விழிகள் ருசிக்கக் கூடாத ‘இனிப்பு!’

By டாக்டர் பெ.ரங்கநாதன்

மீபத்தில் 40 வயதுப் பெண்மணி ஒருவரின் கண்களைப் பரிசோதிக்க நேர்ந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர்தான் புதிதாகக் கண்ணாடி அணிந்ததாகவும், தற்போது கண்ணாடி அணிந்தாலும் பார்வை மங்கலாக இருப்பதாகவும் பதற்றதுடன் அவர் தெரிவித்தார்.

அவருடைய கண்ணாடியைப் பரிசோதித்தபோது, அதன் பவர் ஒரு மாதத்துக்கு முன் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது.

அவருடைய ரத்தத்தைப் பரிசோதித்தபோது, அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதும், ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சில வாரங்கள் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை அளித்த பிறகு மங்கலான கண் பார்வை சரியானது.

மங்கலான பார்வை ஏன்?

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது கண்ணில் உள்ள லென்ஸ் வீக்கமடையும். இதனால் கண் பார்வை மங்கலாகத் தெரியும். சர்க்கரை அளவு சரியாகும்போது பார்வை மங்கல் சரியாகிவிடும்.

சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே கண் கண்ணாடியை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சரியான கட்டுப்பாடு வரும் வரை காத்திருந்து மீண்டும் கண் பரிசோதனை செய்துகொண்டு கண்ணாடி மாற்றிக்கொள்ள வேண்டும். மங்கலான பார்வை மட்டும் என்றில்லை. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் பின்வரும் கண் நோய்களும் வரும் சாத்தியம் அதிகம்.

மேலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கண் நீர் சுரக்கும் ‘மெய்போமியன்’ சுரப்பி அடைத்துக்கொள்வதால், கண் வறட்சி (டிரை ஐ) உண்டாகி, கண் உறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்குக் கண்நீர் அழுத்த நோய் (குளுகோமா) வரவும் வாய்ப்புள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகள் வருடத்துக்கு ஒரு முறை கண்நீர் அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கண் புரை நோய்

முப்பது வயது பெண்மணி ஒருவர், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண் கூசுவதாகவும் பார்வை மங்கலாக இருப்பதாகவும் கூறினார். அவரைப் பரிசோதித்தபோது கண்ணில் புரை (கேடராக்ட்) இருப்பது கண்டறியப்பட்டது.

வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கண் புரை பாதிப்பு வருவதற்கு சாத்தியமுள்ளது. இதனால் பார்வை பாதிப்பு ஏற்படும். ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் கண் புரை பாதிப்பு விரைவில் நேராமல் கட்டுப்படுத்தலாம். அப்படியே வந்தாலும், கண் புரை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.

விழித்திரை பாதிப்பு

அதேபோல, 36 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு கண்ணில் பார்வை முழுவதும் குறைந்துவிட்டதாகவும், முழுவதும் இருட்டாகத் தெரிவதாகவும் என்னிடம் வந்தார்.

அவர் 16 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்காக மருந்து உட்கொள்கிறார். அவருடைய இரு கண்களிலும் முற்றிய நிலையில் நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு இருந்தது. அதில் ஒரு கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, கண்ணுக்குள் விட்ரியஸ் என்ற ஜெல் முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது.

ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது அது கண்ணில் உள்ள ரத்தக் குழாய்களைப் பாதித்து, கண் விழித்திரையில் ரத்தக் கசிவை உண்டாகும். இதனால் கண்ணின் விழித்திரை மைய நரம்பு வீக்கம் அடைந்து பார்வை பாதிக்கப்படும்.

ஆண்டுக்கு ஒரு முறை

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகிக் கண் விழித்திரை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியலாம். தேவைப்பட்டால் லேசர் சிகிச்சை, கண்ணுக்குள் ஆண்டி வெட்ஜெஃப் என்கிற ஊசியைப் போடுவதன் மூலம், பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் விழித்திரையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, கண்ணுக்குள் ரத்தக் கசிவை உண்டாக்கும். இதனால் ரத்தக் குழாய் மொட்டுகள், கண் விழித்திரையில் சதை வளர்ச்சி, கண் விழித்திரை நரம்புப் பிரிதல் என்று கண்ணுக்குள் ஒரு சிலந்திக் கூடு போல் பாதிப்பு ஏற்பட்டுப் பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

இந்த நிலைக்குச் சென்றால், கண் விழித்திரை அறுவைசிகிச்சை செய்து பார்வையைப் பாதுகாக்கலாம். வாழ்க்கை இனிமையாக இருக்க, ‘இனிப்பி’டம் இருந்து நம் கண்களைக் காத்துக்கொள்வோம்!

கண்கள் கவனத்துக்கு…

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் விழித்திரை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

சர்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை எப்போதுமே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம் அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் கட்டுப்பாடு தேவை.

தொடர்புக்கு: kpranganathan83@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்