுவரை ஒட்டி வையுங்கள். குளிர்பதனப் பெட்டியின் பிளாஸ்டிக் ஸ்டாண்டு கொஞ்சம் பலவீனம் அடைந்து லேசாக ஆடினால்கூட, உடனே மாற்றிவிடுங்கள். குளிர்பதனப் பெட்டியைக் குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, அது குழந்தையின் மீதே விழக்கூடும். விண்டோ ஏசி பெட்டிகளை உயரத்தில் பொருத்துங்கள்.

# டேபிள் ஃபேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்காத குழந்தைகள் அரிது. நெருக்கமான கம்பித் தடுப்புகள் இருக்கும் டேபிள் ஃபேன்களையே வாங்குங்கள். அப்படியே வாங்கி னாலும், அதைத் தொட்டு விளையாடக் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

# டேபிள் ஃபேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றைக் குழந்தையின் கையில் படாத உயரத்தில் வையுங்கள்.

# குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவுப் பொருள் களைக் கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத் துண்டுகளைக் கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. தொண்டையில் பூரி சிக்கி சமீபத்தில்கூட ஒரு இளம் பெண் இறந்து போயிருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

# குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சார சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையைக் கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளைச் செய்வது நல்லது.

# சுவரில் மாட்டும் கனமான கடிகாரம், ஃபிரேம் செய்யப்பட்ட கனமான அலங்கார ஓவியங்கள், ஒளிப்படங்கள், கைவினைப் பொருட்களை குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில், உறுதியான ஆணியை அடித்து மாட்டுங்கள்.

# குழந்தை தூங்கி எழுந்த பின்பு, தொட்டில் துணியை நன்றாக முடிச்சிட்டு எட்டாத உயரத்தில் சொருகி வையுங்கள். அதில் உட்கார்ந்து சுற்றி விளையாடும்போது தூளியில் கூடுதலாகத் தொங்கும் துணி குழந்தையின் கழுத்தை இறுக்கிவிடும் ஆபத்து உண்டு.

# தொட்டிலைப் போலவே திரைச் சீலைகள், அலங்காரத் தோரணங்கள் போன்றவற்றிலும் கவனம் தேவை. இது சார்ந்த இறப்பு சமீபத்தில்கூடச் சென்னையில் நடந்துள்ளது.

# லட்சம், கோடிகள் செலவு செய்து வீட்டைக் கட்டியிருப்போம். ஆனால், பால்கனித் தடுப்புச் சுவரைச் சரியான உயரத்தில் கட்டியிருக்கிறோமா என்று கவனியுங்கள். பால்கனியில் இருந்து வேடிக்கை பார்ப்பதில் குழந்தைகளுக்கு அலாதி விருப்பம். இதில் கூடுதல் கவனம் தேவை. பால்கனித் தடுப்புச் சுவர்களில், ஜன்னல் சுவர்களில், தோட்டத்தின் சுவர்களில் பூந்தொட்டிகள் நழுவி விழும்படி ஓரமாக வைக்க வேண்டாம்.

# தரைத் தண்ணீர்த் தொட்டிகளை ஒவ்வொரு முறையும் கவனமாக மூடுங் கள். அதன் மூடி குழந்தைகள் தூக்க முடியாத அளவுக்குக் கனமானதாக இருக்க வேண்டும். பூட்டுப் போடும் வசதி இருந்தால் ரொம்ப நல்லது.

இப்படி இன்னும் என்னென்ன அபாய அம்சங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று யோசியுங்கள். உங்களுக்கு இன்னும் நிறையத் தட்டுப்படலாம்.

நம் குழந்தைகளை, நம்மால்தான் பாதுகாக்க முடியும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்