நலம் நலமறிய ஆவல் 15: ரத்த அழுத்தம் நோய்தானா?

By கு.கணேசன்

எனக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அதற்காக 'amlopres 5 mg' மாத்திரைகள் தினமும் இரண்டு வீதம் உட்கொண்டு வந்தேன். அண்மையில் ரத்த அழுத்தம் என்பது ஒரு நோயல்ல, உடம்பில் ஒரு வைட்டமின் பற்றாக்குறையை அறிவிப்பதே என ஒரு மருத்துவ இதழில் படித்தேன். அன்றிலிருந்து amlopres மாத்திரை உண்பதை நிறுத்திவிட்டுக் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு வெங்காயத்தையும் சிறிது மிளகுத் தூளைத் தேனில் குழப்பியும் உண்டுவந்தேன்.

அத்துடன் பேரீச்சம்பழம் இரண்டு சுளைகளையும், மூன்று பாதாம் பருப்புகளையும் உண்டுவந்தேன். அவ்வப்போது அருகிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தும் வந்தேன். ரத்த அழுத்தம் அக்டோபரில் 120/80. நவம்பரில் 150/90, டிசம்பரில் 160/90 என உள்ளது. இந்த நிலையில் தங்களின் மேலான ஆலோசனையை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- தி. ஆறுமுகம், திருநெல்வேலி.

மக்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்துத் தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பரவி வருகின்றன. தகுதியற்றவர்கள் தரும் அத்தகையக் குறிப்புகளால் பொதுமக்கள் குழப்பம் அடைவதும், பயம், பதற்றம் அடைவதுமான ஆரோக்கியமற்ற சூழல் அதிகரித்துவருகிறது. இந்த வரிசையில் ரத்த அழுத்தம் குறித்து நீங்கள் படித்தத் தகவலும் தவறானதே! அதை நம்பி நீங்கள் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டீர்கள். அதன் விளைவால்தான் உங்களுக்கு இப்போது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

என்ன காரணம்?

ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது. பரம்பரை, உடற்பருமன், முதுமை, முறையற்ற உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், அட்ரீனல், தைராய்டு கோளாறு போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவுப் பழக்கமும் மன அழுத்தமுமே இதற்கு முக்கியக் காரணங்கள். துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், செயற்கை உணவு வகைகள் எனக் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாலும், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவரையும் மன அழுத்தம் பாதிப்பதாலும். உங்களைப் போல் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது.

அதிகரிப்பது ஏன்?

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேற்சொன்ன காரணங்கள் இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கலை ஏற்படுத்திவிட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

பாதிப்புகள் என்ன?

ரத்த அழுத்த நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுக்கத் தவறினால், இதயம், மூளை, சிறுநீரகம், கண் போன்ற பல உறுப்புகள் பாதிக்கப்படும். அந்த பாதிப்புகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருந்து, திடீரென்று வெளிக்காட்டும். இதனால்தான், இந்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி’ எனும் அடைமொழியுடன் அழைக்கிறார்கள் மருத்துவர்கள்.

என்ன சிகிச்சை?

நவீன மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. அதனால், இந்த நோய் குறித்து அதிகம் அச்சப்படத் தேவையில்லை. சுய மருத்துவத்தைத் தவிருங்கள்.

உங்கள் குடும்ப மருத்துவரின் நேரடி ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே சாப்பிட்ட மாத்திரையையோ, வேறு புதிய மாத்திரையையோ சாப்பிட்டு உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். முறையான இடைவெளிகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியது முக்கியம். அப்போதுதான் ரத்த அழுத்த நோயால் ஏற்படுகிற பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

இவையும் முக்கியம்!

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாத்திரைகளை மட்டும் நம்பிப் பயனில்லை. வாழ்க்கைமுறை மாற்றங்களும் அவசியம்.

நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும். உப்பு நிறைந்த உணவுவைத் தவிருங்கள்.

எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவை அதிகப்படுத்துங்கள்.

பழங்களையும் காய்கறிகளையும் தேவைக்குச் சாப்பிடுங்கள்.

நொறுக்குத்தீனிகளைத் தவிருங்கள்.

உடல் எடையைப் பேணுங்கள்.

தினமும் நடைப்பயிற்சி அவசியம்.

தியானம், யோகா போன்றவையும் உதவும்.

புகையும் மதுவும் வேண்டவே வேண்டாம்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்