ஹெச்.ஐ.வி. வைரங்கள்!

By ஷங்கர்

டிசம்பர் 1: உலக எய்ட்ஸ் தினம்

ந்த நூற்றாண்டிலும் தீர்வு காணவியலாத சிக்கலான நோய்களில் ஒன்று, எய்ட்ஸ். ஆன்ட்டி ரெட்ரோவைரல் தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால் ஹெச்.ஐ.வி. பாதிப்பு கொண்டவர்கள், இன்றைக்குத் தங்கள் வாழ்நாட்களை மற்றவர்களைப் போலவே நீட்டித்துக்கொள்ள முடிகிறது. மருத்துவத் துறையில் இந்த நோய்க்கான தீர்வைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அவ்வப்போது அதில் சில முன்னேற்றங்களும் நிகழ்ந்துவருகின்றன. ஆனால் என்னதான் மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், தற்போது எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் எதிர்காலத்தின் மீதான தனது தீவிர நம்பிக்கையின் வாயிலாகவே வாழ்க்கையை எதிர்கொள்கிறார். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி உலகம் முழுவதும் ‘உலக எய்ட்ஸ் நாள்’ கடைப்பிடிக்கப்படும் வேளையில், தங்களது நம்பிக்கையால் இந்த நோயைத் துணிவுடன் எதிர்கொண்ட பிரபலங்கள் சிலரைப் பற்றி இங்கே…

26 ஆண்டுகளாக ஓடும் ‘மேஜிக்!’

அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட சாம்பியன் மேஜிக் ஜான்சனுக்கு அப்போது 32 வயதுதான் ஆனது. புகழின் உச்சியிலிருந்த காலகட்டத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி. வைரஸ், தன்னையும் பாதித்திருப்பதாக அவர் அறிவித்தார். கிட்டத்தட்ட ஒருவரது மரண அறிவிப்பாகவே அப்போது அவருடைய அறிவிப்பு கருதப்பட்டது.

ஆனால், எய்ட்ஸ் சிகிச்சையில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றத்தால், இன்றும் விளையாட்டு நிபுணர், வர்த்தகர், எய்ட்ஸ் விழிப்புணர்வுச் செயல்பாட்டாளரென பல பங்களிப்புகளை வெற்றிகரமாகச் செய்துவருகிறார் மேஜிக் ஜான்சன்.

ஹெச்.ஐ.வி.க்கு எதிரான கூட்டு வைரல் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில், மேஜிக் ஜான்சன் போன்ற ஒரு பிரபலம் பகிரங்கமாக நோய் தாக்கியதை ஒப்புக்கொண்டு, அதற்கு எதிராகப் போராடத் தொடங்கியது தீரச்செயல்தான் என்கிறார் எய்ட்ஸ் ஆய்வாளர், மருத்துவர் அலெக்சாண்ட்ரா லெவின்.

1996-ம் ஆண்டில்தான் ஹெச்.ஐ.வி.க்கு எதிரான கூட்டுமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் அமெரிக்காவில் எய்ட்ஸ் மரண விகிதம் 80 சதவீதமாகக் குறைந்தது. 1991-ல் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜான்சன் பேசியபோது, ‘பாதுகாப்பான உடலுறவின் அவசியத்தை மக்கள், குறிப்பாக இளைஞர்கள் உணரவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இன்று ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஹெச்.ஐ.வி. தாக்காத ஒரு நபரைப் போலவே சராசரி ஆயுளைக் கழிக்கக்கூடிய அளவுக்குக் கூட்டுமருந்து சிகிச்சை வளர்ந்துள்ளது. தன்னை மரணத்தை நோக்கி அழைத்த ஒரு நோய்க்கு எதிராகத் தன்னை மட்டும் ஜான்சன் தற்காத்துக் கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க அரசு ஆகியவற்றுடன் இணைந்து ‘ஹெச்.ஐ.வி. ஹெல்த் அட்வகேட்’ என்கிற பொறுப்பை ஏற்றார். அமெரிக்காவில் நிறைய மக்களை எய்ட்ஸ் மரணங்களிலிருந்து மேஜிக் ஜான்சனின் செயல்பாடுகள் காப்பாற்றியுள்ளதாக அவரைப் பாராட்டுகிறார் மருத்துவர் லெவின்.

நோயால் வகைப்படுத்தப்பட்டவர்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகளவில் தாக்கம் ஏற்படுத்திய சிந்தனையாளரான மிஷெல் ஃபூக்கோ, மனித உறவுகளில் அதிகாரம் செலுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ந்தவர்.

சிறை, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மனநல சிகிச்சை மையங்களுக்கு இடையிலான ஒற்றுமையை விளக்கியவர். மாணவர்களும், கைதிகளும், நோயாளிகளும் எப்படியெல்லாம் கண்காணிக்கவும் தனிமைப்படுத்தப்படவும் வகைப்படுத்தப்படவும் ஒழுங்குபடுத்தப்படவும் படுகிறார்கள் என்பதை ஆராய்ந்தவர். தன்பாலுறவாளர்கள், விளிம்பு நிலை மக்கள் உரிமைகளுக்கான செயல்பாடுகளிலும் அவர் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

‘மருத்துவர் எங்கே பிறக்கிறாரோ, அங்கே நோயும் பிறக்கிறது’ என்பது அவரது புகழ்பெற்ற வாசகம். 1983-ம் ஆண்டு கோடையில் தலைவலி, காய்ச்சல், இருமல், உடல் எடைக்குறைவு ஆகிய அறிகுறிகள் தோன்றின. ஆனால் 1984-ல் அவரது பிரச்சினைகள் தீவிரமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு எய்ட்ஸ் நோய் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அவருக்குத் தரப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு, அவரது உடல் ஆரம்பத்தில் நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது. அவரும் கொலேஜ் த பிரான்ஸில் மாணவர்களிடம் சில உரைகளை வழங்கத் தயாராக இருந்தார். ஆனால், உலகத்துக்கு எய்ட்ஸ் என்ற சொல் அறிமுகமாகி சில ஆண்டுகளிலேயே ஹெச்.ஐ.வி. தாக்குதலில் இறந்த முதல் பிரெஞ்சுப் பிரபலமாக அவர் மாறினார். அவரது இணையான டேனியல் தெஃபெர், பூக்கோவின் நினைவாக AIDES என்ற அறக்கட்டளை அமைப்பைத் தொடங்கினார்.

தோன்றி மறைந்த எரிநட்சத்திரம்

உலகளவில் போற்றப்பட்ட ராக் நட்சத்திரங்களில் ஒருவரும் மைக்கேல் ஜாக்சனைப் போல மிகப் பெரும் உல்லாசகராகவும் அறியப்பட்ட பிரெடி மெர்குரி, 1991-ல் எய்ட்ஸ் நோய்க்கு பலியானார். அதற்கு முன்பே பல மாதங்கள் அவர் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்திருந்தார். இந்நிலையில் அந்த ஆண்டு நவம்பர் 23-ல் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ‘எனக்கு எய்ட்ஸ் இருப்பதையும் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் என்பதையும் உறுதிசெய்ய விரும்புகிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்களின் அந்தரங்கம் கருதி இந்தச் செய்தியை இதுவரை ரகசியமாக வைத்திருந்தேன். எனது நண்பர்கள், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் உண்மையை அறிய வேண்டிய தருணம் இது. இந்த பயங்கர நோய்க்கு எதிராக அனைவரும் போராடுவார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்பதே அந்த அறிக்கை.

இந்த அறிக்கை வெளிவந்த அடுத்த நாள் அவர் மரணமடைந்தார். எய்ட்ஸ் நோயின் வரலாற்றிலும் பிரெடி மெர்குரி என்பவரின் மரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தன்பாலுறவாளர் என்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்டவர் அவர்.

பிரெடி மெர்குரியின் மரணத்தை அடுத்து அவரது குயின் இசைக்குழு சகாக்கள் ‘தி மெர்குரி பீனிக்ஸ்’ அறக்கட்டளையைத் தொடங்கி அவரது நினைவாக எய்ட்ஸ் நோய் ஆய்வுக்கான நிதி திரட்டலுக்கான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். லண்டன் வெம்ப்லி மைதானத்தில் 72 ஆயிரம் பார்வையாளர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சி வாயிலாகக் கோடிக்கணக்கான பவுண்டுகள் வசூலாகி, அவை பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டன. எலிசபெத் டெய்லர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு 76 நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நூறு கோடி மக்களிடம் இசையும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் சென்று சேர்ந்தது.

விழுங்க இயலாத மூன்றெழுத்து

ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நான்காண்டுகளுக்குப் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகரும் காதல் மன்னனுமான சார்லி ஷீன் தனது 50 வயதில் 2015-ம் ஆண்டு நவம்பரில் தனது நோயைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். தற்போது எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுப் பிரசாரகராகவும் பரபரப்பான நடிகராகவும் மருந்துகளுடன் வாழ்வை உற்சாகமாக அவர் தொடர்கிறார்.

“எனக்கு எய்ட்ஸ் உள்ளதென்று கண்டறியப்பட்ட நாளில், நான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளத்தான் நினைத்தேன். ஆனால், என்னுடன் என் அம்மா இருந்தார். அவருக்கு முன்னால் அந்தக் காரியத்தை என்னால் செய்ய இயலாது. அப்போதுதான் ஒரு கையளவு மாத்திரைகளைக் கொடுத்தார்கள். ‘இப்போது நீங்கள் வீட்டுக்குப் போகலாம். பிரமாதமாக வாழப் போகிறீர்கள்’ என்றும் சொல்லப்பட்டது. அந்த நாளில் எனக்கு மூளையில் புற்றுநோய் என்றோ வயிற்றில் புற்றுநோய் என்றோ சொல்லப்பட்டிருந்தால், உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருந்திருக்க முடியாது” என்று நம்பிக்கை தருகிறார் சார்லி ஷீன்.

எய்ட்ஸ் நோய்க்குத் தற்போது கிடைக்கும் மருந்துகளுக்கும் நன்றி சொல்கிறார். புட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் ஆய்வின் ஓர் அங்கமாகவும் சார்லி ஷீன் தற்போது விளங்குகிறார்.

இறுதிவரை போராட்டம்

விம்பிள்டன்தான் டென்னிஸ் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை உச்சபட்ச கவுரவம். 1975-ல் விம்பிள்டன் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீரர், ஆர்தர் ஆஷ். விம்பிள்டன் சாம்பியன், ஹைதி அகதிகளின் உரிமைகளுக்காக அமெரிக்க அரசை எதிர்த்துப் போராடியவர் என்பதைத் தாண்டி எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கால வரலாற்றிலும் அவர் பெயர் உள்ளது.

1983-ல் அவருக்கு நடந்த அறுவை சிகிச்சை ஒன்றுக்காக ரத்தப் பரிமாற்றம் செய்யப்பட்டபோது ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு 1988-ல் கண்டறியப்பட்டது. 1992 வரை இந்த நோய்த் தாக்குதல் தொடர்பான தகவல்களை அந்தரங்கமாக வைத்திருந்த பின்னர் பகிரங்கப்படுத்தினார். எய்ட்ஸ் நோய் தொடர்பான அறக்கட்டளை ஒன்றை நிறுவி 32 கோடி ரூபாய்வரை நிதி திரட்டினார். 1993-ல் மரணமடைந்த ஆர்தர் ஆஷின் மரணத்துடன் எய்ட்ஸ் குறித்த இன்னொரு தப்பர்த்தமும் களையப்பட்டது. தன் பாலுறவு, பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவற்றோடு பரிசோதிக்கப்படாத ரத்தப் பரிமாற்றம் மூலமும் எய்ட்ஸ் தொற்றலாம் என்பதுதான் அது!

இந்த ஆண்டுக்கான எய்ட்ஸ் தினக் கருப்பொருள்: ‘வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வின் மூலம் விழிப்புணர்வை அதிகரித்தல். வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றிய எய்ட்ஸ் விழிப்புணர்வு விடிவெள்ளிகளுக்கு வணக்கம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்