நலம் தரும் நான்கெழுத்து 15: அதிக மகிழ்ச்சியும் துயரமே!

By டாக்டர் ஜி.ராமானுஜன்

வாழ்க்கை, ஒரு பியானோ போன்றது. கறுப்பு, வெள்ளைக் கட்டைகள் இரண்டுமே மாறிமாறி இசைத்தால்தான் இசை பிறக்கும். வெள்ளை கட்டை மகிழ்ச்சி, கறுப்புக் கட்டை சோகம்

- எஸ்ஸான்

இத்தொடரின் ஆரம்பத்தில், எப்படி எல்லா விஷயங்களிலுமே எதிரெதிர் துருவங்கள் உள்ளன, அதில் நடுநிலையிலிருந்து அதீத தூரம் உள்ள எந்தத் துருவத்தில் ஒருவர் இருந்தாலும் அது கேடுதான் என்று பார்த்தோம். மற்ற உணர்வுகளைப் போன்றே மகிழ்ச்சியும் துக்கமும் எதிரெதிர் துருவங்களில் உள்ளன. எப்படி அதீத துக்கம், மனச்சோர்வு நோயில் கொண்டுபோய் விட்டுவிடுகிறதோ, அதுபோல் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமானாலும் பாதிப்புதான்!

‘என்னது… மகிழ்ச்சியாக இருப்பது ஒரு குற்றமா?’ என நீங்கள் அதிர்ச்சியுடன் கேட்பது புரிகிறது. ஆம்! ‘மன எழுச்சி நோய்’ என்று தமிழிலும் ‘மேனியா’ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் பாதிப்பில், மிகையான மகிழ்ச்சியும் உற்சாகமுமே கேடாகின்றன.

மன எழுச்சியால் படைப்பூக்கம்

மன எழுச்சி என்னும் பாதிப்பில், அளவுக்கு அதிக தன்னம்பிக்கை, உற்சாகம், சுறுசுறுப்பு போன்றவை இருக்கும். இதெல்லாம் நல்ல விஷயங்கள்தானே என்கிறீர்களா? ரத்தத்தில் மிக முக்கியம், சர்க்கரை அளவு. ஆனால் அதுவே அதிகமானால் உயிருக்கே ஆபத்து வருகிறது இல்லையா? அதுபோன்றே மேற்சொன்னவையும் மிகுந்தால் நோயாகும்.

ஆரம்பத்தில் இந்த மன எழுச்சி பயனுள்ளதாக இருக்கும். மன எழுச்சி மிதமாக இருக்கும் போது பல்வேறு எண்ணங்கள் உதிக்கும். அதைச் செயல்படுத்தும் உற்சாகமும் உடல் வலிமையும் பிறக்கும். இசை, ஓவியம், இலக்கியம் போன்ற கலைகளில் ஈடுபடும் கலைஞர்களில் சிலர், இந்த மிதமான மன எழுச்சியின்போது படைப்பூக்கத்தின் உச்சத்தை எட்டியிருக்கிறார்கள்.

புகழ்பெற்ற ஓவியர் வான் கா, எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, கவிஞர் சில்வியா பிளாத் போன்ற படைப்பாளிகள் பலர், அதீத மன எழுச்சியில் பல படைப்புக்களைப் படைத்துள்ளனர். அதேபோல் தொழில்முனைவோர், விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவர்களுக்கும் இந்நிலை பயனுள்ளதாக இருக்கும்.

குறையும் பய உணர்வு

ஆனால் மன எழுச்சி அதீதமானால், சீராகச் சென்றுகொண்டிருந்த சிந்தனை ஓட்டம், மைக்கேல் ஷூமாக்கர் ஓட்டும் பந்தயக் கார்போல் அதிவேகமாகப் பறக்க ஆரம்பித்து, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். பல செயல்களைத் தொடங்கி எதையும் முடிக்க முடியாமல் போய்விடும்.

அதீத உற்சாகத்தால் ‘வளவள’ என்று அதிகமாகப் பேசுவார்கள். மணிரத்னம் பட வசனம் போல் பேச வேண்டிய விஷயத்தை, ‘மனோகரா’ வசனம்போல் பக்கம் பக்கமாகப் பேசுவார்கள். முன்பின் தெரியாதவர்களிடம்கூட மிகவும் பழகியது போல் பேச ஆரம்பிப்பார்கள். இது அதிகமாகும்போது பல பிரச்சினைகளை உருவாக்கத் தொடங்கும்.

மேலும் அதீதத் தன்னம்பிக்கையால் பயம் என்னும் தேவையான உணர்வு குறைந்துவிடும். முட்டாள்தனமான, ஆபத்தான செயல்களில் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கிவிடுவார்கள். அதிவேகமாக வண்டி ஓட்டுவது, வகைதொகையில்லாமல் கடன் வாங்குவது, ஐம்பது நாளில் அம்பானி ஆவதற்குத் தொழில் தொடங்குகிறேன் எனச் செலவழிப்பது எனத் தங்களுக்கே ஊறுவிளைக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள். வேறு சிலர் அதீதத் தன்னம்பிக்கையால் திரைப்படம் எடுப்பது, கவிதை எழுதுவது எனப் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடத் தொடங்குவார்கள்!

‘துருவ’ மனநிலை

நகைச்சுவையாகச் சொல்வார்கள் ‘சிரிப்பு மிகச் சிறந்த சிகிச்சை. ஆனால் அளவுக்கு அதிகமானால் அதற்கே சிகிச்சை தேவைப்படும்’ என்று. அதுபோல, நோயாளிகள் மகிழ்ச்சியாக இருந்தால் மனநல மருத்துவர்கள் மட்டுமே வருத்தப்படுவார்கள் என்றும் கூறுவார்கள். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் உற்சாகமும் வேகமும் அதிகமாகித் தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் உடலும் பாதிக்கப்பட்டு சிலர் அவதிப்படுவதுண்டு.

எவ்வளவு பிரகாசமான வெளிச்சமான தினமாக இருந்தாலும் இருட்டித்தான் ஆக வேண்டும். அதுபோல் மிகை உற்சாக நிலையும் சில நாட்களுக்குத்தான். திடீரென உற்சாகம் குன்றி மனச்சோர்வு நிலையை எட்டி எல்லாமே இருட்டாகத் தோன்றத் தொடங்கிவிடும். இதுவரை இருந்த உற்சாகமும் சுறுசுறுப்பும் ஜன்னல் வழியே வெளியேறியதுபோல் காணாமல் போய்விடும். அப்போது மன எழுச்சியால் செய்த தவறுகள் பூதாகரமாகத் தெரியத் தொடங்கும். இதுபோல் எழுச்சியும் சோர்வும் மாறி மாறி எதிரெதிர் துருவத்துக்குச் செல்லும் இந்நோய்க்கு ‘இரு துருவ மனநிலை’ என்று பெயர். ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ என்றால் பலருக்கும் புரியும்.

மின்சார விளக்கு வோல்டேஜ் அதிகமானால் பிரகாசமாகவும், கம்மியானால் மங்கியும் எரிவதுபோல் மாறி மாறி ஒளிரும். அதுபோன்ற நோய் இது. சமநிலைச் சீர்குலைவு என்பதற்கான மிகச் சரியான உதாரணம் மேற்கண்ட நோய்தான்.

கொந்தளிப்பில்லாத கடல், நல்ல மாலுமியை உருவாக்காது என்பார்கள். அதனால், ஓரளவுக்குக் கொந்தளிப்பு தேவைதான். ஆனால் அதிகமானால் டைட்டானிக் கப்பலாக இருந்தாலும் மூழ்கிவிடும்.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

31 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்