படிப்போம் பகிர்வோம்: புற்றுநோய் கண்டு புன்னகைத்தவர்!

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

தனக்கெல்லாம் வரவே வராது என்று நம்மைப் போலவே நினைத்துக்கொண்டிருந்த மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட்டுக்கு ஒரு நாள் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தனக்கு வந்த புற்றுநோயை எப்படி எதிர்கொண்டு மீண்டார்? புற்றுநோயைப் பார்த்தும் தன்னைப் பார்த்தும் அவர் சிரித்த சிரிப்பே, ‘புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’ எனும் இந்தப் புத்தகம்.

கேரள மக்கள் கொண்டாடும் நகைச்சுவை நடிகரான இன்னசென்ட்டுக்கு தொண்டைப் புற்றுநோய் என்று மருத்துவர் அனுமானித்தவுடனேயே, அவர் சிரிக்கத் தொடங்கிவிடவில்லை. உயிரை அச்சுறுத்தும் நோய் தனக்கு வந்ததை எல்லாரையும்போல அவர் மனம் ஏற்க மறுத்தது. படப்பிடிப்பு நடக்கும் குட்டிகானத்தில் நோய் உறுதிப்பட்ட செய்தி அறிந்து, கொச்சினுக்கு காரில் பயணிக்கும்போது அவர் எதையுமே பார்க்கவில்லை என்கிறார்.

வெற்றுப்பார்வை பார்த்துக் கொண்டிருந்ததாகப் பகிர்ந்துகொள்ளும் அவர், ‘மனிதனுடைய கண்கள் அல்ல. மனிதனுடைய மனதுதான் அனைத்தையும் காண்கிறது’ என்ற அபூர்வமான கண்டுபிடிப்பைப் பகிர்கிறார். ஒருகட்டத்தில் நோயை ஏற்கிறார். அதற்குப் பிறகு தனது அபூர்வமான நகைச்சுவைத் திறனை உடன் வைத்துக்கொண்டே புற்றுநோயை எதிர்கொண்டு போராடுவதற்கான திண்மையையையும் சவாலையும் ஏற்கிறார்.

innocent2புன்னகைப் பகிர்தல்கள்

இன்னசென்ட் ஒரு பிரபலம் என்பதால் சக நடிகர்கள், அரசியல்வாதிகள் தொடங்கி மதப் பிரசாரகர்கள், மாந்திரீகர்கள்வரை பார்வையாளர்களின் வரத்து அவரது வீட்டில் கூடிவிட்டது. தன் வீட்டுக்கு அருகேயுள்ள பழக்கடை நடத்துபவரைத் தனது புற்றுநோய் எப்படிப் பணக்காரனாக்கியது என்பதைக் கிண்டலுடன் விவரிக்கிறார்.

தான் இறந்துபோனால் தன் தெருவிலுள்ள பூக்கடைக்காரர் எவ்வளவு பலன்பெறுவார் என்பதையும் கற்பனை செய்கிறார். இறை நம்பிக்கையும் பிரார்த்தனையும் அவசியம்தான் என்று கூறும் இன்னசென்ட், அதேவேளையில் சரியான மருத்துவமும் கட்டாயம் என்கிறார்.

புற்றுநோயுடன் போராடும் நிலையிலும் ஒரு நகைச்சுவை நடிகனுக்கு அந்தரங்கமாகத் துக்கம் அனுபவிக்கக்கூடச் சூழல் இல்லாத துயரத்தையும் நம்மிடம் உணர்த்திக்கொண்டே இருக்கிறார் இன்னசென்ட். ரத்தத்தின் அளவு குறையாமல் இருப்பதற்குப் போடப்படும் விலையுயர்ந்த ஊசி மருந்தை உடனடியாக ஏற்றிக்கொள்ள வேண்டிய நிலை, ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் அவருக்கு ஏற்படுகிறது.

அந்தப் படப்பிடிப்பு நடக்கும் கிராமத்தில் ஊசி போடும் ஒரு பெண்ணைத் தேடிப்பிடித்து அவரை இன்னசென்ட்டுக்கு ஊசிபோடச் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணோ ஊசி மருந்தின் முக்கியத்துவத்தை உணராமல் சிரித்தபடி மூன்று சொட்டளவே உள்ள மருந்தில் இரண்டு சொட்டை செலுத்தாமல் சிந்திவிடுகிறாள். அதையும் இன்னசென்ட் சிரித்தபடிதான் நம்மிடம் பகிர்கிறார்.

மகிழ்வான புற்றுநோய்க் குடும்பம்

பலத்த போராட்டங்களுக்குப் பிறகு இன்னசென்ட் மீண்ட நிலையில், தற்செயலாகத் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையிலேயே தன் மனைவி ஆலிசையும் பரிசோதனை செய்துகொள்ளச் சொல்கிறார். ஆலிசுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது தெரியவருகிறது. அன்று முழுவதும் அவர்கள் வீட்டை மீண்டும் மரணத்தின் நிழலிருள் சூழ்கிறது.

அன்று இரவு தன் மனைவியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவர் கூறுகிறார். “ஆலிஸ், புற்றுநோய் பரவிவிடும் என்று இனி நாம் பயப்படத் தேவையில்லை. பரிசோதனை செய்து நோய் இல்லை என்று தெரிந்தபின் பணம் போய்விடும் என்னும் உன்னுடைய பயமும் இனி இல்லை. கொடுத்த பணம் இப்போது வசூலாகிவிட்டது. அதற்குத் தெய்வத்துக்கு நன்றி சொல். இப்போது நாம் ஒரு மகிழ்ச்சியான புற்றுநோய்க் குடும்பமாகிவிட்டோம்” என்கிறார்.

innocent3rightஅனுபவ ‘பாடம்’

தனக்குப் புற்றுநோய் முழுமையாகக் குணமாகிவிட்டதென்று அறிவித்தபடி மீண்டும் நடிக்கத் தொடங்குகிறார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார். மலையாளத் திரைக்கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பிலும் தொடர்ந்து பணியாற்றுகிறார்.

உயிருக்கு அச்சுறுத்தலான நோய்களைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் மருந்து மாஃபியாக்களையும் மருத்துவமனைகளையும் பற்றி நாடாளுமன்றத்தில் தன் அனுபவத்தின் அடிப்படையில் அவர் கொடுத்த உரை முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்றும் வெற்றிகரமாகத் திரையிலும் வெளியிலும் சிரித்தபடி புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரசாரகராக இருக்கிறார். இப்புத்தகத்திலிருந்து சில பகுதிகள் ‘சிரிப்பும் சிந்தனையும்’ என்ற தலைப்புடன் கேரள மாநிலத்தின் ஐந்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

நோய் செய்யும் உதவி

மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் தாங்கும் திறன்களைத் தெரிந்துகொள்வதற்கு துயரம், வலி, நோய் போன்றவை அவ்வப்போது அவசியம். ஒருவகையில் வலியும் துயரமும் நோய்களும் நம் உடல், மனம் தொடர்பாக நாம் வைத்திருக்கும் எல்லைகளையும் தடைகளையும் தகர்ப்பவையும்கூட.

நோயும் அது வழங்கும் துயரமும் மனிதனுக்கு இன்னொரு உதவியையும் செய்கின்றன. வர்க்கம், சாதி, பாலினம் என எண்ணற்ற பிரிவினைகளைப் பராமரிக்கும் நம்மிடம், எந்தப் பாரபட்சமும் காட்டாமல் ஒரு நோய் வந்து சேரும்போது தற்காலிகமாகவாவது அனைத்து உயிர்களிடமும் நாம் அனுபவிக்கும் வலி, நிச்சயமின்மை சார்ந்து சமத்துவம் கொள்கிறோம். மரணத்துக்கு முன்னால் நிற்கும் வலியில் நமது அல்பப் பிரச்சினைகள் அனைத்தும் சிறியதாகிப் போவதைக் கண்டு நகைக்கவும் முடியும் என்ற உண்மையை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு

இன்னசென்ட் | தமிழில் : மு. ந. புகழேந்தி,
பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18
தொலைபேசி: 044- 24332924
விலை : ரூ. 50/-

bookjpg

புத்தகத்திலிருந்து…

உங்களுக்குச் சளி பிடித்ததென்றால், உலகத்திலேயே சளிதான் மிகப் பெரிய நோயென்று நீங்கள் நினைப்பீர்கள். அது ஒரு மனோபாவம். புற்றுநோய் வந்தபோது ஏறக்குறைய அனைத்தும் முடிந்துவிட்டது என்று நான் கருதினேன். அதற்குப் பிறகுதான் நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். புற்றுநோய், மரணத்துக்குக் காரணமாகக் கூடிய நோய்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நோய் வந்தால் முறையாக மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆறு மாதங்கள் இல்லையென்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து இறக்கலாம். இல்லையா?

நான் ஒரு முறை விமானத்தில் போய்க் கொண்டிருந்தபோது விமானம் இறங்கும் நேரத்தில் விமானி சொன்னார். ‘நம்முடைய விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாரும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். இது புற்றுநோயைவிடப் பயங்கரமானதாக இருக்கிறதே என்று நான் நினைத்தேன். ஏனெனில் இன்னும் பத்து நிமிடங்களில் உயிர் போகப்போகிறது. புற்றுநோய் மிகச் சாதராணமானது என்பதை அந்த நிமிடம், நான் புரிந்துகொண்டேன். அதுதான் யதார்த்தம்.

நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் நிலைமைகளும் நம் மனோபாவமும்தான் பிரச்சினை. நீங்கள் உங்களுக்கு மேல் நிற்கும் கொடியவனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களைப் பிடித்திருக்கும் கொடியவன் சாதாரணமானவன் என்று தோன்றும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்