நலம் தரும் நான்கெழுத்து 11: எதிலும் ‘பெர்ஃபெக்ட்’டா நீங்கள்?

By டாக்டர் ஜி.ராமானுஜன்

கடவுள்தன்மை என்பது நுணுக்கங்களில் உள்ளது

– லுட்விக் மீஸ்

நீங்கள் துல்லியவாதியா?

தீவிரவாதி, பயங்கரவாதியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன துல்லியவாதி என்கிறீர்களா? எதையுமே துல்லியமாக, மிகவும் முழுமையாக, மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என எண்ணும் மனப்பான்மையே துல்லியவாதம். இது ஆங்கிலத்தில் ‘பெர்ஃபெக்ஷனிசம்’ என அழைக்கப்படுகிறது.

விடாமுயற்சி, பொறுமை, திட்டமிடுதல் போன்ற பண்புகளின் குடும்பத்தைச் சேர்ந்த , அப்பண்புகளுடன் ஒரே ரேஷன் கார்டில் பெயர் இடம்பெறக் கூடிய உடன்பிறப்புதான், எதிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என எண்ணும் பண்பு. உடனடிப் பலன்களை எதிர்பாராமல், உடனடித் தோல்விகளை கண்டுகொள்ளாமல் முழுமையை நோக்கிப் பயணிப்பதே துல்லியவாதம்.

வெற்றிபெற்ற பெரிய மனிதர்களின் குணாதிசயங்களை ஆராய்ந்தவர்கள், விடாமுயற்சியோடு எதையும் மிகச் சரியாகச் செய்யும் துல்லியவாத குணமும் அவர்களது வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

நேரம் தவறாமை முக்கியம்

துல்லியவாதிகள், நூறு சதவீத முழுமையின்றி வேறெதிலும் திருப்தி அடைய மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான குணம், நேரம் தவறாமை. சில நானோ விநாடிகள்கூடத் தாமதமாக வருவது அவர்களுக்குப் பிடிக்காது.

சில இடங்களில் எல்லாமே மிகச் சரியாக இல்லாவிட்டால், ஆபத்தாகக்கூட முடியும். உதாரணத்துக்கு ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் மிகத் துல்லியமாக எல்லாவற்றையும் வைத்திருந்தாக வேண்டும். அதேபோல் விமான ஓட்டி விமானம் கிளம்புவதற்கு முன் எல்லாவற்றையும் சரிபார்த்தல் இன்றியமையாதது.

விதிமுறைகளைப் பின்பற்றுதல்

கச்சிதவாதி, கறார்வாதி என்றெல்லாம்கூடத் துல்லியவாதிகளை அழைக்கலாம். அவர்களுக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பண்பு, விதிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தல். இன்று நம்முடைய பிரச்சினைகளில் பலவற்றுக்குக் காரணம் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் நாம் காட்டும் அலட்சியமே. தலைக்கவசம் அணிவதிலிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதுவரை விதிமுறைகளைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் அலட்சியம் பல தீமைகளை நமக்குத் தந்துள்ளது.

சுதந்திரம் அடைந்தபின் தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமியைப் பற்றி ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுவார்கள். அவர் தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு முறை ரயிலில் பயணம் செய்தாராம். இரவு 12 மணி ஆனபோது டிக்கெட் பரிசோதகரை அழைத்து ‘இன்றுடன் என் மகனுக்கு 18 வயது தொடங்குகிறது. ஆகவே, அவனுக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். ஆகவே மீதித் தொகையை என்னிடம் வசூல் செய்துகொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். இதுதான் விதிகளைப் பின்பற்றுவதில் சமரசமற்ற துல்லியம்.

ஆக, மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளில் முக்கியமான ஒன்று சமரசமற்ற தன்மை. ஆனால், இந்தத் தொடரைத் தொடர்ச்சியாகப் படிப்பவர்களுக்கு ஒன்று இந்நேரம் தெரிந்திருக்கும். எல்லாப் பண்புகளையும் போன்றே சமரசமற்ற துல்லியவாதமும் அளவுக்கு அதிகமாக இருந்தால், சமநிலைச் சீர்குலைவு ஏற்படும். சரியாக இருப்பது ஒரு குற்றமா என்பவர்கள் அடுத்த வாரம் சரிபார்த்துக் கொள்ளவும்!

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

28 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்