இ
ந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா! சர்வதேச அளவில் யோகா, தியானம் போன்றவை கவனம் பெற்றதற்கு மகரிஷி மகேஷ் யோகி, பி.கே.எஸ். அய்யங்கார் போன்ற யோக ஆசான்கள் முக்கியக் காரணம். இவர்கள் தொடங்கி, உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகாவைக் கொண்டு சேர்த்தவர்கள் ஆன்மிகத்தின் வழி ஆரோக்கியம் பேசியவர்கள்தான்.
தமிழகத்தின் தென் எல்லையிலிருந்து ஹரித்வாருக்குச் சென்ற பத்தமடை சிவானந்த சுவாமிகள்தான், அதுவரை ஞான வழித்தேடலில் சென்றோருக்கு மட்டுமே இருந்த யோகக் கலையை, சாமானியனின் நலத்துக்காக வடிவமைத்தும் பரிந்துரைத்தும் செய்த ஆன்மிகக் குருக்களுள் முக்கியமானவர் எனலாம்.
எமனை விரட்டும் ஓகம்
யோகா என்றவுடன் பதஞ்சலி முனிவரின் பங்களிப்பு இன்று அதிகம் பேசப்படுகிறது. அவர் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த 18 சித்தர்களுள் ஒருவரான திருமூலரும் ‘ஓகக் கலை’யை மிக நுட்பமாகப் பேசியிருக்கிறார்.
‘காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்குக் கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என பூரகம் - இரேசகம்- கும்பகத்தைக் கணக்கிட்டுப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்தால், எமனை உதைத்து விரட்டலாம் எனப் பொருள் கொண்ட திருமூலரின் ஓகப் புரிதல்கள், சித்த மருத்துவத் தத்துவங்களோடு நெடுங்காலம் நம்மோடு இருந்து வருபவை. ஓகம், காயகல்பம் எனும் சித்த மருத்துவத் துறையின் மிக முக்கியமான பயிற்சியும்கூட.
கட்டுப்படும் நீரிழிவு
யோகாவைக் கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இயலுமா என்றால், ‘ஆம்’ என்கின்றன பல ஆய்வு முடிவுகள். எந்த அளவில் உள்ள நீரிழிவு நோயாளிக்கு? நீரிழிவு நோயின் மற்ற சிக்கல்களுக்கு எப்படிப் பயனளிக்கும்? நீரிழிவு வராது தடுக்க உதவுமா? நீரிழிவு நோயரின் மன உளைச்சலைத் தவிர்க்குமா? எல்லா நீரிழிவு நோயரையும் வருத்தும் சோர்வை நீக்குமா எனப் பல தளங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
‘ஜர்னல் ஆஃப் டயாபட்டீஸ் ரிசர்ச்’ எனும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ இதழில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்த கட்டுரை சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளில் மிக முக்கியமானது (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4691612/). இக்கட்டுரை உலகெங்கும் யோகாவில் நடைபெற்ற ஆய்வுகள் பலவற்றையும் தொகுத்து, அந்த ஆய்வுக் கட்டுரைகளின் போக்கு, நம்பகத்தன்மை, அவை எல்லாவற்றின் ஒருமித்த முடிவுகள் என்ன என அலசி ஆய்ந்து சொல்கிறது.
வர்ஜீனியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் தேசிய மாற்று மருத்துவமுறை கவுன்சிலும் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவாக, ‘யோகா பண்ணுங்கப்பா… சர்க்கரையும் கட்டுப்படும். சர்க்கரையால் பின்னாளில் சிறுநீரக, இதய சங்கடங்கள் வருவதும் கணிசமாய்த் தடுக்கப்படும்’ என அறிவித்துள்ளது. 2,170 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை எல்லாம் அலசி ஆராய்ந்துதான், யோகாவின் பயன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் பார்த்துப் பயிற்சி
யோகா, கணையத்தில் தொய்வடைந்த பீட்டா செல்களைத் தூண்டுவதையும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸைச் சீராக்குவதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கூடவே மிக முக்கியமாக டீலாமரேஸ் (telomerase) என்ஸைமில் ஆட்சி செலுத்துவது மூலமாக டீலாமர் (telomere) நீளத்தை அதிகரித்து, வயோதிக மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
சரி எந்த யோகாவைச் செய்வது? மூச்சுப் பயிற்சி எப்போது? ஆசனம் எப்போது? இப்படிப் பல கேள்விகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எழலாம். அதற்கு விடைதரும் விதமாக, பெங்களூரூவில் உள்ள யோகா பல்கலைக்கழகமும், மத்திய ஆயுஷ் துறையும் இணைந்து தினசரி செய்ய வேண்டும் என்று, கீழ்க்கண்டவாறு ஒரு மணி நேரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளன (பார்க்க பெட்டிச் செய்தி).
இந்தப் பட்டியல் நோயரின் உடல்வாகு, நோய் வகையைப் பொறுத்து தேர்ந்த சித்த, யோக மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றியமைத்துச் செய்யலாம். வாட்ஸ் ஆப், கூகுள் குருக்களிடம் பயில்வது நல்லதல்ல.
மரபு கொடுத்த பொக்கிஷம்
நீரிழிவு நோய் கட்டுக்குள் வர மனத்தை ஆற்றுப்படுவதும் பரப்பரப்பில்லாத வாழ்க்கை முறையும் மிக மிக அவசியம். இவ்விரண்டுக்கும் மனதையும் உடலையும் ஒருமிக்க வைக்கும் பயிற்சியான யோகா மிக முக்கியமானது.
மூளையின் சிம்பதடிக், பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தில் யோகாவும் மூச்சுப் பயிற்சியும் நடத்தும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, மூளை ஆசுவாசப்படுவதை அதன்மூலம் மன அழுத்த ஹார்மோன்கள் சீர்படுவதையெல்லாம் ஆராய்ந்து அறிந்து சொல்லிவிட்டனர்.
முறையான உணவுடனும் சரியான மருத்துவத்துடனும் எடுக்கப்படும் யோகா பயிற்சியானது நீரிழிவை முழுமையாகக் கட்டுப்படுத்த, நீரிழிவால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அச்சுறுத்தும் பின்விளைவுகளைத் தடுக்க, நம் மரபு கொடுத்த பொக்கிஷம்!
(தொடரும்)
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago