நான் கடந்த ஒரு வருடமாக சளி, மூச்சுவிடுதல் பிரச்சினையால் அவதிப்படுகிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனக்கு ஆஸ்துமா, அலர்ஜி இருக்கின்றன எனக் கூறி மூன்று மாதம் சிகிச்சை எடுக்கச் சொன்னார் மருத்துவர். நானும் எடுத்தேன்.
ஆனால், சளி குறைந்தபாடில்லை. பிறகு வேறொரு மருத்துவரிடம் காட்டியதற்கு எந்த நோயும் இல்லை, நுரையீரலில் அதிக சளி உள்ளதாகக் கூறுகிறார். இவரிடம் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை எடுக்கிறேன். ஆனால், பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. மிகுந்த மன உளைச்சலும் குழப்பமும்தான் நாளுக்கு நாள் கூடுகிறது. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
- மு. மாரி, மின்னஞ்சல்
உங்களுக்கு அடிப்படையாக ‘அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமைப் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது. அதனால் ஆஸ்துமா வருகிறது. பரம்பரையாகவும் இது வரக்கூடும். பொதுவாக உணவு, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருவதுண்டு.
நுரையீரலில் நோய்த்தொற்று, சைனஸ் தொல்லை என ஏதாவது ஒரு தொற்று இருந்தால், அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.
இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் என்பது போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவுக்கு வழி வகுக்கும்.
கவலை கூடாது
உங்களுக்குத் தற்போது மிகுந்த மன உளைச்சலும் குழப்பமும் இருப்பதாகச் சொல்கிறீர்கள். இதனாலேயே இப்போது நீங்கள் எடுத்துவரும் சிகிச்சைகள் பலன் அளிக்காமல் போவதற்கான சாத்தியம் உள்ளது. எந்த ஒரு நோய்க்கும் கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.
‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் உங்கள் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சைமுறைகளை அமைத்துக்கொள்வது நல்லது. மருந்து மாத்திரைகளுடன், ‘இன்ஹேலர்’, ‘நெபுலைசர்’ சிகிச்சைகள் நல்ல பலன் கொடுக்கும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளுடன் அதை வரவிடாமல் தவிர்க்கும் மருந்துகளையும் அவசியம் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதுதான் முக்கியம்.
ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்துவதற்கே வழிகள் உள்ளன. முக்கியமாக, உங்களுக்கு எது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதைத் தவிர்த்தால் மட்டுமே உங்கள் சுவாசப் பிரச்சினை கட்டுக்குள் வரும். குறிப்பாக, நீங்கள் புழங்கும் எல்லா இடங்களும் வெகு சுத்தமாக இருக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீங்கள் புகைபிடிக்காதவராக இருந்தால், புகைபிடிப்பவர்களுக்கு அருகில் செல்லக் கூடாது. விறகு அடுப்பும் ஆகாது. பஞ்சுத் தூசு, ரைஸ் மில் தூசு, மாவு மில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை உங்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே, பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக் கூடாது. இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் ஆகாது. பூனை, கோழி, நாய், புறா, கிளி போன்ற சில பிராணிகளின் இறகு, ரோமம், வாசனை, கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு தருபவை.
ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றைக் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்லும்போது முகமூடி அணிந்துகொள்ள வேண்டும்.
படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். சுழல்விசிறிக்கு நேர் கீழே படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்தி, கொசுவிரட்டி, சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago