காய்ச்சல் வலிப்பு குழந்தைகளை எப்படிப் பாதிக்கும்?

By ஜெ.பாஸ்கரன்

வலிப்பின் வகையறிதலுக்கு மிகவும் முக்கியமானது, வலிப்பு நேர்ந்தபோது நடந்த விவரங்கள் (History). நோயாளி தன் சுயநினைவை இழந்து விடுவதால், அவரால் முழு சம்பவத்தையும் விவரித்துச் சொல்ல முடியாது. அதை நேரில் கண்டவர்களே (Eye witness), முழுமையாக, வரிசைப்படி விவரிக்க முடியும். சில நேரம், நேரில் பார்த்தவர்களுடைய விவரிப்பு மட்டுமே வலிப்பு நோயை அறிந்துகொள்ளப் பெரும் உதவியாய் இருக்கும்!

வந்தது வலிப்புதானா? எந்த வகை வலிப்பு? என்ன காரணங்களால் ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கான விடையே, வலிப்பு நோயைப் பிரித்தறியப் பயன்படும். ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்-ரே, ஸ்கேன், ஈ.சி.ஜி. (ECG), எக்கோகார்டியோகிராம் (Echo) போன்றவை வலிப்புக்கான காரணங்களைக் கண்டறிய உதவும். தொற்று நோய் (மூளை காய்ச்சல்) காரணமா என்பதை அறிய, முதுகில் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரை எடுத்து (Lumbar Puncture) பரிசோதனை செய்யலாம்.

மின் மூளை மின்னலை வரைவு – ஈ.ஈ.ஜி. (Electro Encephalogram):

வலிப்பு நோயறிதலில் மிக முக்கியமான, எளிமையான, மலிவான, பயம் இல்லாத ஒரு பரிசோதனை ஈ.ஈ.ஜி. இதன்மூலம், மூளையின் மின் அதிர்வுகளைப் பதிவு செய்து, வலிப்பு நோய் பற்றி அறிந்துகொள்ள முடியும். நோயாளி அமர்ந்திருக்கும்போதும், தினசரி வேலைகளைச் செய்யும்போதும் (Ambulatory – Portable Machine) ஈ.ஈ.ஜி.யைப் பதிவு செய்யமுடியும்.

‘வீடியோ - ஈ.ஈ.ஜி. டெலிமெட்ரி’ மூலம் ஒரு நாள் முழுவதும் நோயாளியையும், மூளை மின்னதிர்வுகளையும் பதிவு செய்து, வலிப்பு, வலிப்பு போன்றே வரும் மற்ற நோய்களையும் பிரித்தறிய முடியும். வலிப்பு நோய்களையும், அதற்கான காரணங்களையும், மனஉளைச்சலால் வரக்கூடிய பொய் வலிப்புகளையும் (Pseudo Seizures), பிறந்த குழந்தைக்கு (Neonatal) வரும் வலிப்புகளையும் கண்டறிவதில் ஈ.ஈ.ஜியின் பங்கு மிகவும் முக்கியமானது.

சி.டி. ஸ்கேன் என்பது சாதாரண எக்ஸ்-ரே போன்றதுதான். ஆனால் மூளையின் பல்வேறு பகுதிகளையும் அதன் உட்புற அமைப்புகளையும், மாற்றங்களையும் முப்பரிமாணத்தில் அது காட்டுவதால், அதிகமான விவரங்களை அறிந்துகொள்ள முடியும். சி.டி.யால் மூளையில் இருக்கும் கட்டிகள், ரத்தக் கசிவு, ரத்த ஓட்டம் தடைபடுவதால் வரும் இன்ஃபார்க்ஷன் போன்ற பல நோய்களைத் தெளிவாக அறிய முடியும்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன்

எம்.ஆர்.ஐ. (Magnetic Resonance Imaging): இந்த வகை ஸ்கேனில் மிகவும் சக்தி வாய்ந்த காந்தப் புலத்தைப் (Magnetic Field) பயன்படுத்தி மூளை, வேறு திசுக்களின் அதிர்வலைகளைக் கம்ப்யூட்டர் மூலம் முப்பரிமாணப் பிம்பங்களாகப் பதிவு செய்ய முடியும். பிறகு அவற்றை எக்ஸ்-ரே பிலிம்களில் பதிவு செய்து, தெளிவாகப் பார்க்க முடியும்.

வலிப்பு நோய்களைப் பொறுத்தவரையில் சி.டி. ஸ்கேனைவிட அதிக விவரங்களை அளிக்கவல்லது எம்.ஆர்.ஐ. – அதிலும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் போன்றவை, மூளையின் எந்தப் பகுதியில் இருந்து வலிப்பு உருவாகிறதோ, அந்தப் பகுதியின் ரத்த ஓட்டத்தை (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதை) நமக்குத் தெரிவிக்கின்றன.

இம்மாதிரியான பரிசோதனைகள் மூலம், மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களை – பிறப்பிலிருந்தோ அல்லது இடையில் ஏற்படும் சீழ் கட்டி, காச நோய் கட்டி, புற்றுநோய் கட்டி போன்றவற்றைக் கண்டறிந்து, அவற்றை நீக்க முடியும் என்றால், அவற்றால் ஏற்படும் வலிப்புகளையும் தடுத்துவிட முடியும்.

குழந்தைகளும் வலிப்பு நோய்களும்

குழந்தைகளுக்கு வரும் வலிப்புகள், பெரியவர்களுக்கு வரும் வலிப்புகளில் இருந்து பல வகைகளில் மாறுபடும் – எளிதில் வகைப்படுத்தவோ, சரியான சிகிச்சை அளிக்கவோ முடியாதவை. குழந்தைகளின் எதிர்பாராத திடீர் மரணத்துக்கான காரணங்களில் வலிப்பும் ஒன்று என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

பிறப்புக்கு முன், பிறக்கும் போது, பிறந்த பின் – குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட நோய்கள், விபத்துகள் குறித்த எல்லா விவரங்களும் முக்கியமானவை. அதுபோலவே மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி, கற்கும் திறன் குறைபாடு, கவனமின்மை போன்றவை பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம். பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவ காலத் தொற்றுநோய்கள், அடிபடுதல் போன்றவற்றாலும் குழந்தைகளுக்கு வலிப்புகள் வரக்கூடும்.

பரம்பரை வலிப்புகள்

குழந்தைகளுக்கு வலிப்பு வந்தால் ஈ.ஈ.ஜி., எம்.ஆர்.ஐ., ரத்தப் பரிசோதனை களுடன், சதைப் பரிசோதனை, தோல் பரிசோதனை, வளர்சிதை மாற்றம் சம்பந்தமான அனைத்துச் சோதனைகளும் செய்ய வேண்டியிருக்கும். மாலிகுலர் ஜெனிடிக் பரிசோதனை மூலம் குறைபாடுள்ள ஜீன்களைக் கண்டறிந்து, பெற்றோருக்குப் பரம்பரை நோய் தடுப்புக்கான அறிவுரைகளை (Genetic Counselling) வழங்க வேண்டியிருக்கும்.

பரம்பரையாக வரக்கூடிய வலிப்பு நோய்கள் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கக்கூடும். வயதுக்கு ஏற்றாற்போல், பல வகையான வலிப்புகள் குழந்தைகளுக்கு வரக்கூடும். குரோமோசோம் பாதிப்புகள், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள், நோய்த் தொற்றுகள், ஆப்ஸான்ஸ் எனும் பொது வலிப்பு, அனிச்சை (Reflex) வலிப்புகள் எனக் குழந்தைகளுக்கு வரும் வலிப்புகள் ஏராளமானவை. சரியான நேரத்தில், முறையான மருத்துவக் கவனிப்பு இன்றியமையாதது. தவறினால் குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்.

காய்ச்சலும் வலிப்பும்

பொதுவாகக் காய்ச்சலுடன் வரக்கூடிய வலிப்புகள், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும். மேற்கத்திய நாடுகளில் சுமார் 4 சதவீதக் குழந்தைகளுக்கும், ஆசிய நாடுகளில் 8 முதல் 15 சதவீதக் குழந்தைகளுக்கும் காய்ச்சலுடன் வலிப்பும் வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

காய்ச்சல் வலிப்புகள் குணப்படுத்தப்படக் கூடியவையே – பின் விளைவுகள் ஏற்படுத்தாதவைதான். இருப்பினும், அந்த வயதில் வரக்கூடிய, குழந்தையின் உயிருக்கோ, உடல், மனவளர்ச்சிக்கோ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வேறு வகை வலிப்புகளில் இருந்து பிரித்து உணர்தல் அவசியம்.

மூன்று முக்கிய குணங்கள்:

# ஒரு மாதம் முதல் ஐந்து வயதுக்குள் வரக்கூடியது.

# காய்ச்சலுடன் வரக்கூடியது.

# மூளையில் தொற்று நோய்களோ அல்லது வலிப்பு ஏற்படுத்தக்கூடிய வேறு காரணிகளோ இல்லாமல் வரக்கூடியது.

காய்ச்சல் வலிப்புகள் பரம்பரையாகவும் வரும். ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் நச்சுப் பொருட்களாலும், நோய் எதிர்வினையால் வரும் ரசாயனப் பொருட்களாலும், பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளாலும் குழந்தைகளின் முதிர்ச்சி அடையா நிலையில் உள்ள நியூரான்கள் பாதிக்கப்படுவதாலும், காய்ச்சலால் மூளைக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுவதாலும் காய்ச்சல் வலிப்புகள் வருவதாகக் கருதப்படுகின்றன.

இதில் தேவையான பரிசோதனைகள் மூலம், வேறு காரணங்களால் வலிப்பு இல்லை என்று உறுதி செய்துகொள்வது மிகவும் அவசியம்.

காய்ச்சல் வலிப்பு சிகிச்சை

# காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வது.

# காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையுடன் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது.

# குளிர்ந்த நீர் ஒத்தடம், யூடிகோலோன் ஒத்தடம், வெளி வெப்பத்தைக் குறைத்தல் போன்ற முதலுதவிகளை உடனே செய்வது.

# வலிப்பு மருந்துகளை, மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் கொடுப்பது.

காய்ச்சலுடன் வரும் வலிப்புகள் குழந்தைகளின் எதிர்கால மூளை வளர்ச்சியையோ, அறிவுத் திறனையோ பாதிப்பது இல்லை என்பது ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் வலிப்புள்ள குழந்தைகளில் 2 அல்லது 3 சதவீதம் பேர் மட்டுமே எதிர்காலத்தில் வலிப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதனால், பயம் வேண்டாம்.

கட்டுரையாளர்,
நரம்பியல் மருத்துவர்
தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்