நலம் நலமறிய ஆவல் 10: அமிலச் சுரப்பால் அதிகப் பசியா?

By கு.கணேசன்

என் வயது 21. அதிகப் பசி, வேகமான செரிமானம், அடிக்கடி சாப்பிடத் தோன்றுதல், சாப்பிடத் தாமதமானால் ஒரு பக்கத் தலைவலி எனப் பல தொல்லைகள் எனக்கு உள்ளன. அடிக்கடி வயிறு புண்ணாகிவிடுகிறது. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், பெருங்குடல் புண், அடிக்கடி மலம் கழித்தல், பசித்தவுடன் உடல் நடுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. நவீன மருத்துவத்தில் அமிலம் சுரப்பதைக் குறைக்க மருந்துகள் உள்ளனவா?

- ஏ. ஜெனிஃபர், மின்னஞ்சல்.

உங்கள் அறிகுறிகளைக் கவனித்தால் இரண்டு வகை பாதிப்புகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஒன்று, இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி, அங்கு புண் ஏற்பட்டிருக்கலாம். அடுத்து உங்கள் பெருங்குடலில் அழற்சியாகி புண் உண்டாகி இருக்கலாம். இந்த இரண்டும் எப்படி ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த இரண்டுக்கும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டும் தீர்வாகாது. உங்கள் வாழ்க்கைமுறை, உணவுமுறை பக்குவங்களும் முக்கியம்.

இரைப்பைப் புண்

இது உணவுக்குழலின் இறுதிப் பகுதி. இரைப்பை, முன்சிறுகுடல், மெக்கலின், பக்கப்பை ஆகிய நான்கு இடங்களில் வரும். இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பையிலும் முன்சிறுகுடலிலும் உள்ள சிலேட்டுமப் படலம் சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.

இரைப்பைப் புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி காரணமாக இரைப்பைப் புண் ஏற்படுவதுதான் இப்போது அதிகம். அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும். அதைக் குடிப்போரின் உடலில் பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது இரைப்பைப் புண்ணை உண்டாக்கும்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல், காரம் நிறைந்த உணவு, புளிப்பு மிகுந்த உணவு, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் வறுத்த உணவு போன்றவற்றை அதிக அளவில் உண்பது, குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகப்படியாகக் குடிப்பது, ஆஸ்துமா, மூட்டுவலிகளுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், தலைவலிக்குத் தரப்படும் ஆஸ்பிரின், அனால்ஜின், இபுபுரூஃபன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றால் பெப்டிக் அல்சர் வருகிறது.

உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, சூடாகச் சாப்பிடுவது, அவசர அவசரமாகச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப் பழக்கங்களாலும் இவ்வாறு புண் ஏற்படலாம். எலுமிச்சை, நெல்லிகாய், கடுக்காய் போன்ற புளிப்புச் சுவை உடையவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும் இந்த நோய் ஏற்படும். சில மூலிகை மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதும் இந்த நோய்க்கு வழி அமைக்கும்.

இவற்றுடன் ‘ஜோலிங்கர் எலிசன் நோய்த்தொகுப்பு’ (Zolinger Ellison Syndrome) காரணமாகவும் பெப்டிக் அல்சர் வருகிறது. சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் இது ஏற்படுகிறது. குறிப்பாக, உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்துகொண்டவர்களின் வாரிசுகளுக்கு இந்நோய் ஏற்பட மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிக சாத்தியம் உள்ளது. ‘ஓ’ ரத்தப்பிரிவு உள்ளோருக்கு இயற்கையிலேயே இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாக இருப்பதால், இவர்களுக்குச் சிறுவயதிலேயே இது வந்துவிடுகிறது. மனக்கவலை, மனஉளைச்சல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், கோபம், பரபரப்பு, ஓய்வில்லாதது போன்ற காரணங்களாலும் இது பலரையும் பாதிக்கிறது.

‘என்டோஸ்கோபி பரிசோதனை’ (Gastro endoscopy) மூலமும், ரத்தப் பரிசோதனையில் ஹெச்.பைலோரி கிருமிக்கு எதிரணுக்கள் (Antibody) உள்ளனவா என்பதைக் கண்டறிவதன் மூலமும் உங்கள் பாதிப்பை உறுதிசெய்து, அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தற்போது அமிலச்சுரப்பு அதிகமாவதன் வழியாக ஏற்படும் அல்சருக்கு முழுமையான தீர்வு தருவதற்கு நவீன மருந்துகள் நிறைய உள்ளன. ஆனால், உங்களுக்கு எதனால் அடிக்கடி அல்சர் ஏற்படுகிறது என்ற காரணத்தைக் களைந்தால் மட்டுமே நோய் குணமாகும். அதற்கு உங்கள் உணவுமுறையையும் வாழ்க்கைமுறையையும் மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றிக்கொள்ளுங்கள்.

பெருங்குடல் அழற்சி

இந்த நோய் ஐபிஎஸ் (IBS), ஐபிடி (IBD) என்கிற இரு பிரச்சினைகளால் ஏற்படுவது வழக்கம். பாக்டீரியா தொற்று, தவறான உணவுப் பழக்கம், உணவு ஒவ்வாமை, கவலை, பயம், பதற்றம், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் காரணங்கள், ஹார்மோன் சுரப்பில் மாற்றம் போன்றவற்றால் இவை ஏற்படுகின்றன. ‘கொலோனோஸ்கோபி பரிசோதனை’ (Colonoscopy) மூலம் இவற்றை உறுதிசெய்யலாம்.

இவற்றுக்கு மாத்திரை மருந்துகளைத் தேடி மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்குவதைவிட, புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்ற வாழ்வியல் மாற்றம், நார்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிடுதல், செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும் கொழுப்பு உணவைத் தவிர்ப்பது, தயிர் போன்ற புரோபயாடிக் உணவைச் சாப்பிடுதல் என சரியான உணவுப் பழக்கத்தைக் கைகொள்ளுதல், மன அமைதிக்கு உதவும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவைதான் நல்ல தீர்வைத் தரும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்