அச்சுறுத்தும் ஆண்டிபயாடிக் மருந்துகள்

By கு.கணேசன்

கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவச் சாதனை என்று போற்றப்படுவது, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்று அழைக்கப்படும் ‘ஆண்டிபயாடிக்’குகளைக் கண்டுபிடித்ததுதான்.

உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு 1928-ல் நோபல் பரிசு கிடைத்தது.

உலக அளவில் 1930-க்கு முன்னால் சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூடப் பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் மனித உயிர்களைப் பலி வாங்கிய வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆண்டிபயாடிக்கின் வரவு மனிதக் குலத்தை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியது.

எழுபது ஆண்டுகளுக்கு முன், எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆண்டிபயாடிக் இப்போது முனை மழுங்கிய வாளாக நோயால் வாடும் மருந்தாக தன் சக்தியை இழந்து கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டிபயாடிக் ஆய்வு முடிவின் அறிக்கை இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

‘இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் சவால் விடுகின்றன; நோய்களுக்கு எதிராக இந்த மருந்துகள் நடத்தும் தாக்குதலுக்கு அவை பெரும் தடையாக நிற்கின்றன; ஆண்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதனால் நிமோனியா, கொனோரியா, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆண்டிபயாட்டிக்குகள்கூட செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன?

ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால் அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம்.

அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, எஞ்சியுள்ள கிருமிகள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிவிடும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.

மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்

கடந்த ஒரு நூற்றாண்டாக மிரளவைத்துக் கொண்டிருக்கும் காசநோய், இதற்கு நல்ல உதாரணம். காசநோய் முற்றிலும் குணமடையக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.

ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நம்பி பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடும் திறனைப் பெற்றுவிடுகின்றன.

அதன் பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால், இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாத சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டும் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காச நோயாளிகள் இந்த நிலைமையில் உள்ளனர்.

இரட்டை முனைக் கத்தி!

ஆண்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது: நம் நாட்டில் சாதாரணச் சளிக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக (Over dose) பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.

அதற்குப் பதிலாக அதைவிட வீரியம் நிறைந்த ஆண்டிபயாடிக்குகளைத்தான் அலோபதி மருத்துவம் இப்போது பயன்படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவுகளும் கூடுதல்.

அலட்சியம் வேண்டாம்!

ஆண்டிபயாடிக் விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறோம் என்பதை இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆண்டிபயாடிக் சிகிச்சையை முறை தவறிப் பயன்படுத்தும்போது, எதிர்ப்பு சக்தி உடைய கிருமிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, ஆண்டிபயாடிக் மருந்துகளையே பயனற்றவையாக ஆக்கிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் மோசம். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூடப் பல மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நோயாளிகளும் இதுபோன்ற ஆண்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காகச் சாதாரண நோய்களுக்குக்கூட அதிக வீரியமுள்ள ஆண்டிபயாட்டிக்குளை வலிந்து பரிந்துரைக்கின்றன.

நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் இந்தியாவில் அதிகமான ஆண்டிபயாடிக் பயன்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் 50 சதவீத ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் நோயாளிகளும் அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை.

இந்திய நிலைமை

இந்தியாவில்தான் காலரா, டைஃபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில் வழக்கமான ஆண்டிபயாடிக்குகளுக்கு தடுப்பாற்றலைக் கிருமிகள் பெற்றுவிட்டால், அந்த ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாமல் போகும்போது என்ன செய்வது?

1987-க்குப் பிறகு நம் நாட்டில் புதிய ஆண்டிபயாட்டிக் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மருந்துகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல்நாடுகளைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டும். இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆண்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

நம் கடமை என்ன?

பொதுச் சுகாதாரம் குறைவதுதான் நோய் தொற்றுவதற்கான முக்கியக் காரணம். எனவே, சுய சுத்தம் காப்பதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேணுவதும் நமது மிகப் பெரிய கடமைகள். சுத்தமான குடிநீருக்கும் சுகாதாரமான உணவுக்கும் உத்தரவாதம் வேண்டும். நோய் வந்துவிட்டால் சுயமருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெறுவதுதான் நல்லது. முதலில் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அவர் பரிந்துரைத்தால், சிறப்பு நிபுணரிடம் மேல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.

ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர் சொல்லும் கால அளவையும் மருந்தின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர்களும் நோயாளிகளுக்குச் சரியான வழிகாட்டுதலைத் தர வேண்டும். மருந்துகளை எழுதிக் கொடுக்கும்போது, மருத்துவருக்குரிய கோட்பாட்டின்படி நடந்துகொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த மருத்துவம்!

எல்லா நோய்களுக்கும் அலோபதி சிகிச்சைதான் சிறந்தது என்பதில்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளிலும் நோய் குணமாகும். வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இதை மறந்தாலோ அல்லது மறுத்தாலோ சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். இது, மனித குலத்துக்கு நுண்ணுயிரிகள் விடுக்கும் எச்சரிக்கை.

இதிலிருந்து தப்பிப்போமா? இல்லை, தவறிப்போவோமா?

கட்டுரையாளர், பொது நல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

சுயமருத்துவம் உயிரையும் பறிக்கலாம்!

மேல்நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் வீரியமுள்ள மருந்தையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடியும்.

மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழி அமைக்கிறது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனையைக் கூட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு ஆண்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆண்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது 2011-ல் வெளியாகியிருக்கும் உலகச் சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம்.

இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த நிறுவனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்