நான் சென்னையிலிருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. இங்கு வந்தது முதலே எனக்கு வாய்ப்புண் வந்த வண்ணம் உள்ளது. இந்தப் பிரச்சினை ஏற்கெனவே இருந்ததில்லை. சில நேரம் நாக்கில்கூட புண் வருகிறது. உணவுப் பழக்கத்தில் மாற்றமில்லை. தங்களின் தகுந்த அறிவுரையை வேண்டுகிறேன்.
டி. ஆனந்த், கோவை
வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களை முதலில் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள் (IBD, IBS), ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.
எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். இதில் நீங்கள் எந்த ரகம் என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான காரணத்தைக் களைந்தால், வாய்ப்புண் வருவது தடுக்கப்படும்.
நீங்கள் ஊர் மாறி வந்திருக்கிறீர்கள். அங்குள்ள சுற்றுப்புறத்திலிருந்து சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், அமிலம் கலந்த புகைகள், தொழிற்சாலை நுண்துகள்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தாக்கும் வாய்ப்பிருந்தாலும் வாயில் புண் வர வாய்ப்பிருக்கிறது.
சரியான உறக்கம் இல்லையென்றாலும், அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். கவலை, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். அந்த அதீத அமிலம் உறக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.
வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாக, செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்கன்னத்தைக் குத்திப் புண் உண்டாக்கும்.
அடிக்கடி ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். வலிப்பு நோய் மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. திடீரென உடல் எடையைக் குறைத்தாலும் வாய்ப்புண் வர வாய்ப்பிருக்கிறது. மூட்டுவலி, சுயத்தடுப்பாற்றல் நோய் (Autoimmune disease), ஹார்மோன்களின் மாற்றம் ஆகிய காரணங்களாலும் வாய்ப்புண் ஏற்படுவது உண்டு.
உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாயில் புண் வருகிறது என்று தெரிந்து சிகிச்சை பெறுங்கள். வாய்ப்புண்ணில் சில வகைகள் உள்ளன. அதன் வடிவத்தைப் பார்த்தே பெரும்பாலான வாய்ப்புண்களுக்குக் காரணத்தைச் சொல்லிவிடலாம். இதற்கு மருத்துவரின் நேரடிப் பரிசோதனைதான் உதவ முடியும்.
பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகிவிடும். அதேநேரத்தில் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.
என்ன சிகிச்சை?
மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிசெப்டிக் திரவத்தை உபயோகித்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு, வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலிநிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் உட்கொள்ள வேண்டும்.
வாயில் புண் அடிக்கடி வந்தால், லேக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை ஒரு மாதத்துக்குச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
தடுப்பது எப்படி?
வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரிசெய்ய வேண்டும். ‘சோடியம் லாரில் சல்பேட்’ (Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.
இந்த உணவுகள் முக்கியம்!
பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago