உ
லக அளவில் உடல் பருமன் முக்கியப் பிரச்சினையாக இருந்துவருகிறது. முறையற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையின் விளைவாக உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஓர் எல்லையைத் தாண்டிவிட்டால் எதுவுமே பிரச்சினைதான். அபரிமிதமான உடல்பருமன் மரணத்தை ஏற்படுத்தவும் கூடும்.
அதீத உடல் பருமன் கொண்டவர்களுக்கு நவீன அறிவியல் வழங்கியிருக்கும் கொடை என பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். உடல் எடையைக் குறைக்கும் இந்த அறுவைசிகிச்சை மரணத்தை விளைவிக்கும் என்ற கண்ணோட்டமும் உள்ளது.
அழகு சிகிச்சை அல்ல
‘’இந்த சிகிச்சை முறை 2002-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் முதல் பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை நான் மேற்கொண்டேன். இந்த 16 ஆண்டுகளில் 1,500 பேருக்கு பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை செய்திருக்கிறேன். அவர்களில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அபரிமிதமான எடை, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகியிருந்தவர்கள்.
இது போன்று அரிதாக மரணங்கள் நிகழும் அதேநேரம், இந்த சிகிச்சை மூலம் நலமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சிகிச்சையை பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். உடல் பருமனாக இருப்பவர்களின் எடையைக் குறைத்து, அவர்களை அழகாக்குவதற்கான சிகிச்சை இது என்ற தவறான புரிதல் உள்ளது" என்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்.
02CHVAN_Dr-JS-Rajkumar.jpg டாக்டர் ராஜ்குமார் யாருக்குத் தேவை?
உடல் பருமன் பிரச்சினை உள்ள அனைவருக்கும் இந்த சிகிச்சை தேவைப்படாது. மரணத்தை விளைவிக்கும் உடல் பருமன் (Morbid obesity) உள்ளவர்களுக்குத்தான் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. உயரத்துக்கேற்ற எடை அளவு BMI (Body Mass Index) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அளவீட்டின் அடிப்படையில்தான், இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 23.5 பி.எம்.ஐ. புள்ளிகள் இருப்பது சராசரி அளவு. 37.5 பி.எம்.ஐ. புள்ளியைத் தாண்டி இருக்கிறவர்களுக்குதான் இந்த அறுவைசிகிச்சை தேவைப்படும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வேறு பிரச்சினைகளுடன் இருப்பவர்களுக்கு பி.எம்.ஐ. 32.5-யைத் தாண்டிவிட்டால் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு வகை
பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையில் பானைபோல் இருக்கும் இரைப்பை சுருக்கப்பட்டு, சிறிய குழாய்போல் ஆக்கப்படும். சிறுகுடலின் அளவும் குறைக்கப்பட்டு 150 செ.மீ. தள்ளி இரைப்பையுடன் இணைக்கப்படும். இதன்மூலம் இரைப்பையின் கொள்ளளவு குறைவதால் அதிகம் சாப்பிட முடியாது. உதாரணத்துக்கு 15 இட்லி சாப்பிடுகிறவர்கள், இச்சிகிச்சைக்குப் பிறகு இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது. அளவுக்கு அதிக உணவையும் உடற்பருமனை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பையும் கட்டுப்படுத்துவதால், உடல் எடை குறைந்துவிடும். இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஹார்மோன் செயல்பாடு சீராக இருக்கும்.
அதிக உடல் பருமன், நீரிழிவு, ரத்தக் கொழுப்பு, உயர் ரத்தஅழுத்தம் ஆகிய பிரச்சினைகளில் இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகள் இருந்தால், அது 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் சராசரி வாழ்நாளைவிட 15 ஆண்டுகள் குறைவாகவே வாழ்வார்கள். அவர்களுக்கு பாரியாட்ரிக் அறுவைசிகிச்சை நல்ல வாய்ப்பு.
அதிக உடல் பருமன் மட்டுமே உள்ளவர்களுக்கு பாரியாட்டிக் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை 'மெட்டபாலிக் அறுவைசிகிச்சை' எனப்படுகிறது. 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' பிரச்சினை கொண்டவர்களை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஏனென்றால் பக்கவிளைவாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பதற்கான சாத்தியம் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மெட்டபாலிக் அறுவைசிகிச்சை தீர்வளிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் குறைவு
"பாரியாட்டிக் அறுவை சிகிச்சை மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு போன்றவை கட்டுப்படுத்தப்படும். இதன்மூலம் ஆயுள்காலத்தை அதிகரிக்க முடியும்.
பாரியாட்ரிக் அறுவைசிகிச்சைக்கு இந்தியாவைத் தவிர, மற்ற பிற நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் வெளிநாட்டவர்களைவிட இந்தியர்களுக்கு அலட்சியம் அதிகம். உடனடித் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவில் இதற்கான மருத்துவர்கள் அதிகமானவர்கள் இருந்தும், இந்தச் சிகிச்சையை மேற்கொள்பவர்கள் மிகக் குறைவானவர்களே” என்கிறார் ராஜ் குமார்.
தடுக்க முடியாதா?
அதிக உடல் பருமனுக்கான மருத்துவத் தீர்வு குறித்துப் பேசும் அதே வேளையில் உடல் பருமன் ஏற்படாத வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது பிரச்சினையை முன்கூட்டியே தடுக்கும் வழி. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை:
“உடல் பருமனுக்கு ஹார்மோன் செயல்பாடு முக்கியக் காரணம். உடல் பருமன் பெரும்பாலும் மரபுரீதியாக வரக்கூடியது. அதேநேரம் இன்றைக்கு உடல் பருமன் இல்லாத பெற்றோரின் குழந்தைகளும்கூட உடல் பருமனோடு காணப்படுகிறார்கள். தவறான வாழ்க்கை முறைதான் இதற்கான காரணம். எளிதில் செரிமானமாகி ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் உணவு அதிகம் உட்கொள்ளப்படுகிறது. உதாரணத்துக்கு அரிசி, பால் பொருட்களைச் சொல்லலாம். இவற்றை அதிகம் உட்கொள்ளும்போது உடல் பருமன் ஏற்படும்.
அதேநேரம் கடினமான முறையில் செரிமானமாகி, நிதானமாக ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் பொருட்களை உட்கொண்டால் உடல் பருமன் ஏற்படாது. உதாரணத்துக்கு கோதுமை, சிறுதானியங்கள், இறைச்சியைச் சொல்லலாம். இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளவும் முடியாது. ஏனென்றால், அதற்கான செரிமானத் திறன் நமக்கு இல்லை என்பதால் அவற்றைக் குறைவாகவே சாப்பிடுவோம்.
02CHVAN_dr_kasipichai.JPG மருத்துவர் காசிபிச்சை rightஉழைப்பில்லாத வாழ்க்கை
நமது செரிமானம் 32 கிராம் மாவுச்சத்துக்கு, 5 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு என்கிற விகிதத்தில்தான் இருக்கிறது. ஆகவேதான் உணவில் குறைந்த அளவே எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். இந்த விகிதத்துக்கு அதிகமாக கொழுப்பு உணவை உட்கொள்ளும்போது தோலுக்கு அடியில் கொழுப்பு தங்கி, அடுத்ததாக வயிற்றுப் பகுதி, இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் தங்கிவிடுகிறது. இதனால் உடல் பருமன் ஏற்படுவதோடு வேறு சில பிரச்சினைகளும் உருவாகின்றன.
நவீன உணவு, பதப்படுத்தப்பட்ட டின் உணவு வகைகளில் கொழுப்பு அதிகம் உள்ளதால், அவற்றை உட்கொள்பவர்கள் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். உணவின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் உடலால் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், உபரியாகத் தங்கி உடலை பருமனாக்கும். உடல் உழைப்பின் வழியேதான் குளுகோஸை எரிக்க முடியும். உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறைதான் உடல் பருமனுக்குக் காரணம்” என்கிறார் காசிப்பிச்சை.
உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். குறைந்த அளவில் கொழுப்பை உட்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகாசனம் செய்ய வேண்டும். அத்துடன் சூரிய ஒளி உடலின்மீது படும்போதுதான் ஹார்மோன் இயக்கம் சீராக இருக்கும். வளர்சிதை மாற்றமும் சீர்படும். இதன் மூலம் உடல்பருமனை கட்டுப்படுத்த முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago