ச
மீபத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் ‘என்ன காரணத்துக்காக மருத்துவரைப் பார்க்க வந்துள்ளீர்கள்’ என்று கேட்டதற்குப் பதில் சொல்ல மிகவும் கூச்சப்பட்டார். அவரது தாய்தான், தனது மகள் இன்னும் தினசரி தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதாகவும், அதனால் சிறுவயதிலிருந்தே ஒரு நாள் இரவுகூட உறவினர்கள் வீட்டில் தங்குவதில்லை என்றும் கூறினார்.
ஆம்னி பேருந்தில் இரவில் பயணிக்கும்போது இயற்கை உபாதைகளுக்காக பேருந்தை நிறுத்தச் சொல்லவே கூச்சப்படும் இந்தச் சமூகத்தில், தினமும் படுக்கையை நனைப்பது, அந்தப் பதின்பருவச் சிறுமியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்?
தூக்கம் தொடர்பான பிரச்சினை
தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நோய்க்கு ‘நாக்டியூர்னல் எனுரசிஸ்’ (Nocturnal Enuresis) என்று பெயர். நமக்குச் சாதகமாகவே நாம் காரணங்களைக் கூறிக்கொண்டு நாட்களைக் கடத்தும் நோய் வகைகளில் இதுவும் ஒன்று. ஏனென்றால், ‘தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான், போகப்போகச் சரியாகிவிடும்’ என்று உறவினர்களோ, ‘உங்கப்பனுக்கே பதினாறு வயசு வரைக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது’ என்று பாட்டிமார்களோ கூறிவிடுவார்கள்.
பயப்படும் அளவுக்கு, இது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக தூக்கத்தின் போது ‘என்.ஆர்.இ.எம்’ (நான் ரேப்பிட் ஐ மூவ்மெண்ட் – NREM) என்னும் தூக்க நிலையில் ஏற்படும் பிரச்சினையாகும்.
வயது வரம்பு உண்டா?
குழந்தைகள் பிறந்ததிலிருந்து தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது இயல்புதான். பெரும்பாலான குழந்தைகளுக்கு 5 வயதுக்குள் தூக்கத்தின்போதும் சிறுநீர் பையானது மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சில குழந்தைகள் 5 வயதாகியும் அவ்வப்போது சிறுநீர் கழிப்பதுகூட சாதாரணமான ஒன்றுதான்.
ஆனால் ஒரு குழந்தை 5 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம், பல மாதங்களாகத் தூக்கத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறது என்றால் அது நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கு நரம்பு மற்றும் மனநல ரீதியான காரணங்கள் இருக்கலாம். சில குழந்தைகள் சிறுநீர்க் கழிப்பதில் கட்டுப்பாடு பெற்ற பின்பும், சில வருடங்கள் கழித்துகூட மீண்டும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குப் பெரும்பாலும் மனநல ரீதியான காரணங்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.
என்ன பாதிப்பு?
எளிதில் குணப்படுத்தக்கூடிய இந்த நோயைக் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டால், குழந்தைகள் இதனாலேயே மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். 8 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் பிறரால் கேலி செய்யப்படுதல், அவமான உணர்வு போன்றவற்றால் மன அழுத்தத்துக்கும், தன்னம்பிக்கை இழப்புக்கும் ஆளாகலாம். எனவே இதன் பாதிப்புகளைக் குழந்தைகள் உணர்வதற்கு முன்பே சிகிச்சை செய்து குணப்படுத்திவிடுவது நல்லது.
பெரும்பாலான குழந்தைகள் தூங்க ஆரம்பித்த முதல் ஓரிரு மணி நேரத்துக்குள்ளாகவே சிறுநீர்க் கழித்துவிடுவார்கள். இதனுடன் சேர்த்து தூக்கத்தில் பேசுவது, அலறுவது, நடப்பது போன்ற மற்ற தூக்க வியாதிகளும் சிலருக்குச் சேர்ந்து காணப்படலாம்.
என்ன சிகிச்சை?
மனநலம் அல்லது உடல் சார்ந்த பிரச்சினைகளால் இந்த நோய் ஏற்படலாம் (பார்க்க பெட்டிச் செய்தி). ஆக, முதலில் என்ன காரணம் என்று கண்டறியப்பட்டு அது சரி செய்யப்பட வேண்டும். குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்துவதைக் குறைப்பது மற்றும் படுக்கைக்குச் செல்லும்முன் மற்றும் தூங்கியபின் ஒரு மணி நேரம் கழித்து எழுப்பி சிறுநீர்க் கழிக்கச் சொல்வது சிலருக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
சமீபத்தில் 45 வயது பெண் ஒருவர் பிறந்ததிலிருந்து இந்த பாதிப்புக்குள்ளாகித் தற்போதுதான் முதன்முதலில் சிகிச்சைக்கு வந்திருந்தார். மாத்திரை எடுத்துக்கொண்டு, முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு ‘இந்த அரை மாத்திரையை முன்பே சாப்பிட்டிருந்தால் என் அரை ஆயுட்காலத்தில் இத்தனை அவமானங்களைச் சந்தித்ததைத் தவிர்த்திருப்பேனே’ என ஆதங்கப்பட்டார். சிறுவயதில் ஏற்படும் பாதிப்பு பெரியவர்களாகும் வரை தொடர வாய்ப்புள்ளதால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாத்திரைகள் 80 சதவீதம்வரை நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். இத்தனை எளிதாகச் சரிசெய்யக்கூடிய பிரச்சினையை, காலம் தாழ்த்துவதால் மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது!
காரணங்கள்
மனநலப் பிரச்சினைகள்
திடீரென்று பெற்றோர்களைப் பிரிவது அல்லது இழப்பது
தம்பி / தங்கையின் பிறப்புக்குப் பின்பு, தான் சரிவர கவனிக்கப்படவில்லை என்ற ஏக்கம்
பள்ளி சார்ந்த பிரச்சினைகள்
மன அழுத்தம் / பதற்ற நோய்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது
பெற்றோரிடையே அடிக்கடி ஏற்படும் குடும்ப வன்முறைகளைப் பார்த்து வளர்தல்
அதீதக் கண்டிப்பு அல்லது செல்லம்
மனவளர்ச்சி குறைபாடு மற்றும் அதீத துறுதுறுப்புள்ள குழந்தைகள்
உடல் சார்ந்த பிரச்சினைகள்
சிறுநீர்க் கிருமித் தொற்றுகள்
தண்டுவட நரம்புப் பிரச்சினை
சிறுநீரக மண்டலத்தில் உள்ள பிறவிக் குறைபாடுகள்
வலிப்பு நோய்
நீரிழிவு நோய்
கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago