ஒ
ரு மருந்து ஆராய்ச்சியாளரோ, மருந்து நிறுவனமோ தமது புதிய மருந்தை, குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்களுக்குக் கொடுத்துச் சிகிச்சையளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் தேவை.
பொதுவாக இந்தச் சோதனைகளைச் செய்வதற்கு நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு குழுவினருக்கு நிஜமான மருந்தும் இன்னொரு குழுவினருக்கு டம்மி மருந்தும் அளிக்கப்படும். இரண்டு குழுவினருக்கும் குறிப்பிட்ட மருந்து அல்லது சிகிச்சையின் பலன்களும் பக்க விளைவுகளும் சொல்லப்படும். இந்தச் சோதனை நான்கு முதல் ஆறு வாரங்கள்வரை நடத்தப்படும். மருந்துகளின் பலன்கள், பக்க விளைவுகளைப் பார்ப்பதற்கான சோதனை இது.
பரிசோதனைகள்
மருந்துகள், சிகிச்சைகளை நோயாளிகள் மீது பரிசோதனை செய்வதற்கு முன்னர் பல விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சோதிக்கப்படும் மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன், பக்க விளைவுகள் ஆகியவை அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் அவர்களின் சம்மதமும் தேவை. பரிசோதனையின் எந்த நிலையிலும் அவர்கள் அந்த நடைமுறையிலிருந்து வெளியேறுவதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு.
பரிசோதனைக்குள்ளாகப் போகும் நோயாளிகளில் சிலர் மருந்து கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே தங்கள் நிலை மேம்பட்டிருப்பதாகக் கூறக்கூடும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது குடும்ப மருத்துவரைப் பார்த்ததும் நலமடைந்துவிட்டதாக உணர்வதைப் போன்ற மனநிலை அது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிளேசிபோ எஃபெக்ட்’ என்கிறார்கள்.
மருத்துவம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் நினைக்கும் உணர்வு இது. மருந்தென்று சொல்லி வெறும் இனிப்பு உருண்டையை டம்மியாக ஒரு பிராண்டின் பெயரில் கொடுக்கும் போது சில நோயாளிகள் குணமாகி விட்டதாக உணர்வார்கள். மைக்ரேன் தலைவலிக்காகப் பயன்படுத்தப்படும் ‘மக்ஸால்ட்’ மாத்திரையின் பெயரில் டம்மி மாத்திரைகளை ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ராமி பர்ச்டீன், ஒரு குழுவினருக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்தார். அந்த மாத்திரை வேலை செய்ததாக அந்தக் குழுவிலிருந்த பலரும் சொன்னார்கள். இதன் மூலம் ஒரு மாத்திரையின் லேபிளும்கூட குண விளைவை உண்டாக்கும் என்பது கண்டறியப்பட்டது.
அதிக விலை குணமளிக்குமா?
சில நோயாளிகள் விலை மதிப்பான மாத்திரைகளை உண்டால் குணமாகி விடுவதாக உணர்கிறார்கள். மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மருத்துவர் டான் அரிலி, வலி நிவாரணி ஒன்றின் செயல்திறனை நோயாளிகளிடம் பரிசோதனை செய்தார். 41 நோயாளிகள் அடங்கிய ஒரு பிரிவினருக்கு 2.5 டாலர் விலையுள்ள மாத்திரைகளைக் கொடுத்தனர். இன்னொரு குழுவினருக்கு தள்ளுபடி விலையில் மிக மலிவானது என்று சொல்லி இன்னொரு குழுவினருக்குக் கொடுத்தனர்.
அவர்களிடமிருந்து வந்த முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன. ஏனெனில் மலிவான விலையென்று சொல்லிக் கொடுத்த அந்த மாத்திரைகளால் குறைவாகவே பலன் ஏற்பட்டதாக அந்தக் குழுவினர் கூறினர். நிஜ மதிப்பான 2.5 டாலர் விலையைக் கூறிக் கொடுக்கப்பட்ட மருந்தைச் சாப்பிட்டவர்கள் பிரமாதமான பலன்களைக் கொடுத்ததாகவும் கூறினார்கள். மருந்துகள் மட்டுமின்றி அழகு சாதனங்களிலும் அதிக விலை, கவர்ச்சிகரமான பேக்கிங் கொண்டவை அதிகமான பலன்களை அளிப்பதாக மக்கள் உணர்கின்றனர். இந்த உணர்வைத் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன.
மருந்துகள் தொடர்பான நல்லுணர்வுக்கு நேரெதிரான விளைவுகளும் மக்களிடம் ஏற்படுவதுண்டு. ஒரு மருந்தைச் சாப்பிடாமலேயே அது தொடர்பாகக் கூறப்பட்ட எதிர்மறை விளைவுகளை உணர்வதும் உண்டு. இந்த விளைவை மருத்துவர் வால்டர் கென்னடி ‘நோசிபோ’ என்கிறார். இந்த மருந்து சாப்பிட்டால் சிறு நமைச்சலோ வலியோ ஏற்படும் என்று சொன்னால்கூட டம்மி மருந்தைச் சாப்பிட்டவர் அதை உணர்வார்.
சேர்ந்தெடுப்பதே ‘நலம்!’
தொழில்முறை மருத்துவம் என்பது ஒரு அறிவியலாக, நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. ஒரு நோயாளியின் சமூக உளவியல் அம்சங்களைப் புரிந்துகொள்வது இன்னொரு புறம் என்பதை ‘பிளேசிபோ - நோசிபோ’ அம்சம் தெரிவிக்கிறது. முந்தையது, உடல் மட்டுமே தொடர்புடையது. அதன் மறுபக்கமோ மனதோடு தொடர்புடைய கலை. இதனால்தான் ஒரு நோயாளியின் நலம் என்பது மருத்துவரும் நோயாளியும் சேர்ந்தெடுக்கும் முடிவாக மாறுகிறது. அதனாலேயே அதற்கு ஒரு அறநெறிப் பரிமாணமும் சேர்கிறது.
இன்றைய நவீன மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாரும் இந்த சேர்ந்தெடுக்கும் முடிவு அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: ஷங்கர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago